வெள்ளி, 22 செப்டம்பர், 2017

ஸ்டாலின் ,வைகோ ,திருமா,சீமான் ,திருமுருகன் காந்தி யார் சிறந்த தலைவர் ?

Shalin Maria Lawrence : யார் சிறந்த தலைவர் ? இதில் யார் சிறந்த தலைவர் என்று தீர்மானிப்பது அவர்கள் அல்ல அவர்களை பின்தொடருபவர்கள்தான் .
இந்திய ஒரு ஜனநாயக நாடு இங்கே நடைபெறுவது ஜனநாயக அடிப்படையிலான தேர்வுமுறை .யார் எங்கு போட்டி போட்டாலும் ,யார் கட்சி ஆரம்பித்தாலும் சரி இங்கே ஒரு சராசரி தொண்டன் தான் தீர்மானிக்கிறான் அவனை யார் வழிநடத்த போவது என்று ,அவளை யார் ஆளப்போவது என்று .
An effective leader is nothing but a by - product of his value system ,intelligence ,selflessness and last but the very very important factor the "Supporters/followers" .
ஒரு பயனுள்ள சிறந்த தலைவன் அமைவது அவனின் கொள்கைகள் ,அறிவுத்திறன் ,சுயநலமின்மை மற்றும் மிக மிக முக்கியமாக அவனின் தொண்டர்களை பொறுத்தேதான் .
நல்ல தொண்டர்கள் எப்படி இருக்க வேண்டும் ?
தலைவனை விட அவன் கொள்கைகளை அதிகம் அறிந்தவர்களாகவும் ,தலைவனின் அறிவாற்றல் ,குற்றப்பின்னணிகள் ,கொள்கை மாறுதல்களையும் தெரிந்தவர்களாய் இருக்கவேண்டும் .தலைவனின் நிறை குறைகளை தெளிந்தவர்களாய் இருத்தல் வேண்டும் .தைரியசாலிகளாய் இருக்கவேண்டும் .
இப்படிப்பட்ட நல்ல தொண்டர்களே பெரியாரை உருவாக்கினார்கள் ,அண்ணாவை உருவாக்கினார்கள் ,கலைஞரை உருவாக்கினார்கள் ,காமராஜரை உருவாக்கினார்கள் .

ஆயிரம் தான் நீங்கள் குறை சொன்னாலும் திராவிட தொண்டர்கள் தாங்கள் பின்பற்றும் தலைவர்களை விட கூட அதிகம் தெரிந்தவர்களாய் இருந்தார்கள் . தாங்கள் பல காலங்களாய் தொடர்ந்த நேசித்த தலைவர்கள் தவறிழைத்த பொது அவர்களை துணிவோடு கேள்வி கேட்டார்கள் .கடைசிவரை தலைவர்களை சிறப்பாக இயங்க வைத்தார்கள் .
இன்று கூட நானும் எனக்கு தெரிந்தவர்களும் நாங்கள் ஆதரிக்கும் கட்சிகள் தவறிழைக்கும் பொது எங்கள் தலைவர்களை கேள்வி கேட்கிறோம் .அவர்களை மிரட்டி விடுகிறோம் .
ஆனால்...
இப்பொழுது சில புதிய தலைவர்களை,குறிப்பாக தமிழ் தேசியம் பேசும் தலைவர்களை ஆதரிக்கும் தொண்டர்கள் எப்படி இருக்கிறார்கள் ?
இவர்கள் இவர்களின் தலைவர்களை மனிதர்களாக அல்ல ,மாறாக கடவுள்களாக ,கடவுள்களின் அவதாரமாக பார்க்கிறார்கள் .
தவறுகளே செய்ய முடியாத தெய்வங்களாக அவர்களை பார்க்கிறார்கள் ,வழிபடுகிறார்கள் . அந்த தெய்வங்களும் தாங்களும் அப்படியே என்று நம்ப ஆரம்பிக்கின்றனர் .
இந்த நவீன யுகத்து தொண்டர்கள் அதிகம் படித்திருக்கிறார்கள் ,IT கம்பனிகளில் வேலை செய்கிறார்கள் ஆனால் ஆதர்ச நாயகர்களான தங்கள் தலைவர்களை கேள்வி கேட்கும் தைரியமோ ,அவர்கள் கொள்கை தவறி போகும்போது அதை கண்டுபிடிக்கும் அறிவோ இம்மியளவு கூட இல்லாமல் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள் .
இவர்களை பொறுத்தவரை இவர்களின் அண்ணன் சொன்னதே வாக்கு,இவர்கள் தோழர் சொன்னதே உண்மை . அது உண்மையா ,பொய்யா என்று கூட ஆராய்ந்து பார்க்கும் திறனை இழந்தவர்களாய் இருக்கிறார்கள் .
அவர்கள் கைகாட்டும் மனிதர்களை புனிதர்களாகவும் ,அவர்கள் திட்டும் மனிதர்களை தமிழின துரோகிகளாகவும் சட்டெனெ ஒத்துக்கொள்கிறார்கள் .அதிலிருக்கும் உண்மைகளை ,ஆதாரங்களை அறிய அவர்கள் முற்படுவதில்லை .
மாடுகள் இருக்கும் ,அது எங்கெல்லாம் முதலாளி இழுத்து கொண்டுபோகிறார்களோ அங்கெல்லாம் தெம்மென போகும் ,கழனி நீருக்காக அந்த மாடுகள் முதலாளி சொன்னதிற்கெல்லாம் தலையாட்டும் .அது மாடு .
ஆனால் இவர்களோ மனிதர்களாக இருந்தபோதும் ஆறாம் அறிவை புறந்தள்ளிவிட்டு அந்த மாட்டை போல் தங்களின் உணர்ச்சிக்கு ,ரத்தத்தின் சூட்டிற்கு தீனிபோடும் வெறும் நரம்புபுடைக்கும் பேச்சாற்றலுக்கு ஈர்க்கப்பட்டு மாடாகவே மாறிவிடுகிறார்கள் . கண்களில் நரம்பு துடிக்க பேசினால் போதும் ,கருப்பு சட்டை போட்டால் போதும் ,ஐந்து வார்த்தைக்கு ஒரு வார்த்தை "தமிழர்கள் " தமிழர்கள் " என்று முழங்கினால் போதும் அவர்களின் கொள்கை என்ன ,அவர்களின் பின்னணி என்ன ,அவர்களுக்கு உண்மையிலேயே சமூகநீதி அறிவிருக்கிறதா என்று பார்க்காமல் அவர்களை அப்படியே பின்பற்ற ஆரம்பித்துவிடுகிறார்கள் .
எனக்கு தெரிந்து எழுச்சிமிகு வசனத்தை அஜித் ,விஜய் ,விஷால் கூட பேசி விடுகிறார்கள் ,உடனே அவர்களை நம்பி போய் விடலாமா ? அவர்களின் கருத்தியல் என்னவென்று பார்க்க வேண்டாமா ? இந்த நடிகர்களை போலத்தான் சில தலைவர்கள் இருக்கிறார்கள் ,இந்த நடிகர்களின் வெறிபிடித்த ரசிகர்களை போலத்தான் இந்த அரசியல் தொண்டர்களும் நடந்து கொள்கிறார்கள் .இரண்டிற்கும் வித்தியாசமே இல்லை . It is just mere "HERO WORSHIP " Dammit !.
இவர்களுக்கெல்லாம் தமிழ்நாட்டின் வரலாறு தெரியாது ,சமூகநீதி தெரியாது ,ஆறாம் அறிவை உபயோகிக்க தெரியாது ,புத்தக வாசிப்பு கிடையாது .இவர்கள் தங்கள் தலைவர்கள் சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளைகள் .அவ்வளவேதான் .ரோபோக்கள் மாதிரி .
நாளை தலைவர் நரம்பு புடைக்க பேசி துப்பாக்கி எடுத்து சுற்றி உள்ளவர்களை சுட சொன்னால் செய்வார்கள் . ஹிட்லரின் மக்களும் இதைதான் செய்தார்கள் . தங்களை உயர்ந்த இனமாய் நினைத்துக்கொண்டார்கள்,அப்பாவி மக்களை கொன்று குவித்தார்கள் . உணர்ச்சியை கிளப்பிவிட்டால் போதும் எது சரி எது தவறு என்று பகுப்பாய தெரியாதவர்கள் இவர்கள் .
இவர்கள் இப்பொழுது என்னை திருப்பி கேட்கலாம் . நீங்கள் பெரியாரை தூக்கி வைத்து ஆடுகிறீர்களே ? அது இதில் சேராதா என்று .சரி சொல்கிறேன் .
பெரியார் பேசியதை அவரின் உண்மை தொண்டர்கள் (இப்பொழுது குதித்து கொண்டிருக்கும் முகநூல் அரைவேக்காடு பெரியாரிஸ்டுகள் தவிர ) அவரை படிக்காமல் ,பலவருடம் உள்வாங்காமல் ,அவரின் கருத்தியல் கொள்கைகளை ஆராயாமல் ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல .
இவர்கள் பல வருடமாய் பெரியாரின் எழுத்துக்களை படித்தும் ,அவரின் கொள்கைகள்பால் ஈர்க்கப்பட்டு அவரை ஏற்றுக்கொண்டவர்களாய் இருப்பார்கள் . பெரியார் பேசியது எல்லாம் முழுக்க முழுக்க பகுத்தறிவு ,சமூகநீதி .அது உலகம் முழுவதும் ஒன்றுதான் ,அதில் மாற்று கருத்துக்கு இடமே இல்லை .அதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் .அதை ஏற்றுக்கொள்ளாதவர்கள்தான் தவறான இடத்தில இருக்கிறார்கள் .
பெரியாரின் எழுத்துக்களை ,கருத்தியல்களை உலகத்தில் புகழ்பெற்ற மானுடவியலாளர்கள் ,உளவியல் நிபுணர்கள் ,மனித உரிமை காப்பாளர்கள் யாரிடமும் காட்டினாலும் அவர்கள் பெரியார் சொன்னதை சரி என்றே சொல்லுவார்கள் .இதே உங்கள் அண்ணன் ,தோழர் என்று நீங்கள் வழிபடும் மனிதர்களை analyze செய்ய சொல்லி பாருங்கள் . அதிர்ச்சிக்குள்ளாவீர்கள் .
ஆனால் பெரியாரிடம் கூட கருத்து வேறுபாடு கொண்டு தான் அண்ணா சென்றார் .இன்னும் பல தலைவர்களை ,ஏன் ஜெயலலிதாவிடம் கூட குறை கண்டுபிடித்து வெளியேறியவர்கள் உண்டு . அதற்கான space அவர்களுக்கு அவர்களின் தலைவர்களிடம் இருந்து கிடைத்தது .
ஆனால் உங்கள் தலைவர்கள் உங்களை தொண்டர்களாக கூட இல்லை ,மாடுகளை விட கேவலமானவர்களாய் நினைத்து கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்கள் கொள்கை பிடிப்பில்லாமல் ,மாற்றி மாற்றி பேசி ,சமூகநீதிக்கு எதிராய் செயல்படுவதில் இருந்தே தெரிகிறது. உங்களை அவர்கள் முட்டாள்களாய் நினைக்கிறார்கள் .உங்கள் அறியாமைதான் அவர்களின் மூலதனமே .Dot .
முதலில் நீங்கள் நல்ல தொண்டர்களாக உருவாகுங்கள்,இல்லை என்றால் நீங்கள் செய்து கொண்டிருக்கும் காரியத்திற்கும் ,யானை தன் மேல் மண்ணை அள்ளி போட்டுக்கொள்ளும் செயலுக்கும் வித்தியாசம் இல்லை .
ஒரு ரகசியத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ளுகிறேன் . தொண்டர்களாகிய நீங்கள் தலைமை பண்புகளை உருவாக்கி கொள்ளும்போதுதான் உங்களால் நல்ல தலைவர்களை தேடிக்கொள்ளவும் முடியும்.
ஷாலின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக