சனி, 9 செப்டம்பர், 2017

வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடே, வீதிக்கு வந்து போராடு! பள்ளி மாணவிகளின் மறியல் போராட்டம்!

நக்கீரன் : நீட் தேர்வால் மருத்துவக் கல்வி வாய்ப்பை இழந்து, தற்கொலை செய்து
கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு தொடர்ந்து 8 வது நாளாக தமிழகம் முழுவதும் தன்னொழுச்சியாக பள்ளி, கல்லூரி மாணவர்களின் போராட்டம் நடந்து வருகிறது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு முழு விலக்கு வேண்டும் என்பதில் மாணவர்கள் உறுதியாக இருந்து வருகிறார்கள். மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக பல கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் ராஜாஜி சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலை பள்ளியின் 11 மற்றும் 12ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் லயோலா கல்லூரி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். பள்ளி விடுமுறை நாளான இன்று 10, மற்றும் 11 & 12 வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகளுக்காக பள்ளி வந்த மாணவிகள், சிறப்பு வகுப்புகள் முடிந்ததும் லயோலா கல்லூரி அருகேயுள்ள மகாலிங்கபுரம் சாலையில் சரியாக மதியம் 12 மணியளவில் தங்களது போராட்டத்தை தொடங்கினர். போராட்டம் நடப்பதாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது பள்ளி மாணவிகள் என்பதால் போலீசார் செய்வது அறியாது சிறுது நேரம் திகைத்தனர்.

 இதையடுத்து மேல்அதிகாரிகளுக்கு தகவல் அளித்து அவர்களின் பதில் உத்தரவுக்காக காத்திருந்தனர். இதற்கிடையே போலீசார் மாணவிகளிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், மாணவிகள் அதனை ஏற்க மறுத்தனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை பற்றி எங்களுக்கு கவலையில்லை, நீட் தேர்வால் அனிதாவின் மருத்துவர் கனவு கலைந்தது, நாளை இதே நிலை தான் எங்களுக்கும். இன்று அனிதாவுக்கு நடந்தது போல் நாளை வேறு யாருக்கும் நடந்து விடக்கூடாது. அதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்து தொர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மேலும் போராட்டத்தின் போது மாணவிகள் நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ஜல்லிக்கட்டுக்கு பீட்டா, அனிதா சாவுக்கு நீட்டா? வேண்டாம், வேண்டாம் நீட் தேர்வு வேண்டாம்...! தடை செய், தடை செய், நீட் தேர்வை தடை செய்...! மருந்து வாங்க சீட்டா? நாங்க படிக்க நீட்டா? வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடே, வீதிக்கு வந்து போராடு...! அழிக்காதே, அழிக்காதே மருத்துவக் கனவை அழிக்காதே...! என்று நீட்டுக்கு எதிராக பலத்த சத்தத்துடன் ஒலித்த இந்த பள்ளி குழந்தைகளின் முழக்கங்கள் வீதியில் வேடிக்கை பார்த்தவர்களையும் இறங்கி போராட்டத்திற்கு வர தூண்டியது. இதற்குள் தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோர்களும் விரைந்து வந்தனர்.

அதில் ஒரு சில பெற்றோர்கள் மாணவிகளை போராட்டம் எல்லாம் வேண்டாம். நமக்கு எதற்கு இதெல்லாம் என வீட்டிற்கு அழைத்தனர். ஒரு சில பெற்றோர்கள் மாணவிகளை தொடர்ந்து போராடுவதற்கு ஊக்கம் அழித்தனர். நேரம் அதிகரித்துக்கொண்டே செல்ல, மறியலில் ஈடுபட்ட மாணவிகளை சாலையின் நடுவில் இருந்து அப்புறப்படுத்தி, சாலையோரம் கயிறு கட்டி, அவர்களை சாலையின் நடுவில் வரவிடாமல் தடுக்கும் நடவடிக்கையில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டனர். ஆனால் போலீசாரின் தடுப்புகளை மீறி மாணவிகள் தொடர்ந்து சாலையின் நடுவே மீண்டும், மீண்டும் வந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் காவல் துறையினர் செய்வது அறியாது திணறினர். மதியம் 12 மணிக்கு தொடங்கிய இந்த மறியல் மதியம் 2 மணி வரை ஆகியும் போராட்டம் தொடர்ந்தது. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கிட்ட தட்ட போராட்டம் தொடங்கி இரண்டு மணி நேரம் கழித்து சம்பவ இடத்துக்கு காவல்துறை உயர்அதிகாரிகள், பள்ளியின் தலைமை ஆசிரியர் என அனைவரும் ஒரு சேர மாணவிகளிடம் பேசி அவர்களின் போராட்டத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

இதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்ற மாணவிகள், பள்ளி நுழைவுவாயிலில் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். தலைமை ஆசிரியர் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்றும் திங்கள் அன்று நடைபெறும் காலண்டுத் தேர்வுக்கு தங்களை அனுமதிக்க வேண்டும் என்றும் போராட்டத்தை தூண்டி விட்டதாக கைது செய்த 3 கல்லூரி மாணவர்களை விடுவிக்குமாறும் தொடர் முழக்கங்களுடன் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து காவல்துறையினர் கைது செய்த கல்லூரி மாணவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று உத்தரவாதம் அளித்தனர். இதேபோல் தலைமை ஆசிரியரும் மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று உத்தரவாதம் அளித்தனர். இதையடுத்து மாணவிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவர்கள் விடுவிக்கப்படவில்லை இதையறிந்த மாணவிகள் கைது செய்தவர்கள் விடுவிக்கப்படவில்லை என்றால் திங்கள் அன்று மீண்டும் எங்களது போராட்டம் தொடரும் என கூறிவிட்டு சென்றனர். படங்கள் - அசோக்குமார், செண்பகபாண்டியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக