திங்கள், 4 செப்டம்பர், 2017

அனிதா சட்டம் இயற்றும்வரை போராடவேண்டும் .. ஒய்வு பெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன்

ஸ்டெதாஸ்கோப் இருக்க வேண்டிய கழுத்தில் தூக்குக்கயிற்றை இறுக்கி தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் பெயர் பல உணர்ச்சிப் போராட்டங்களைத் தமிழகத்தில் உருவாக்கியிருக்கிறது.
“இது வெறும் உணர்ச்சிப் போராட்டம் மட்டுமல்ல; அனிதாவின் மரணம் சமூகநீதிப் போராட்டச் சாலையின் மைல்கல்லாக மாற வேண்டும். அதற்கு கட்சிகளைக் கடந்த தமிழகச் செயற்பாட்டாளர்கள் ஒன்று சேர வேண்டும். கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் நிரந்தர விலக்குச் சட்டம் நடைமுறைக்கு வர வேண்டும். அதற்கு ‘அனிதா சட்டம்’ என்று பெயரிடப்பட வேண்டும்” என்று கோரிக்கைக் குரல்கள் எழுந்திருக்கின்றன.
இந்தக் குரல்கள் சாதாரணமானவர்களின் குரல்கள் அல்ல. ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் போன்ற சட்ட நுணுக்கம் அறிந்தவர்கள்தான் இந்தக் குரலை எழுப்பியுள்ளனர்.
இதுபற்றித் தொலைக்காட்சி விவாதங்களில் பேசிய ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன்,


“1976ஆம் ஆண்டு அவசர நிலைக்கு முன்பு கல்வி என்பது மாநிலப் பட்டியலில் இருந்தது. அப்போது கல்வி தொடர்பான அனைத்து முடிவுகளும் மாநில அரசுகளின் கையில் இருந்தன. ஆனால் 76க்குப் பிறகு கல்வி, மத்திய அரசுக்குச் சொந்தமான பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதிலிருந்துதான் கல்வித்துறையில் மத்திய அரசின் ஆதிக்கம் அதிகமானதற்குக் காரணம். நாம் மீண்டும் போராடி... கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும். அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். அது நீண்ட கால லட்சியம். அது உடனடி சாத்தியம் அல்ல. ஏனென்றால், அதற்கு அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்.
ஆனால், கல்விப் பொதுப் பட்டியலிலே இருந்தால்கூட அதிலேயே நாம் சாதிக்க முடியும். அதாவது கடந்த 1-2-17 அன்று... அதாவது கடந்த பிப்ரவரி மாதம் தமிழகச் சட்டமன்றத்தில் நீட் விலக்குச் சட்டம் அனைத்துக் கட்சிகளாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்குப் பிறகு மே மாதம்தான் நீட் தேர்வே நடந்தது. இந்தச் சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தால் இந்தப் பிரச்னையே வரப்போவதில்லை.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் நீட்டுக்கு முழுமையான விலக்கு கோரவில்லை. அதை உற்று கவனித்தால் புரியும். தமிழகத்தில் மூன்றுவிதமான மருத்துவக் கல்வி நிலையங்கள் உள்ளன.
தமிழக அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகள். இவற்றில்தான் அனிதாவைப் போன்ற கிராமப்புற, ஏழை எளிய மக்கள் மருத்துவம் பயில முடியும். தமிழகத்தில் மொத்தம் 24 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 85 சதவிகிதம் தமிழக மாணவர்களுக்கும், மீது 15 சதவிகிதம் அகில இந்திய கோட்டா அதாவது நீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது.
அடுத்து, சுயநிதிக் கல்லூரிகளில் பல லட்சங்கள் வரை மருத்துவ இடங்களுக்கு கட்டணம். இவற்றில் 50 சதவிகிதம் தமிழக அரசுக்கு. மீதி 50 சதவிகிதம் நீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது.
மூன்றாவதாக, டீம்டு யுனிவர்சிட்டீஸ். அதாவது நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள். இவற்றில் நூறு சதவிகித இடங்களும் நீட் தான். ஆக, தமிழக அரசு கடந்த 1-2-17 அன்று இயற்றிய சட்டத்தில் நீட் தமிழகத்தில் இருந்து முற்றிலும் விரட்டியடிக்கப்படவில்லை. எனவே நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அனிதா போன்ற சூழல் வரவே வராது. அந்தச் சட்டத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றியதோடு நின்றுவிட்டது தமிழக அரசு. அதற்கு மத்திய அரசிடம் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற போதிய அழுத்தம் கொடுக்கவில்லை.
இன்னமும் இந்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற நமக்கு சாத்தியங்கள் இருக்கின்றன. அதாவது நாடாளுமன்றத்தின் 92ஆவது கமிட்டி மார்ச் 2016இல் ஓர் அறிக்கை கொடுத்திருக்கிறது. என்னவென்றால் எந்த ஒரு மாநிலம் நீட் வேண்டாம் என்று சொல்கிறதோ அதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அந்த கமிட்டி சொல்கிறது.
மேலும், இரண்டாவது முக்கிய விஷயமாக 2016 மே மாதம் உச்ச நீதிமன்றத்தில் மாடர்ன் டென்ட்டல் காலேஜ் ரிசர்ச் சென்டருக்கும் மத்தியப்பிரதேச அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், ‘எந்தெந்த மாநிலங்கள் பொது நுழைவுத் தேர்வில் இருந்து விலக்கு கேட்கிறதோ, அந்த மாநிலங்களுக்கு விலக்கு தர வேண்டும்’என்ற பொருளில் உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.
இதையெல்லாம் அறிந்த பிறகுதான் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, ‘நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு வேண்டும்’என்று பாளையங்கோட்டையிலே பேசுகிறார்கள்.
எனவே, தமிழகச் சட்டமன்றம் 1-2-17 அன்று இயற்றிய சட்டம் எல்லா வகையிலும் நியாயமானது. இது ஏழு மாதங்களாக குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்படாமல் கிடப்பில் கிடக்கிறது. இந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் பெற்றால் தமிழகத்தின் அரசு மருத்துவக் கல்லூரிகளில் நீட் இல்லாமல் ஏழை மாணவர்கள் சேர முடியும். அந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் பெற்று, அதற்கு அனிதா சட்டம் என்று பெயரிடப்பட வேண்டும் என்று தமிழகம் விரும்புகிறது” என்று விரிவாக விளக்கியிருக்கிறார்.
ஆக... தமிழக அரசோ, இந்திய அரசோ அனிதா சட்டம் என்ற ஒன்றை இனியும் புதிதாக நிறைவேற்ற வேண்டிய தேவையில்லை. 1-2-17 அன்று தமிழகச் சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றிய நீட் விலக்கு சட்டத்துக்கு மத்திய அரசு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்படி அந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் கிடைக்கப்பெற்று, அந்தச் சட்டத்தின் பெயரை அனிதா சட்டம் என்று மாற்ற வேண்டும்.
அனிதா கொடுத்த உயிரை, தமிழக அரசின் இந்தச் சட்டத்துக்குக் கொடுத்து அதை அனிதா சட்டமாக மாற்றுவதே நம்முன் உள்ள தலையாய பணி. இதற்கான அரசியல் அழுத்தங்கள், சமூக அழுத்தங்கள், போராட்ட அழுத்தங்கள் எல்லாம் ஒன்று சேரும்போதுதான் அனிதா சட்டம் உயிர் பெறும்.
-ஆரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக