சனி, 2 செப்டம்பர், 2017

மாநிலதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களால் ஏன் கல்விதரம் குறையும்? பித்தாட்ட பாஜக நக்கிகள்!

மின்னம்பலம் : கல்வித்தரம் மேம்படுத்தப்பட வேண்டுமா? நிச்சயமாக என்பதில் ஐயமில்லை. ஆனால் கல்வித்தரம் என்பது என்னவோ மாநிலப்பாடத்திட்டத்தில் மட்டுமே மோசம் என்பதைப் போன்ற ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. இப்படிப் பேசுபவர்கள் நுழைவுத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களில் பெரும்பாலானோர் நுழைவுத்தேர்வு பயிற்சி மையங்களுக்குச் சென்றவர்கள் என்பதை வசதியாக மறைக்கிறார்கள்.
மாநிலத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவக்கல்லூரிக்குள் நுழையும் ஒரு மாணவரால் எப்படி மருத்துவக் கல்வியின் தரம் தாழ்ந்து போகிறது? இந்தியாவிலேயே பொது மருத்துவத்தில், சுகாதார சேவையில் தமிழகம் முன்னணி மாநிலங்களில் ஒன்று. நீட்டுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரி முதலாளிகளுக்கு ஆதரவானவர்கள் என்று வேறு பேசுகிறார்கள். நீட்டை எதிர்த்தவர்கள் யாரும் தனியார் கல்லூரிகளுக்கு விலக்கு அளியுங்கள் எனக்கோரவில்லை. அரசு மருத்துவக்கல்லூரியில் முந்தைய முறையிலேயே சேர்க்கை நடைபெற வேண்டும் என்று மட்டுமே குரல் கொடுத்தார்கள்.

மருத்துவக்கல்லூரிகளில் கல்வித்தரம் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களால் குறைந்துள்ளது என ஒரு கதை தொடர்ந்து சொல்லப்படுகிறது. ஆதாரம்? செவிவழி செய்தி தான். இதையே கொஞ்சம் மாற்றி CBSE பாடத்திட்டத்தில் படித்த பிள்ளைகள் கொள்ளைக்கார நுழைவுத்தேர்வு பயிற்சி கூடாரங்களில் படித்து விட்டு மருத்துவக்கல்வியில் நுழைந்து தான் வடக்கின் பொது சுகாதாரம் நாசமாக்கி விட்டார்கள் எனச் சொல்லவா? முட்டாள்தனமாக இருக்கிறதா?
உங்களுடைய வாதமும் அப்படித்தானே இருக்கிறது. இங்கே மருத்துவக் கல்லூரிக்குள் நுழைகிற மாணவர்கள் கிட்டத்தட்ட நூறு தாள்களில் தேர்ச்சி பெறுகிறார்கள். செய்முறை தேர்வுகளில் கடுமையாகச் சோதிக்கப்பட்டே தேர்ச்சி பெறுகிறார்கள். இந்தியாவின் தேர்ந்த மருத்துவர்கள் பலர் பாடம் நடத்துகிற பெருமைக்குரியவை தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகள். அடுத்து ஏன் அடுத்த வருடம் அந்தப் பெண் முயற்சிக்கக் கூடாது என வேறு கேட்கிறார்கள். வாய்ப்புகள் நிறைந்த கோபுரத்தில் உட்கார்ந்து கொண்டு 'ஏன் நீங்க அடுத்த முறை முயற்சி பண்ணக்கூடாது' என நீங்கள் கேட்கலாம். ஆனால் அந்தப் பிள்ளைகளுக்கு லட்சங்களைக் கொட்டி பயிற்சிக்கு அனுப்பும் வசதி படைத்த பெற்றோர்கள் இல்லை. தன்னுடைய மகளின் எதிர்காலம் என்னாகுமோ என அஞ்சியபடி அவர்களால் ஒரு ஆண்டை ஓட்ட முடியாது.
நீட் தேர்வில் அனிதா 70 மதிப்பெண்கள் பெற்றதால் சராசரி மாணவி என நம்பச் சொல்கிறீர்களா? கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ் வழிக்கல்வியில் படித்த மாணவர்களில் 0.9% பேரே அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் பிடித்தார்கள் எனத்தெரியுமா. அனிதாவுக்குப் பழைய முறையில் இடம் கிடைத்திருக்கும். தமிழகத்தின் தலைசிறந்த மருத்துவர்கள் குறித்து நிறைய வாசித்தவன் என்பதால் தமிழகத்தின் தன்னிகரிலா மருத்துவர்களில் பலர் அனிதாவை போன்ற எளிய பின்னணியில் இருந்து வந்தவர்கள் என உறுதியாகச் சொல்ல முடியும். அவர்கள் தமிழகத்திற்கு ஆற்றிய சேவைகள் என்றும் நன்றிக்குரியவை. இட ஒதுக்கீடு இல்லாமல் அம்பேத்கர் மெட்ரிகுலேசன் தேர்வில் வென்றிருக்க முடியாது. ஆனால், அதற்குப் பின்னர் அவர் புரிந்த சாதனைகளுக்கு இந்திய வரலாற்றில் இணையான ஒன்றில்லை.
இன்றைக்குத் தரம் குறித்து வாய் கிழிய பேசும் பலருக்கு ஆங்கிலேயரிடம் தமிழகப் பிராமணர்கள் உள்ளிட்ட ஆதிக்கச் சாதியினர் தகுதி மதிப்பெண்களைக் குறைத்ததாலே
கல்லூரிகளுக்குள் நுழைந்த வரலாறு தெரியுமா எனத் தெரியவில்லை. (http://www.firstpost.com/…/why-discuss-aarakshan-with-an-im…) அப்போது கல்விக்கூடங்களுக்குள் நுழையக்கூட வாய்ப்பில்லாதவர்களுக்கான மிகச்சில வாய்ப்புகளையும் தரம் எனக் காணடிப்பீர்கள் என்றால் அது அநீதி மட்டுமே. ஒழுங்கான வாய்ப்புகளும், ,ஊக்கமும் கிடைத்தால் ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருந்து எழும் மாணவர்கள் உங்களைப்போன்ற 'தரமான, திறமையான' மாணவர்களை விடச் சிறப்பாகச் சாதிப்பார்கள். கோத்தாரி சுட்டிக்காட்டுவதைப் போலப் பணம் இருக்கிறவனுக்கே தரமான கல்வி என்கிற இருமைத்தன்மை (dualism) இருக்கிற நாட்டில், தரமான கல்வி நிறுவனங்கள் அருகியிருக்கும் தேசத்தில் 'தரம் தரம்' எனப் பேசிக்கொண்டு உங்களுடைய அரசியலை செய்யுங்கள்.
தற்கொலை தீர்வில்லை. ஆனால், நம்முடைய கல்வி முறை, மேட்டிமையான முன்முடிவுகள், எல்லாருக்கும் ஒரே நுழைவுத்தேர்வு பொருந்தும் என்கிற பிழையான சிந்தனை ஆகியவை குறித்தும் சிந்தியுங்கள். மருத்துவக்கல்வியின் தரம் உயர MCI ஐ சீர்செய்ய வேண்டாம், மருத்துவப் பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டாம், கல்லூரிகளின் உள்கட்டமைப்பு உயர்த்தப்பட வேண்டாம். நீட் மட்டும் போதும். அப்படித்தானே? எப்படி ஆள் பற்றாக்குறையால், பணிச்சுமையால் அவதிப்படும் பொதுச் சுகாதாரத்தைக் காப்பாற்றுவது என யோசிக்காமல் நீட் என்பதைப் பிணி தீர்க்கும் அருமருந்து என அளக்காதீர்கள். நீட்டே தரம் உயர்த்தும் என நம்பினால் உங்கள் மண்டையில் எதுவுமில்லை, இதயத்தில் ஈரம் சற்றுமில்லை.
நன்றி: முகநூல் பதிவு பூ.கோ.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக