சனி, 2 செப்டம்பர், 2017

அகிலா மதம் மாறி ஹாதியாவான கதை!

சிறப்புக் கட்டுரை: அகிலா ஹாதியாவான கதை!
மின்னம்பலம் :கேரளாவில் நடைபெற்றுவரும் ஒரு சம்பவம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசியல் குழப்பங்கள் காரணமாக இந்தச் செய்தி நம் கவனத்துக்கு வருவதற்கு வாய்ப்பில்லைதான். கேரளாவைச் சேர்ந்த இந்து பெண் ஒருவர் இஸ்லாமிய மதத்துக்கு மாறியுள்ளதும் அதன் தொடர்ச்சியான சம்பவங்களும்தான் இந்தச் சர்ச்சைகளுக்குக் காரணம்.
‘இது லவ் ஜிகாத்’ என்று பெண்ணின் தந்தை கூறுகிறார். ‘அவர் மனப்பூர்வமாகத்தான் இஸ்லாமிய மதத்துக்கு மாறியுள்ளார்’ என்று பெண்ணின் கணவர் கூறுகிறார். உண்மையில் இந்த வழக்கில் நடந்ததுதான் என்ன?
கேரளாவில் உள்ளது திருமணி வேங்கடபுரம் என்ற டி.வி.புரம். இந்த கிராமத்தைச் சேர்ந்த அசோகன் மற்றும் பொன்னம்மாவின் ஒரே மகள்தான் அகிலா.
ஹோமியோபதி மருத்துவம் மற்றும் அறுவைசிகிச்சையில் இளநிலை படிப்பு படிப்பதற்காகக் கடந்த 2011ஆம் ஆண்டு சேலம் வந்துள்ளார். சேலம் வந்த பின் அவரது இயல்புகள் மாறத் தொடங்கியுள்ளன. இஸ்லாமிய நண்பர்களுடன் பழக்கம் ஏற்படுத்திக்கொண்ட அவர் அம்மதத்தைப் பின்பற்றத் தொடங்கியுள்ளார். இந்நிலையில்தான், கடந்த ஜனவரி 2016ல் அகிலாவின் தந்தை கேரள உயர் நீதிமன்றத்தில் தனது மகள் கட்டாயப்படுத்தப்பட்டு இஸ்லாமிய மதத்துக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று வழக்குத் தொடுத்தார். ஆனால், நீதிமன்றத்தில் ஆஜரான அகிலா இதை மறுத்ததையடுத்து இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையே, ஜூலை 2016இல் தனது பெயரை ஹாதியா என்று மாற்றிக்கொண்ட அவர், இஸ்லாமிய மதத்துக்கு மாறிய அதிகாரபூர்வச் சான்றிதழையும் பெற்றுள்ளார்.

இது அவரது பெற்றோருக்குப் பேரியடியாக விழுந்துள்ளது. தங்களின் ஒரே மகள் வேறு மதத்துக்கு மாறியதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதையடுத்து, ஹாதியாவின் தந்தை கேரள உயர் நீதிமன்றத்தில் இரண்டாவதாக ஒரு வழக்குத் தொடுக்கிறார். அதில், இஸ்லாமிய அமைப்புகள் தங்களின் மகளை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் அவரைச் சேர்க்க முயற்சி நடப்பதாகவும் தெரிவிக்கிறார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே 2016 டிசம்பரில் ஷபின் ஜஹான் என்பவரை ஹாதியா திருமணம் செய்துகொள்கிறார். ஆனால், நீதிமன்றம் இந்தத் திருமணத்தை ரத்து செய்கிறது. இதையடுத்து ஜஹான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறார். கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஹாதியா இஸ்லாமிய மதத்துக்கு மாறிய சம்பவம் மற்றும் அவரது திருமணம் தொடர்பாக விசாரித்து ஆதாரம் தாக்கல் தேசிய புலனாய்வு அமைப்புக்கு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புபடி ஹாதியா பெற்றோர் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளார். அவரது வீட்டு வெளியே எந்நேரமும் ஆறு போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். வீடு அமைந்திருக்கும் பகுதியாகச் செல்லும் வாகனங்களை வழி மறித்து சோதனைகளும் நடத்தப்படுகின்றன.
இந்தச் சம்பவத்தின் பின்னணி தொடர்பாக அறிந்துகொள்ள, ஹாதியாவின் கிராமத்தைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவின் நீளமான ஏரியான வேம்பநாட் மற்றும் வேறொரு ஏரி சூழ அமைந்துள்ள பசுமையான கிராமம் டி.வி.புரம். தேங்காய் மற்றும் நெல் விவசாயம்தான் இங்குப் பிரதான தொழிலாக ஒருகாலத்தில் இருந்துள்ளது. பின்னர் விளைச்சல் குறைந்ததால், பலரும் விவசாயத்தைக் கைவிட்டுவிட்டு வேலை தேடி கொச்சிக்குச் சென்றுவிட்டனர். ஒரு சிலர் வேலைக்காக வளைகுடா நாடுகளுக்குச் சென்றுவிட்டனர்.
வளரும் பருவத்தில் இஸ்லாமிய மதம் குறித்து ஹாதியா அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அந்தக் கிராமத்தில் இஸ்லாமியர்களே கிடையாது. கிராமத்தில் வசிக்கும் பத்து பேரில் ஒன்பது பேர் இந்து எழவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ளோர் ரோமன் கத்தோலிக்க வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
1996இல், ஹாதியாவுக்கு மூன்று வயது இருக்கும்போது அவர்களது கிராமத்தில் மதக் கலவரம் ஏற்பட்டுள்ளது. கிராமத்தில் கோயில் அருகே மயானம் அமைப்பதற்கு இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இதற்குக் கண்டனம் தெரிவிக்கும்விதமாக எழவ மக்களின் மிகப் பெரிய அமைப்பான ஸ்ரீ நாராயன தர்ம பரிபாலன யோகம் போராடியது. இந்தப் போராட்டத்தில் பலருக்குக் காயம் ஏற்பட்டது. ஹாதியாவின் தந்தை அசோகனும் எழவ சமூகத்தைச் சேர்ந்தவர்தான். மத்திய ரிசர்வ் படையில் ஓட்டுநராகப் பணியாற்றியவர். தாய் பொன்னம்மாவோ தீவிர ஆன்மிக ஈடுபாடு உடையவர். நேரம் கிடைக்கும்போதெல்லாம் கோயிலுக்குச் சென்று விடுவார்.
இத்தகைய குடும்பத்தில் பிறந்த ஹாதியா, தனது பத்தாம் வகுப்பை வைக்கோம் நகரில் உள்ள செயின்ட் லிட்டில் தெரசா பள்ளியிலும் பன்னிரண்டாம் வகுப்பை அதே நகரில் உள்ள எச்.எம்.எஸ்.என். மேல்நிலையிலும் படித்துள்ளார். அவரைப் பற்றி பள்ளி தோழிகள் கூறும்போது, “அவள் மிகவும் தோழமையானவள். ஆனால் மிகவும் கூச்ச சுபாவம் உடையவள். நாங்கள் ஆடைகளைப் பற்றியோ, நவநாகரிகத்தைப் பற்றியோ பேசினால் அங்கிருந்து சென்று விடுவாள்” என்கின்றனர்.

12ஆம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்த அடைந்த அவர், இரண்டாவது முயற்சியில் தேர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து, ஹோமியோபதி மருத்துவம் மற்றும் அறுவைசிகிச்சையில் இளநிலை படிப்பு படிப்பதற்காகச் சொந்தக் கிராமத்தை விட்டு கிட்டதட்ட 400 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தமிழ்நாட்டின் சேலத்துக்கு வந்துள்ளார். சிவராஜ் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் படித்த ஹாதியாவுக்கு முதல் வருடம் கடினமாகவே இருந்துள்ளது. புது சூழல், புதிய மனிதர்கள், உணவு பழக்கம் அவருக்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து முதலாமாண்டின் இறுதியில் கல்லூரி ஹாஸ்டலைக் காலி செய்துவிட்டு வாடகை வீட்டுக்கு மாறுகிறார். அவருடன் இரண்டு இந்து மாணவிகள் மற்றும் இரண்டு இஸ்லாமிய மாணவிகளும் தங்கியுள்ளனர். இவர்களில் ஜெசீனாவும் ஒருவர். ஜெசீனாவின் செயல்கள் ஹாதியாவைக் கவர்ந்துள்ளது.
2016 ஜனவரி 9ஆம் தேதி ஹாதியா தாக்கல் செய்த வாக்குமூலத்தில், ஜெசீனா மற்றும் அவரது சகோதரி ஃபசீனாவின் நற்குணம் மற்றும் நேரத்துக்கு அவர்கள் மேற்கொள்ளும் தொழுகைகள் மூலம் இஸ்லாமிய மதம் மீது ஈர்ப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர் இஸ்லாமியப் புத்தகங்களை படிக்கவும் இஸ்லாம் தொடர்பான வீடியோக்களை பார்க்கவும் தொடங்குகிறார். இஸ்லாமியம் மீதான அவரது ஈர்ப்பு அதிகரித்த நிலையில், கடந்த 2015 நவம்பரில் தனது தாத்தாவின் மரணத்துக்குச் சொந்த ஊருக்கு ஹாதியா சென்றுள்ளார். அப்போதே மதச் சடங்குகளை செய்ய அவர் மறுத்துள்ளார். குடும்பத்தினர் யாருக்கும் அப்போது பெரிதாகச் சந்தேகம் வரவில்லை.
இந்த நிலையில், 2016 ஜனவரி 2ஆம் தேதி மல்லாப்புரம் மாவட்டத்தின் பெரிந்தால்மன்னா நகரில் உள்ள ஜெசீனாவின் வீட்டுக்கு ஹாதியா சென்றுள்ளார். ஜெசீனாவின் தந்தையிடம் இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும் என்ற தனது ஆசையையும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து, கோழிக்கோட்டில் உள்ள தர்பியத்துல் இஸ்லாம் சபையில் பதிவு செய்வதற்கு ஹாதியாவுக்கு ஜெசீனாவின் தந்தை அபுபக்கர் உதவியுள்ளார். கடந்த 1936இல் தொடங்கப்பட்ட இந்தச் சபை, கேரளாவில் இஸ்லாம் மதத்துக்கு மாற்றுவதற்கான அரசு அங்கீகாரம் பெற்ற இரண்டு சபைகளில் ஒன்றாக விளங்குகிறது. இதன் சான்றிதழ்கள் அரசு அதிகார பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்வதற்கு ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இந்தச் சபையின் கோட்பாடுபடி, ஒருவர் இஸ்லாம் மதத்துக்கு மாறவேண்டுமென்றால் 60 நாள்கள் அங்கேயே தங்கி இருந்து மதம் சம்பந்தமான படிப்புகளைப் படித்து தேர்ச்சி பெற வேண்டும்.
ஆனால், பெற்றோர்கள் எதிர்ப்பார்கள் என்பதால் ஹாதியா அங்குத் தங்கவில்லை. அதேவேளையில், சபை அதிகாரிகள் வெளியில் வசித்தபடியே இந்தப் படிப்பை படிப்பதற்கு அவளுக்கு அனுமதி அளித்துள்ளனர். 2016 ஜனவரி 5ஆம் தேதி, அபுபக்கர் அவளை மல்லாப்புரத்தில் உள்ள மார்கசல் ஹிடாயா சத்ய சரனி கல்வி மற்றும் அறக்கட்டளைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பாப்புலர் ஃபிராண்ட் அப் இந்தியா கட்சியைச் சேர்ந்தவர்களால் இந்த அமைப்பு நடத்தப்படுகிறது. ஹாதியா சுய விருப்பத்துடன்தான் இஸ்லாமிய வகுப்பில் சேர உள்ளேன் என்பதற்கான அத்தாட்சியைக் கொண்டுவராததால் அவளைச் சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதையடுத்து அபுபக்கர் அவளை சேலத்துக்கே திரும்பிச் செல்லுமாறு கூறியுள்ளார்.
கல்லூரிக்கு மீண்டும் சென்ற ஹாதியா இஸ்லாமிய பெண்களை போன்று தலையில் ஸ்கார்ப் அணிந்து சென்றுள்ளார். தனது இஸ்லாமிய ஆர்வத்தை ஹாதியா வெளிப்படையாக அறிவித்தது அப்போதுதான். இந்தத் தகவலை அவளது வகுப்பு தோழிகள் அவளின் தந்தைக்கு தெரிவித்துள்ளனர். அவர் சேலத்துக்கு வருவதற்குள் ஹாதியா சேலத்தில் இருந்து தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து 2016 ஜனவரி 7ஆம் தேதி தனது மகளைக் காணவில்லை என்றும் அபுபக்கர் பாதுகாப்பில் அவர் இருக்கலாம் என்றும் பெரிந்தால்மன்னா காவல் நிலையத்தில் அசோகன் புகார் அளித்தார். இதுதொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுவையும் தாக்கல் செய்தார். இதனடிப்படையில், 57ஆவது பிரிவின் கீழ் அபுபக்கரை கைது செய்த போலீஸார், பின்னர் இருவேறு இனக் குழுக்களிடையே பகையை ஏற்படுத்துவதாகவும், ஒரு சாரரின் மத நம்பிக்கையை இழிவுப்படுத்துவதாகவும் வழக்கு பதிகின்றனர்.

இந்த நிலையில், ஜனவரி 19ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரான ஹாதியா, தான் மார்கசல் ஹிடாயா சத்ய சரனி கல்வி மற்றும் அறக்கட்டளையில் தங்கியிருந்ததாகவும். அபுபக்கர் உதவ மறுத்ததால் தனது சுய விருப்பத்தில் அங்குச் சென்றதாகவும் தெரிவித்தார். மேலும், தனது பெற்றோருடன் செல்ல விருப்பமில்லை என்றும் தெரிவித்தார். இதையடுத்து அசோகனின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சத்ய சரனியில் சேர்ந்த அவர் இஸ்லாமிய படிப்பில் தேர்ச்சி பெற்றார். ஹாதியா என்ற பெயரில் சான்றிதழும் பெற்றார்.
2016 ஏப்ரல் 17ஆம் தேதி இஸ்லாமிய மேட்ரிமோனியல் தளத்தில் ஹாதியா பதிவு செய்து தனக்கு வரன் பார்க்க தொடங்கியுள்ளார். அதில்தான் ஷபின் ஜஹான் அவருக்கு அறிமுகமாகியுள்ளார். இருவரும் சந்தித்துப் பேசியுள்ளனர். அந்த நேரத்தில் ஹாதியாவின் தந்தை நீதிமன்றத்தில் இரண்டாவது ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்கிறார். அதில், தனது மகளைச் சிரியாவுக்கு கடத்தி செல்லவுள்ளனர் என்றும், ஐ.எஸ். அமைப்பில் அவர் சேர்க்கப்படவுள்ளார் என்றும் தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் ஆஜரான ஹாதியா வழக்கம்போல் இதையும் மறுத்தார். தன்னிடம் பாஸ்போர்ட் இல்லாதபோது எவ்வாறு வெளிநாடு செல்ல முடியும் என்று தெரிவித்தார். ஆனால், இந்த முறை நீதிமன்றம் அவரைக் கண்காணிப்பில் வைக்க முடிவு செய்கிறது. தனது பெற்றோர்களுடன் செல்ல அவர் மறுத்ததால், எர்ணாகுளத்தில் உள்ள விடுதியில் அவர் தங்க வைக்கப்படுகிறார். இந்நிலையில், ‘செய்யாத தப்புக்கு நான் ஏன் சிறை வைக்கப்பட வேண்டும்’ என்று அவர் நீதிமன்றத்துக்குக் கடிதம் ஒன்றை எழுதுகிறார். இதையடுத்து அவர் திரும்பி செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.
இதற்கிடையே தனது சான்றிதழ்களைப் பெற்றோர் வைத்துள்ளதால் தன்னால் மருத்துவப் பணியை மேற்கொள்ள முடியவில்லை என்று நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுகிறார். இதையடுத்து, சான்றிதழ்களைத் திருப்பி தரும்படி பெற்றோர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அதே நாளில் (டிசம்பர் 19) ஹாதியா, ஜஹானை திருமணமும் செய்துகொள்கிறார். இந்தத் திருமணம் முன்னரே திட்டமிட்டது என்று கூறும் ஜஹான், ‘திருமணம் எளிமையாக நடந்தது. ஹாதியாவின் தந்தையையும் அழைத்தோம். ஆனால், அவர் வரவில்லை’ என்று தெரிவிக்கிறார்.
பின்னர் தனது கணவருடன் நீதிமன்றத்தில் ஹாதியா ஆஜரானார். இந்தத் திருமணத்துக்கு அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம் ஹாதியாவை விடுதிக்கே திரும்பி செல்லும்படி உத்தரவிடுகிறது.
இந்தத் திருமணம் தொடர்பாக விசாரணை நடத்திய, பெரிந்தல்மன்னாவின் துணை போலீஸ் கண்காணிப்பாளர் மோகன சந்திரன், திருமணத்தில் எந்தத் தவறும் நிகழவில்லை என்றே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஆனாலும், போலீஸின் அறிக்கை திருப்திகரமாக இல்லை என்று எண்ணிய நீதிமன்றம், ஜஹானின் வரலாற்றை ஆராயும்படி போலீஸுக்கு உத்தரவிடுகிறது. இது தொடர்பான விசாரணையில், ஜஹான் மீது குற்ற வழக்கு இருந்ததாகவும், ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருந்த மன்ஸி புராக்கியுடன் ஜஹானுக்குப் பழக்கம் இருந்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால், இதை ஜஹான் அடியோடு மறுக்கிறார். கல்லூரியில் படிக்கும்போது நிகழ்ந்த மாணவர் போராட்டம் காரணமாக அந்த வழக்கு பதியப்பட்டதாகவும், மன்ஸியுடன் தொடர்பு என்பது கட்டுக்கதை என்றும் தெரிவித்தார். தீவிரவாதத்துக்கு இஸ்லாமியத்தில் இடம் இல்லை என்றும் அவர் கூறினார். ஆனால், இதை ஏற்க மறுத்த கேரள உயர் நீதிமன்றம் அவர்களது திருமணத்தை ரத்து செய்தது. ஹாதியாவை அவரது பெற்றோருடன் செல்லும்படி உத்தரவிட்டது.
இந்த உத்தரவால் அதிர்ச்சியடைந்த ஜஹான் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி தேசிய புலனாய்வு அமைப்புக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளிக்கும் முன் ஹாதியாவிடன் விசாரணை நடத்த வேண்டும் என்று ஜஹான் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சமூக ஆர்வலர் ராகுல் ஈஸ்வர் ஒரு [வீடியோவை(https://twitter.com/RahulEaswar/status/898117719572103168) சமூக வலைதளத்தில் பதிவு செய்தார். ஹாதியாவின் வீட்டில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் ஹாதியாவின் தாயார், தனது மகள் தன்னையும் இஸ்லாமுக்கு மாறும்படி கூறுகிறார். ஒன்றரை ஆண்டுளுக்கு முன்பே மதம் மாற வேண்டும் என்று அவர் கூறிவந்தாள். உன் தந்தை உன்னைக் கஷ்டப்பட்டு படிக்க வைத்துள்ளார். அதுவே உனக்குப் பெரிய பரிசு தான் என்று அவளிடம் நான் கூறினேன் என்று தெரிவிக்கிறார்.
அப்போது, இஸ்லாமிய பெண்களுக்கான உடையில் இருந்த ஹாதியா குறுக்கிட்டு, என்னை இப்படி வைத்திருப்பது போதுமா என்று விரக்தியோடு கேட்டார். மேலும், நான் தொழுகையில் ஈடுபடும்போது அம்மை ஏன் என்னை அடிக்கிறாள். அவளிடமே கேளுங்கள் என்று குழந்தைத்தனம் மாறாமல் கேட்கிறார். தற்போது இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கப்போகிறது என்பதை இந்தியாவே உற்று நோக்கி வருகிறது.
நன்றி: Scroll
தமிழில்: முருகேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக