சனி, 9 செப்டம்பர், 2017

ஜெயந்தி நடராஜன் வீட்டில் சி பி ஐ சோதனை ...ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக காங்கிரசில் இருந்து விலக்கப்பட்டவர்

ஜெயந்தி  வீட்டில் சி.பி.ஐ.!
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனின் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று (செப்டம்பர் 09) திடீரென சோதனை நடத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரான ஜெயந்தி நடராஜன் கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக பணிப்புரிந்தார். 2013ஆம் ஆண்டு திடீரென அமைச்சர் பதவியிலிருந்து விலகிய இவர், 2014ஆம் ஆண்டு ஜனவரியில் கட்சியில் இருந்தும் விலகினார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீதும் கடும் குற்றச்சாட்டுகளைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய அவர், இதுவரை எந்த அரசியல் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் இது குறித்து பேசிய நரேந்திர மோடி, சுற்றுச்சூழல் துறையில் ‘ஜெயந்தி வரி’ வசூலிக்கப்பட்டதாக விமர்சித்தார். இந்த பண முதலை முன்னாள் முதமைச்சர் பக்தவத்சலத்தின் மகள் ஆவார்

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 09) மாலை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜெயந்தி நடராஜன் வீட்டுக்கு வந்த 10க்கும் மேற்பட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். சி.பி.ஐ. சோதனையில், வீட்டில் இருந்தவர்கள் யாரையும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் ஜெயந்தி நடராஜனின் அலுவலகங்கள் மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களிலும் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜெயந்தி நடராஜன் அமைச்சராக இருந்த போது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சில நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியதாக புகார் எழுந்துள்ளது. ஆனால், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தச் சோதனை எதற்காக என்ற விபரம் இதுவரை தெரியவில்லை. ஜெயந்தி நடராஜன் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்தி வரும் சோதனை அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக