ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

NEET ..அனிதா போன்ற குடிசை வாழ் மக்கள் 80 வருடங்கள் பின்னோக்கி தள்ளப்படுவார்கள்!

Vijay Bhaskarvijay  : மூன்று மாதம் முன்பு ஷேர் ஆட்டோவில் பயணம் செய்யும் போது டிரைவரிடம் பேசிக் கொண்டு வந்தேன்.
அந்த டிரைவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்.
அவருக்கு வயது முப்பது. அவர் படித்த படிப்பு பத்தாம் வகுப்புதான்.

அவர் தம்பி என்ன படித்திருக்கிறார். அவரும் பத்தாம் வகுப்புதான்.
இன்னொரு தங்கை இருக்கிறார். அவரும் பத்தாம் வரைதான் படித்திருக்கிறாராம்.
ஆக 2017 - 30 = 1987. அவர் அப்பா அம்மாவுக்கு 1986 யில் திருமணம் முடிந்திருக்கும். நினைத்துப் பாருங்கள்.
1986 யில் உலகம் எவ்வளவு முன்னேறின காலம். அந்த முன்னேறின சமயத்திலும் ஒரு தம்பதியினருக்கு கல்வியின் அவசியம் தெரியாமல் இருந்திருக்கிறது.
அப்படி தெரிந்தாலும் அதை எப்படி போதிக்க என்று தெரியாமல் இருந்திருக்கிறது.
அப்படி போதிக்க தெரிந்தாலும் அவர்கள் வீடு இருந்த சுற்றுச் சூழல், குழந்தைகள் மனம் அங்கிருந்து திசை திரும்பாமல் வளர்க்க தடையாய் இருந்திருக்கிலாம்.

சுற்றியுள்ள பலரும் படிக்காமல் பத்தாம் வகுப்புக் கூட முடிக்காமல் வேலைக்குப் போய், தண்ணி அடித்து இருக்கும் போது அந்தக் கலாச்சாரம் குழந்தைகளையும் தொற்றியிருக்கலாம்.
எனக்குத் தெரிந்த இன்னொரு மத்திம வயது ஆட்டோக்கார நண்பர் ஒருவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் இந்த சுற்றுச்சூழலை நினைத்து அதிகம் கவலை கொள்வேன் என்பார்.
தன் பையனையும் பெண்ணையும் பள்ளி நாட்களில் இருந்து ஆட்டோவில் ஸ்கூலுக்கு அழைத்துச் சென்று, ஆட்டோவில் அழைத்து வந்து, கல்லூரிக்கும் அதே மாதிரி செய்து வளர்த்திருக்கிறார்.
இப்போது பையன் மென்பொருள் துறையில் ஐரோப்பாவில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
அதாவது அந்த முன்று இளைஞர்கள் பத்தாம் வகுப்பைத்தாண்டாமல் இருப்பதற்கு அவர்கள் வீட்டைச் சுற்றியிருக்கும் சூழ்நிலை முக்கியமான காரணம் என்று சொல்ல வருகிறேன்.
அந்த வீட்டைச் சுற்றியிருக்கும் அவல சூழ்நிலைக்கு காரணம் நம் ஜாதி வெறி பிடித்த அடக்குமுறை சமூகம் என்று சொல்ல வருகிறேன்.
ஏனென்றால் நாம் சமூகம் என்று நம்புவது நம்மைச் சுற்றியுள்ள நாலு பேரை மட்டும்தான்.
அவர்களும் பத்தாம் வகுப்பு படிக்காமல் இருக்கும் டிரண்டில் இருக்கும் போது, தன்னிச்சையாக படிப்பில் ஆர்வமில்லாமல் போய்விடுகிறது.
நிறைய ஸ்கூல் டிராப் அவுட் நடக்கிறது.
ஏழ்மை கொடுக்கும் சுகாதரமற்ற சூழ்நிலை,
நோய் நொடி, ஊட்டச்சத்து குறைபாடு, பணத்துக்கான நெருக்கடி சுற்றியுள்ள சூழ்நிலை கொடுக்கும் திசைத்திருப்பல், ‘உன்னால் பெரிய படிப்பு படிக்க முடியாது’ என்ற சமூகத்தின் நெருக்கடி, டியூசன் போய் அறிவை மேம்படுத்திக் கொள்ள முடியாமை எல்லாம் சேர்ந்து டிராப் அவுட்டில் முடிகிறது.
இப்போது இந்த பத்தாம் வகுப்பு படித்திருக்கும் ஆட்டோ டிரைவருக்கு வருவோம்.
அவருக்கு இப்போதுதான் குழந்தை பிறந்திருக்கிறது. பெண் குழந்தை. ஒரு வயது. அவர் இக்குழந்தையை என்ன படிக்க வைப்பார்?
இதைத்தான் படிக்க வைக்க வேண்டும் ஏதாவது திட்டமிடுதல் இருக்குமா? இருக்காது. குழந்தை படிக்கும்.
தன் பத்தாம் வகுப்பு படிப்பை வைத்து குழந்தையின் படிப்பை எப்படி ஃபாலோ செய்வார். எப்படி பாடம் சொல்லிக் கொடுப்பார்.
சரி எப்படியோ டியூசன் ஏதோ படிக்க வைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
அக்குழந்தையை ஒரு டிகிரி படிக்க வைப்பார். அதாவது
2017+25 = 2042, 2042 ஆம் வருடம் அந்தக் குழந்தை பெரிவளாகி ஒரு டிகிரி முடித்திருப்பாள்.
அடுத்து அவளுக்கு ஒரு குழந்தை பிறக்கும் பாருங்கள்.
அக்குழந்தைதான் Bhushan Ahire மாதிரி ஒரு டெபுடி கலெக்டர் நிலைக்கு உயரும்.
அதாவது 2042+25 = 2067.
இப்போது கவனியுங்கள்.
Stage 1
1987 பெற்றோர் - படிப்பறிவு இல்லை.
குழந்தைகள் பத்தாம் வகுப்பு படிக்கின்றன.
Stage 2
2017 பெற்றோர் - பத்தாம் வகுப்பு படிப்பு
குழந்தைகள் டிகிரி படிக்கின்றன.
Stage 3
2042 பெற்றோர் - டிகிரி படிப்பு
2067 யில் குழந்தை டெபுடி கலெக்டராகி விடுகிறது.
இப்போது 2067 -1987 = 80 வருடம்.
அதாவது செம்மஞ்சேரியில் இருந்து ஒரு தலித் குழந்தை ஒன்று டெபுடி கலெக்டர் ஆக, தன் தாத்தாவின் அப்பாவின் காலத்திலிருந்து கணக்கிட்டால் 80 வருடங்கள் ஆகின்றன.
அந்த 80 வருடங்களுக்குள் எத்தனை உயர்த்தபட்ட ஜாதியினர் அந்த இடத்தில் போய் பிடித்துக் கொள்வார்கள். அதிகாரத்தில் இருப்பார்கள் என்று நினைத்துப் பாருங்கள்.
ஆக இந்த 80 வருடங்களைக் குறைக்காவிட்டால் மீண்டும் மீண்டும் சமுதாயத்தில் ஜாதி ரீதியிலான ஏற்றத் தாழ்வு இருந்து கொண்டே இருக்கும். குறிப்பிட்ட சாதியினரே மேலே இருப்பார்கள்.
ஆக இடஒதுக்கீடு எவ்வளவு நாள் வரை தொடரவேண்டும்?
அது அதிகாரப் பதவிகளான உயர்பதவியில் இருந்து ஆரம்ப அடிப்படை பதவி வரை அனைத்து ஜாதி மக்களும் சமநிலை ஆகும் வரை தொடர வேண்டும்.
ஐ.ஐ.டி மாதிரி கல்லூரிகளில் அனைத்து ஜாதினரும் ஆசிரியராக வரும்வரை, அங்கே சமநிலை வரும் வரை தொடர வேண்டும்.
சரியான வாய்ப்பு கொடுத்தால் அனைவரும் அறிவாளிகளே,
அனிதாவை அந்த Stage 1 , Stage 2 , Stage 3 க்குள் பொருத்தி பாருங்கள். அனிதா ஏழை. அப்பா அம்மா கல்வி அறிவு இல்லாதவர்கள்.
இந்திய ஜாதிவெறி சமூக அநியாயப்படி அனிதா Stage 1 யில் பத்தாம் வகுப்பு படித்து, அனிதாவின் மகள் Stage 2 வில் ஏதாவது ஒரு டிகிரி , அனிதாவின் பேத்தி Stage 3 யில் தான் டாக்டராக வேண்டும். இப்போதிலிருந்து 70 வருடங்கள் கழித்தே அனிதா குடும்பத்தில் ஒருவர் டாக்டராக வேண்டும் நம் ஜாதி வெறி சமூகத்துக்கு.
நீட் இல்லாத நம் சமச்சீர் கல்வி தேர்வு திட்டம் என்ன செய்கிறது. அனிதா போன்றவர்களை
” அனிதா அனிதா ஏற்கனவே மனுஅதர்மப்படி உனக்கு பல தீங்குகளை இந்த சமுகம் இழைத்துவிட்டது. இனிமேல் நீ நன்றாகப் படித்தால் Stage 1,Stage 2 , Stage 3 என்று போகத் தேவையில்லை. நேரடியாகவே Stage 3 க்கும் போய் உயர்படிப்பு படிக்கலாம். உன் சமூகத்தின் 70 வருடங்கள் முன்னமே நீ முன்னேறலாம். நீ டாக்டராகலாம்” என்கிறது.
அயோக்கியத்தனமான நீட் தேர்வு முறை என்ன சொல்கிறதென்றால்
“என்னது நீ Stage 1,Stage 2 இல்லாம நேரடியா Stage 3 வந்திருவியா. வரக்கூடாது. அனிதா நீ பத்தாங்கிளாஸ் மட்டும்தான் படிக்கனும். உன் பொண்ணு வேணுமின்னா டிகிரி படிச்சிக்கலாம். உன் பேத்தி வேணுமின்னா டாக்டர் படிக்கலாம். 50 வருசம் முன்னாடியே நீ எப்படி முன்னேறலாம். நீ எங்கையாவது கூலி வேலைக்கு போ. அதுதான் உன் Stage 1. உன் அப்பா அம்மா எல்லாரும் Stage 0 ல இருக்கிறாங்க. உனக்கு Stage 3 கேக்குதா” என்கிறது.
நீட் இல்லாத தேர்வுமுறை அனிதாக்களை தூக்கி விடுகிறது.
நீட் தேர்வோ அனிதாக்களை அழித்து விடுகிறது.
இதுதான் நீட்டுக்கும் நீட் இல்லாமைக்கும் உள்ள வித்தியாசம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக