புதன், 6 செப்டம்பர், 2017

தென்னகத்தின் குஜராத்தாக மாறிக்கொண்டிருக்கும் கர்நாடகா’: சுட்டுக்கொல்லப்பட்ட கௌரி லங்கேஷ் எழுதிய கட்டுரை

தனது வீட்டு வாசலில் சுட்டுக்கொல்லப்பட்ட கௌரி லங்கேஷ், தீவிர இந்துத்துவ எதிப்பாளராக இயங்கி வந்த பத்திரிகையாளர். கௌரி லங்கேஷ், 2008-ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இங்கே:

சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ்
சமீபத்தில் ஹூப்ளி, ஹொன்னள்ளி ஆகிய இடங்களில் வாகன திருட்டி ஈடுபட்டதாக மூவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் இஸ்லாமியர்களாக இருந்ததால், அடுத்த நாளே, காவல்துறை வட்டாரங்கள் அவர்களை பற்றிய செய்தியை கசியவிட்டது. அதாவது அவர்கள் மூவரும் நாட்டின் வெவ்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாக காவல்துறை சந்தேகிப்பதாக அந்த செய்தி சொன்னது.
இந்த ஒரு துணுக்கு போதுமானதாக இருந்தது, ஊடகங்கள் தங்களுடைய சந்தேக கதைகளை புனைய. அனைத்து அச்சு ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் விதிவிலக்கு இல்லாமல் தாங்கள்தான் முதல்முதலாக இந்த அதிர்ச்சிக்குரிய செய்தியை வெளியிடுவதாக பறைசாற்றிக்கொண்டன.

அனைத்து செய்தியாளர்களும் தங்களுடைய கற்பனைத் திறனை வெளிப்படுத்தும் விதமாக, பெயர் சொல்ல விரும்பாத நபர் சொன்னதாகவோ, காவல்துறையின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொன்னதாகவோ, காவல்துறையைச் சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் சொன்னதாகவோ, கர்நாடகத்தின் அரசு செயலகம் அமைந்திருக்கும் விதான் சவுதா, இன்போஸிஸ் மற்றும் ஐபிஎம் நிறுவனங்களை அவர்கள் தகர்க்க திட்டமிட்டமிட்டதாகவும் மேலும் பொதுஇடங்களிலும் இந்து கோயில்களிலும் குண்டு வைக்க திட்டமிட்டிருந்ததாகவும் செய்தி புனைந்தார்கள்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அத்தனை செய்திகளும் இந்த மூன்று மனிதர்களும் ஒசாமா பின்லேடனின் உள்ளூர் ஸ்லீப்பர் செல்களாக இருந்தார்கள் என்றும் லஷ்கர் இ தொய்பா, தடை செய்யப்பட்ட சிமி போன்ற அமைப்புகளில் தொடர்புடையவர்கள் என்றும் சொன்னதுதான். மேலும் இந்த மூவரும் அருகாமையில் உள்ள வனங்களில் ஆயுத பயிற்சியை வழங்கியதாகவும் பாகிஸ்தான் கொடியை ஏற்றியதாகவும் ஆர்டிஎக்ஸ் உள்ளிட்ட வெடிமருந்துகளை பதுக்கி வைத்திருப்பதோடு, மாநிலத்தில் உள்ள வெவ்வேறு ஸ்லீப்பர் செல்களுக்கு ஆயுதங்களை விநியோகித்திருப்பதாகவும் எழுதினார்கள். நூற்றுக்கணக்கான இளைஞர்களை தீவிரவாத குழுக்களில் சேர்த்து விட்டிருப்பதாகவும் இஸ்ரேலில் தயாரான ஏகே 47 உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருப்பதாகவும்கூட அந்த செய்திகள் கூறின.
ஆனால் இந்த செய்திகள் அனைத்தும் எந்த அடிப்படையில் எழுதப்பட்டவை. ‘சொல்லப்படுகின்றன’; ‘சந்தேகிக்கப்படுகிறது’ என எத்தனை முறை இந்த செய்திகளில் மாறி மாறி வருகின்றன.
இந்த செய்திகளின் உண்மைத்தன்மையை குடிமக்களாகவும் நுட்பமான வாசகராகவும் எப்படி நம்புவது?
புனையப்பட்ட இந்த செய்திகளில் எவ்வளவு கசியப்பட்ட தகவல் இருந்தது? திறனற்ற நம் காவல்துறை எவ்வளவு திணித்தது? டி ஆர் பி ரேட்டிங்கை ஏற்றவும் பத்திரிகை விற்பனையைக் கூட்டவும் மூத்த பத்திரிகையாளர்களால் எவ்வளவு ‘காரம்’ தூவப்பட்டு செய்திகள் தயாராயின?

ஒரு கல்வி முறையான மாண்டிசோரிக்கும் க்யூபாவின் குந்தனோ விரிகுடாவில் அமெரிக்கா அமைத்துள்ள சிறைச்சாலைக்கும் அவர்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை.
உதாரணத்துக்கு ஒரு செய்தியை பார்ப்போமா…
கன்னட நாளிதழான உதயவாகினி, மங்களூரு பதிப்பு, தன்னுடைய இந்துத்துவ ஆதரவு நிலைப்பாட்டுக்காக அறியப்பட்டது.  அந்நாளிதழில் முதல் பக்க செய்தி:
“டிசம்பர் இறுதியில் ரியாஸ்தின் கவுஸ், முகமது ஆசிஃப், முகமது அபுபக்கர் மற்றும் ஹபீஸ் ஆகியோர் ஓர் ரகசிய கூட்டத்தை கூட்டினர். அதில் க்யூபாவின் மாண்டிசோரி சிறையில் மக்களை அடைத்து வைத்து அமெரிக்க செய்யும் சித்ரவதைகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அப்போது வெளியிடப்பட்ட கண்டன தீர்மானத்தை ஒரு காவல் அதிகாரி கைப்பற்றியுள்ளார்”.
உதயவாகினி கன்னடத்தில் வெளியாகும் முன்னணி நாளிதழ், பல மூத்த பத்திரிகையாளர்கள் அதில் பணியாற்றுகிறார்கள். ஆனால் பாருங்கள்..ஒரு கல்வி முறையான மாண்டிசோரிக்கும் க்யூபாவின் குந்தனோ விரிகுடாவில் அமெரிக்கா அமைத்துள்ள சிறைச்சாலைக்கும் அவர்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை. எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட்டை யார் முந்தித்தருவது என்பதில் இந்த உண்மைத்தன்மையைக்கூட அவர்கள் சரிபார்க்கவில்லை.
அது இருக்கட்டும், குந்தனோ சிறைச்சாலையில் அமெரிக்காவில் அத்துமீறல்களை கண்டிப்பது ஒரு குற்றமா? குந்தனமோ சிறைச்சாலையில் கடைபிடிக்கப்படும் அநீதிகளை சுட்டிக்காட்டுபவர் தீவிரவாதியாக சந்தேகிக்கப்படுவாரா?
இதுபோன்ற கேள்விகள் உள்ளூர் ஊடகங்களுக்கு பொருட்டாகவே இல்லையா? இல்லவே இல்லை. இதுபோன்ற அடிப்படையான விஷயங்களை எழுப்புவதைவிட, காவல்துறை தரும் துணுக்குகளையே அவர்கள் எக்ஸ்க்ளூசிவ் ஆக தந்தனர்.

எழுத்தாளர் யூ. ஆர். அனந்த மூர்த்தி
ஊடகங்களின் இத்தகைய ‘தீவிரவாத’ மேனியாவுக்குப் பின்னால், காவி படை இருக்கிறதா? இந்த முறை இவர்களின் இலக்குகள்… பிரபல இலக்கியவாதி யூ. ஆர். அனந்தமூர்த்தியும் கர்நாடக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் சி. எஸ். துவாரகநாத்தும்தான்.
40 வருடங்களுக்கு முன், அனந்த மூர்த்தி தன்னுடைய ‘சம்ஸ்காரா’ நாவலை எழுதியபோது, சிலர் அதை பார்ப்பனர்களுக்கு எதிரானது என்று சொல்லி தடை விதிக்க முயன்றார்கள். ஆனால் பெரும்பாலான அறிவுஜீவிகள் அந்தக் கருத்தை மறுத்தபோது, மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்நாவல் படமாக்கப்பட்டதோடு, தேசிய விருது பெற்ற முதல் கன்னட படம் என்ற பெருமையையும் பெற்றது, உலகம் முழுக்க பல மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டது.
சம்ஸ்காரா, பல பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டது. மங்களூரு பல்கலையிலும்கூட  நாவலின் இந்தி மொழியாக்கம், இரண்டாம் ஆண்டு இளநிலை மாணவர்களுக்கு வைக்கப்பட்டுள்ளது.
இங்கே ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சங்பரிவாரங்கள் கடந்த ஆண்டு, கன்னட நாவலாசிரியர் எஸ். எல். பைரப்பா எழுதிய ஆவர்ணா என்ற நாவலை மிகத் தீவிரமாக முன்னெடுத்துக்கொண்டிருந்தார்கள். நாவலின் 20 ஆயிரம் பிரதிகள் விற்பனையானதாக சொல்லப்பட்டது, கன்னடத்தில் வெளியான புனைவுகளிலேயே அதிக பிரதிகள் விற்பனையானதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறின.
சங்பரிவாரங்களின் இந்துத்துவா அஜெண்டாவை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் பைரப்பா, ஆவர்ணா நாவலில் அரை உண்மையை முழுப் பொய்யுடன் சேர்த்து புனைந்திருந்தார். வரலாற்று ஆய்வாளர்களின் ஆதாரங்களின் அடிப்படையில் எழுதியதாகவும் சொல்லிக்கொண்டார். இவர் சொன்ன வரலாற்று ஆய்வாளர்கள் பரிவாரங்களை சேர்ந்தவர்களே.  இந்த நாவலை படிக்கும் எந்தவொரு வாசகரும் இஸ்லாமிய சமூகத்தின் மீது பக்கச்சார்பான முடிவையே கொள்வார்.
இந்த நூல், இஸ்லாமிய சமூகம், மதவெறியைத் தூண்டி இந்துக்களை வெளியேற்றியதாக சொன்னது. மேலும், தற்போது நாட்டில் நடக்கும் அத்தனை பிரச்னைகளுக்கும் கடந்த காலத்தில் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இந்துக்கள் மீதி நடத்திய கொடுமைகளே காரணம் என்றும், அந்தப் பாவங்களுக்கு இஸ்லாமிய சமூகம் பொறுப்பேற்கிறது என்றும் அந்நூல் சொன்னது.
இஸ்லாமிய மக்களை மட்டுமல்ல, இஸ்லாமிய அதிகாரிகள், எழுத்தாளர்கள், சினிமா கலைஞர்களுடன் இடதுசாரிகள், மதசார்ப்பற்றவர்கள், வரலாற்றாலர்கள்…அதவாது காவி படையோடு ஒத்துப்போகாத அனைவரையும் அந்நூல் இந்து எதிர்ப்பாளர்கள் என சொன்னது. இந்நூல் வெளியானபோது சங்பரிவாரங்கள் போற்றினார்கள், முற்போக்கு சக்திகள், இலக்கியத்திலும் இந்துத்துவ சக்திகள் ஊடுருவி வருவதற்கு கண்டனம் தெரிவித்தார்கள்.
இந்த விவாதம் எழுந்தபோது, அனந்த மூர்த்தி, பைரப்பாவை வெளிப்படையாக ‘கல்லூரி அளவிலான விவாதக்காரர்’ என அழைத்தார். இது வலதுசாரி சக்திகளை கோபமுறச்செய்தது. முன்னணி கன்னட நாளிதழான விஜய கர்நாடகா, அனந்தமூர்த்திக்கு எதிராக குறுச்செய்தி பிரச்சாரத்தை தொடங்கியது. டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தைச் சேர்ந்த விஜய கர்நாடகா, மற்றுமொரு சங்பரிவாரங்களின் பிரச்சார பத்திரிகை. அதனால் பெரிய வியப்பேதுமில்லை, அந்நாளிதழ் இரண்டு பக்கங்களில் காவிப்படை வாசகர்களால் எழுதப்பட்ட அனந்தமூர்த்திக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டது.
இந்தக் கண்மூடித்தனமான தாக்குதலை எதிர்கொள்ள, நாங்கள் சிலர் இணைந்து, ஆவர்னா நாவலை விமர்சித்து எழுதி அதை நூலாக வெளியிட்டோம், அது பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதிகரித்துவரும் இந்துத்துவ கருத்தாக்க சூழலில் ஆவர்னா குறித்து விவரமாக பேசக் காரணம்…சமூகத்தை சீர்குலைக்கும் கருத்துகள் மேலும் மேலும் சேதத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதற்காகத்தான். மற்ற மொழிகளில் ஆவர்னாவை மொழிபெயர்க்கிறவர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்துத்துவ அஜெண்டாவுக்கு எதிராகவும், பரிவாரங்களின் விருப்பத்துக்குரிய எழுத்தாளர் பைரப்பாவை விமர்சித்த காரணத்தாலும் அனந்த மூர்த்தியை பரிவாரங்கள் எதிலாவது சிக்க வைக்க நினைத்தனர். அவர்களுக்குக் கிடைத்தது, சம்ஸ்காராவின் சில பகுதிகள் ‘ஆபாசமாக’ இருக்கிறதென்ற குற்றச்சாட்டு. பார்ப்பனர்களுக்கு எதிரான என்ற முத்திரை பலிக்காதபட்சத்தில், ஆபாச பகுதியை குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் எப்படி போதிப்பார்கள் என்கிற குற்றச்சாட்டை சுமத்தினார்கள்.
சங்பரிவாரங்களின் அஜெண்டாக்களுடன் ஒத்துப்போகும் சில விரிவுரையாளர்களிடம் கையெழுத்து வாங்கி, பல்கலை பாடத்திட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.
மாநிலத்தின் அறிவுஜீவிகளாலும் முற்போக்குசக்திகளாலும் காவிப்படையின் இத்தகைய செயல்பாடுகள் கடும் கண்டனத்துக்கு உள்ளாயின. இந்த கணம், அனந்த மூர்த்தியின் நாவலை பாடத்திட்டதிலிருந்து நீக்கும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் சங்பரிவாரங்கள் சக்கரத்தை காலில் கட்டிவிட்டார்கள். வரப்போகும் ஆண்டுகளில் பல்கலைக்கழகங்கள் முற்போக்கு எழுத்தாளர்களின் படைப்புகளை பாடமாக வைக்கும் முடிவில் வேறுபடுவார்கள். சங்பரிவாரங்களை எதிர்க்கும் எந்த எழுத்தாளரின் படைப்பையும் விலக்கிவைக்க, அவர்கள் எண்ணரீதியாக தயாராகிவிடுவார்கள்.


கர்நாடக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் சி. எஸ். துவாரகநாத்
அனந்த மூர்த்தியின் பிம்பத்தை சிதைக்கும் பணியில் ஒரு பிரிவு சங்பரிவாரங்கள் ஈடுபட்டிருக்கும் அதேநேரத்தில் மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவரான சி.எஸ். துவாரகநாத் மீது தாக்குதல் நடத்துவது அவசியம் என இன்னொரு பிரிவு கவனமாக உள்ளது.
இந்த மாதத்தின் முற்பகுதியில் துவாரகநாத்தும் ஆணையத்தின் சில உறுப்பினர்களும் இணைந்து  பிற்படுத்தப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உள்ள வசதிகளை ஆய்வதற்காக கூர்க் சென்றுள்ளனர். அப்போது சில உறுப்பினர்கள், தலைக்காவேரி (காவிரி உற்பத்தியாகும் இடம்) என்னும் ஆன்மிக தலத்துக்கு சென்றுள்ளனர்.  அப்போது தலைக்காவேரியின் தலைமை பூசாரி, துவாரகநாத்தையும் அழைத்துவாருங்கள், அவருக்கும் புனித நீரை தருகிறோம் என்றுள்ளனர்.
அதற்கு, உறுப்பினர்கள், ‘அவர் ஒரு நாத்திகர், அவருக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. காவிரி ஆறையே அவர் புனிதமாகத்தான் நினைக்கிறார்’ என்றிருக்கிறார்கள்.
துவாரகநாத்துக்கு இந்த சம்பவம் குறித்து எதுவும் அறியாத நிலையில், இந்த விஷயம் உள்ளூர் சங்பரிவாரங்களுக்கு எட்டியுள்ளது. அடுத்த நாள், தனது இரண்டு காவலர்களுடன் இருந்த துவாரகநாத்தை நூற்றுக்கும் மேற்பட்ட காவிகள் சூழ்ந்துகொண்டனர். முன்னாள் பாஜக எம்.எல்.ஏ தலைமையில் மது அருந்தியிருந்த கும்பல், துவாரகநாத்தை சூழ்ந்து, ‘ஏன் காவிரியை அவமதித்தீர்கள்? இந்துக்களின் நம்பிக்கைகளை அவமதித்துவிட்டீர்கள்… கர்நாடகத்துக்கு எதிரானவர் நீங்கள்’ என பேசியுள்ளது.
என்ன செய்வதென்றே தெரியாமல் நின்றிருந்த துவாரகநாத், திரும்ப திரும்ப தன்னிலை விளக்கம் அளித்தார். ஆனாலும் அந்த கும்பல் சமாதானம் அடையவில்லை. அவரை தள்ளியும் உலுக்கியும் சுற்றியும் வந்த கும்பல், அவரைக் கட்டாயப்படுத்தி, கொக்ககோலா புட்டியில் அடைக்கப்பட்ட காவிரி நீரை குடிக்க வைத்தது, கட்டாயப்படுத்தி அவருடைய நெற்றியில் திலகம் இட்டது.
சங்பரிவாரங்கள் தங்களுடன் அழைத்து வந்திருந்த உள்ளூர் பத்திரிகையாளர், உள்ளூர் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் ஆகியோர் அதை படம் பிடித்தனர். அது மாநிலம் முழுவதும் ஒளிபரப்பானது. அதுமட்டுமல்ல, அந்த கும்பல், தன்னுடைய செயல்பாட்டுக்கு துவாரகநாத் மன்னிப்பு கேட்டதாக தானாகவே ஒரு அறிக்கை ஒன்றையும் அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பியது.

இந்த மூன்று சம்பவங்களும் தெளிவாக ஒன்றை சொல்கின்றன. கர்நாடகத்தில் உள்ள ஊடகங்கள் காவிமயமாகிவிட்டன என்பதையும் கர்நாடக பல்கலைக்கழகங்கள், சங்பரிவாரங்களின் காரணமற்ற கோரிக்கைகளுக்கு தலைவணங்குவதாகவும் இந்துகளை அனைவரும் ஒன்றை பின்பற்றுகிறவர்களே என்ற இந்துத்துவ படையினர், பிற்படுத்தப்பட்ட ஆணையத்தின் தலைவரையும் இந்து நம்பிக்கைகள் என்ற பெயரில் விட்டுவைக்கப்ப்மாட்டார்கள் என்பதும் தெள்ளத்தெளிவாகத் தெரிகின்றன.
பாஜக ஆட்சியில் இருந்த மாநிலத்தில் இந்த முன்னேற்றங்கள், உண்மையில் எதிர்பார்க்கப்பட்டவைதான், இயற்கையானவையாக கருத்தப்பட்டவைதான். ஆனால், ஆளுநரின் ஆட்சி இப்போது நடக்கிறது. இன்னமும் காவிப்படையின் தீவிர அஜெண்டாக்கள் அரசியல் மற்றும் பொதுத்தளத்தில் அதிக்கம் செலுத்தவில்லை. பாஜக, மதசார்பற்ற ஜனதாதள கூட்டணியின் 20 மாத ஆட்சியில் இந்த மாற்றம் நிகழத்துவங்கியது.
இந்த குறுகிய காலத்தில், அமைப்பு ரீதியிலான ஊடுருவல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று இந்து முற்போக்காளர்கள், ‘நக்ஸலைட்’ எனவும் இஸ்லாமிய முற்போக்காளர்கள் ‘இஸ்லாமிய தீவிரவாதிகள்’ எனவும் முத்திரை குத்தப்படுகிறார்கள். இவை அனைத்தும் மக்கள் நலவிரும்புகள் மீதும், மதசார்ப்பற்ற அமைப்புகள் மீதும் செலுத்தப்படுகிறது.
பீப்புள் டெமாக்ரடிக் ஃபாரம் அமைப்பைச் சேர்ந்த பேராசிரியர் நகரி பாபையா போன்ற மதசார்பற்றவர்களை மேடை பேச்சில் ‘இந்து கடவுள்களை அவமதிக்கிறார்’ என குற்றம்சாட்டவும். குதிரே முக் வனத்தில் வாழும் பழங்குடி தலைவரான கல்குலி விடல் ஹெட்கே, தலித்துகளை அவமதித்தார்; அவருடைய மனைவி விபச்சாரத்தை ஊக்குவிக்கிறார் என குற்றம்சாட்டவும் பழங்குடி உரிமைகளுக்காக பணியாற்றுகிறவர்களை நக்ஸலைட்டுகள் என குற்றச்சாட்டவும் காவிகள் முனையும்போது, அதை காவல்துறை ஊக்கப்படுத்துகிறது.
சங்பரிவார் அமைப்பினர் கொடுத்த தவறான புகாரின் பேரில் உள்ளூர் அதிகாரிகளும் காவலர்களும் உள்ளூர் இஸ்லாமியர்களை சுற்றி வளைத்ததும் சமீபத்தில்தான் நடந்தது.  அதேநேரம், கால்நடைகளை ஏற்றிச்சென்றதற்காக இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது காவல்துறை கண்களை மூடிக்கொண்டது. ராமசேது பிரச்னையின்போது ஆர் எஸ் எஸ் காரர்கள் ஒரு பஸ்ஸை எரித்து, அதனால் இரண்டு பேர் மாண்டு போனபின்பும் எவ்வித விசாரணையும் இன்றி இதே காவல்துறை அவர்களை விடுவித்தது. இந்த பட்டியல் போய்க்கொண்டே இருக்கும்…
சங்பரிவாரங்களின் சட்டவிரோத, வன்முறை வெறியாட்டத்துக்கு துணை போகும் காவல்துறையினருக்கும் அதிகாரிகளுக்கும் நன்றி. இப்போது சங்கரிபரிவாங்கள் ஆனந்தமாக ஏராளமான புகார்களை இஸ்லாமியர்கள் மீதும் முற்போக்கு இந்துக்கள் மீதும் அளிப்பார்கள்.
சமீபத்தில், ஸ்ரீராம் சேனாவின் புரமோத் முத்தாலிக் ஒன்றைச் சொன்னார், ‘நாங்கள் ஹுப்ளியில் உள்ள சந்தேகத்துக்குரிய இஸ்லாமியர்களின் பட்டியலை தந்திருக்கிறோம். ஆனால் அவர்கள் ஒரு ஒருவரைத்தான் கைது செய்திருக்கிறார்கள். நாங்கள் கொடுத்த பட்டியலில் உள்ள அனைவரையும் கைது செய்யவிட்டால், நாங்கள் அனைத்து இடங்களிலும் போராடுவோம்’.
தென்னகத்தின் நுழைவாயிலாக கர்நாடகத்தை சங்பரிவாரங்கள் எப்போதும் கருதுவார்கள். சென்ற முறை அதிகாரத்தில் இருந்தபோது, அவர்கள் காலூன்றும் அளவுக்கு இந்த கதவு கொஞ்சமாக திறந்தது. வெறுப்பின் விதைகளை ஊன்ற அதுவே அவர்களுக்கு போதுமானதாக இருந்தது. அந்த விதைகள் தற்போது முளைத்துள்ளன. இதோ தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளன, பாஜக அமோக விளைச்சலை அறுவடை செய்யப்போகிறது என்பதில் சந்தேகமில்லை.
மதசார்ப்பற்ற ஜனதாதளம், பாஜகவும் அரசியல் தற்கொலையை ஒப்பந்தம் செய்தபின் காங்கிரஸ் சங்பரிவாரங்களை எதிர்கொள்ள தயங்கிக்கொண்டிருக்கிறது. கர்நாடகம், எதிர்பாராதவிதமாக,  திரும்பிவராத தன்னுடைய புதிய நிலைக்கு தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது….அது தென்னகத்தின் குஜராத் என்ற நிலை.
28 February 2008 அன்று  churumuri வெளியிடப்பட்டது.  thetimestamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக