வெள்ளி, 22 செப்டம்பர், 2017

காவிரி பிரச்சனையில் திராவிட ஆட்சிகள் ... ஆஃப் பாயில் அறிவுஜீவிகள்

Sowmian Vaidyanathan : காவிரி பிரச்சினையைப் பற்றி பேசும் போதெல்லாம், திராவிட ஆட்சிகளை குறை கூறுவதை காரணமே தெரியாமல்..., அப்படி குறை கூறினால் தான் சமூகத்தில் தன்னை பெரிய ஆளாக காட்டிக்கொள்ள முடியும் என்ற எண்ணத்தோடு கருத்துச் சொல்லும் சில ஆஃப் பாயில் அறிவு ஜீவிகள்....
அணை கட்டுவது சம்பந்தமாக இரு விதமான குற்றச்சாட்டுகளை பதிவு செய்கின்றார்கள்...!
அதில் முதலாவது...
கர்நாடகா காவிரியின் குறுக்கே ஐந்து அணைகளைக் கட்டி விட்டது, ஆறாவது அணைக்கு அடிக்கோலி விட்டது. இதை கடந்த அரை நூற்றாண்டாக தமிழகத்தை ஆளும் திராவிடக் கட்சிகள் தடுக்கத் தவறி விட்டன..! இது தான் அந்தக் குற்றச்சாட்டு.
அட அப்ரசண்டிகளா.... காவிரியில் உற்பத்தி ஆகும் தண்ணியை குறிப்பிட்ட சதவிகிதம், தமிழகத்திற்கு கர்நாடகா தடையின்றி அனுப்பி வைக்க வேண்டும். அதை மட்டுமே நாம் கோரிக்கையாக வைக்க முடியும். அவன் பங்கு தண்ணீரை சேமித்து வைத்துக்கொண்டு, ஆண்டு முழுவதும், குடிநீருக்கோ, பாசனத்திற்கோ, சுற்றுச்சூழலுக்கோ அல்லது வேறு எந்த எழவுக்கோ பயன் படுத்த அவனுக்கு முழு உரிமை இருக்கு.

என் பங்கு தண்ணிய மரியாதையா திறந்து விட்டுடு... அப்டீன்னு தான் நாம அழுத்தம் திருத்தமா கேட்கணும். அவன் இன்னும் பத்து அணையை கட்டிக்கொண்டாலும் நாம் கேட்க உரிமை இல்லை. நம் பங்கை கேட்க மட்டுமே நமக்கு முழு உரிமை இருக்கிறது. ஓக்கேவா..?!
அடுத்த குற்றச்சாடு....
கடந்த ஐம்பது ஆண்டுகளில் காவிரியின் குறுக்கே அணைகளே கட்டவில்லை என்பது தான்.
மலைச் சார்ந்த பகுதியாக இருந்தாலோ அல்லது மேடுபள்ளம் நிறைந்த பீடபூமியாக இருந்தாலோ தான் அணைகள் கட்ட முடியும் என்ற பொதுப் புத்தி ஒரு பக்கம் இருக்கட்டும்.
அதையும் தாண்டி காவிரி தமிழகத்தின் உள்ளே நுழைந்தவுடனேயே அதை சிந்தாமல் சிதறாமல் தேக்கி வைத்து, திட்டமிட்டு வெளியேற்ற... அதாவது பயன் படுத்த இயற்கை அரண் சூழ்ந்த அற்புதமான மேட்டூர் அணை ஏற்கனவே கட்டி பயன்பாட்டில் இருக்கிறது.
அந்த தண்ணீர் மலை சார்ந்த பகுதிகளை எல்லாம் கடந்து வந்து சமவெளிப்பரப்பான... மலைகளே இல்லாத மாவட்டமான ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் நுழைவதற்கு முன்பாக... திருச்சியில்.... 1200 வருடங்களுக்கு முன்பே கரிகால் சோழனால் அற்புதமான அணை கட்டப்பட்டு விட்டது.
அதன் பிறகு துவங்குகின்ற தஞ்சை மாவட்டம், கிழக்குக் கடற்கரை வரை மிகச் சமதளமாகவே... அதாவது நெல் பயிர் செய்வதற்கு ஏற்ற நிலங்களாக பரந்து விரிந்து கிடக்கிறது. அந்த இடத்தில் அணைகள் எதுவும் கட்டுவதற்கான வாய்ப்பு என்பது ஒரு சதவிகிதம் கூட இல்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அந்த நீரை பயன்படுத்தி பயிர் செய்ய வேண்டிய கடைசி கட்டத்தில் அணை கட்டச் சொல்வதை விட நகை முரண் வேறு எதுவுமே இருக்க முடியாது என்பது தான் உண்மை..!
அதற்காக அப்படியே நாம் விட்டு விட்டோமா என்றால் அது தான் இல்லை. சோழ மன்னர்கள் ஆட்சிக் காலங்களிலேயே, காவிரி கல்லணை கடந்து தஞ்சை தரணிக்குள் நுழைந்தது தொட்டு, வெள்ளப்பெருக்கின் போது இயற்கையாக எழும் காட்டாறுகளையும் சேர்த்து, செயற்கையாக உருவாக்கப்பட்ட முப்பத்தி ஐந்துக்கும் அதிகமான கிளை நதிகள்... அந்த கிளை நதிகளுக்கும் சில கிளை நதிகள், அவற்றிலிருந்து பெரும் கால்வாய்கள், சிறு கால்வாய்கள், வாய்க்கால்கள், கன்னிகள் என்று இப்படியாக சில நூறு நீர்ச்சாலைகள் அமைக்கப்பெற்று... அவை ஆக்டோபஸ் மாதிரியாக பழைய தஞ்சை மாவட்டத்தை இண்டு இடுக்கு விடாமல் துளைத்துச் சென்று கிழக்குக் கடற்கரையின் பல்வேறு இடங்களில் கலக்கின்றன.
அதன் காரணமாகத்தான் பழைய தஞ்சை மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக இருந்து வந்தது..!
மேலும் இந்த கிளை நதிகளில் ஆங்காங்கே வட்டார வழக்கில் சட்ரஸ் என அழைக்கப்படும், தடுப்பணைகள் கிட்டத்தட்ட 60க்கும் மேலாக தஞ்சை மாவட்டம் முழுவதும் கடந்த 60 ஆண்டுகளில் கட்டப்பட்டு, நீர்ப்பாசனத்திற்கு முறை வைத்து தண்ணீர் திறந்து விடவும், அனைத்து பகுதிகளுக்கும் நியாயமான தண்ணீர் விநியோகம் செய்யவும், ஆங்காங்கே இருக்கும் குளங்களை வேகமாக நிறப்புவதற்கும் கட்டப்பட்டுள்ளன.
இதற்கும் மேலாக மழைக்காலங்களில் கர்நாடகாவில் இருந்து அளவுக்கு அதிகமாக வரும் நீரை மேட்டூரில் தேக்கி நிறுத்த இயலாத நிலையில்... கல்லணையும் நிறம்பிய நிலையில் மீதமிருக்கும் நீரை காவிரியிலேயே திறந்து விட்டு விரயமாக்காமல், அங்கிருந்து கொள்ளிடம் என்ற காட்டாற்றை சீர் செய்து தெளிவான நீர்வழிச் சாலையாக்கி.... அதை காவிரிக்கு இணையாக வடக்குப் புறத்தில் கொண்டு சென்று தஞ்சை - தென்னாற்காடு எல்லையான மகேந்திரபள்ளியில் சென்று கடலில் கலப்பது போல பண்டைய சோழ மன்னர்களே அமைத்து விட்டனர்.
அந்தத் தண்ணீரும் விரயமாகாமல் இருக்க அதிலிருந்தும் சில கிளை ஆறுகள், கால்வாய்களை வெட்டி தென்னாற்காடு மாவட்டத்தின் பெரும் பகுதி பாசனம் பெறுவதற்காக நூற்றுக்கணக்கான ஏரிகளை வெட்டி அதில் அந்த நீரை நிரப்பும் வசதியையும் அவர்களே செய்து வைத்து விட்டனர். அந்த ஏரிகளின் பிரம்மாண்டமான ஒன்று தான் வீராணம் ஏரி.
அந்த வீராணம் ஏரித் தண்ணீரைத்தான் இன்றைக்கு சென்னை வாசிகள் குடிநீருக்காக பயன்படுத்தி வருகின்றனர் என்பது கூடுதல் தகவல். அந்த வீராணத்தின் சப்ளையரான கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் தான் தமிழகத்தின் பல்வேறு மாவட்ட மக்கள் குடிநீர் பெருகின்றனர் என்பதும் அவற்றை சாதித்தது திமுக ஆட்சி தான் என்பதும் ஆஃப் பாயில்களுக்கு எட்டாத விஷயம்..!
ஆகவே ஆஃப் பாயில் அறிவுஜீவிகள் இதையெல்லாம் இங்கே ஒரு முறை வந்து சுற்றிப்பார்த்துவிட்டு, வெட்டித்தனமாக திராவிட கட்சிகளை... அதிலும் குறிப்பாக திமுகவை குறை கூறுவதை நிறுத்தி விட்டு, ஒருங்கிணைந்து போராடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அமல்படுத்த எந்தத் தடையும் இல்லாதவாறு பார்த்துக்கொண்டாலே, போதும்.... டெல்ட்டா மாவட்டங்கள் தமிழகத்திற்கே படியளந்து விடும்...!
அதோடு மட்டுமாலாமல், காவிரி நடுவர் மன்றத்தை அமைத்துத் தந்தது யார்? அதைத் தடுத்து வந்தது யார்? என்பதையும் புரிந்து கொண்டு செயல்பட்டால் தமிழகம் தானாகவே உருப்பட்டுவிடும்...!Sowmian Vaidyanathan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக