ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

தமிழகமெங்கும் கொழுந்து விட்டு எரிகிறது நீட் தீ ! வலைதளங்களில் / சமுக களங்களில் எங்கும் ,,,,,

பல நாடுகளின் உரிமைப் போராட்டங்களைப் பற்றித் தெரிந்தும் தெரியாமலும் போராடிக்கொண்டிருக்கும், ஒவ்வொரு தமிழக மாணவனும் மாணவியும் அவர்களது நோக்கத்தில் தெளிவாக இருக்கிறார்கள்
சமூக வலைதளங்களில் பரவும் ‘தீ’!மின்னம்பலம் : சிவா: நுங்கம்பாக்கத்தின் மகாலிங்கபுரம் பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் செய்த சாலை மறியல், தமிழகம் முழுவதும் போராடிக்கொண்டிருக்கும் மக்களிடமுள்ள உரிமைத் தீயை மேலும் உயர்ந்து எரிய வழிவகை செய்திருக்கிறது.
டிவிக்களில் காட்டப்பட்ட அந்தப் போராட்டம், மாணவிகளின் உரிமை வேட்கையை வெளிப்படுத்தியது போலவே; நமது பத்திரிகையாளர் எடுத்த போட்டோக்கள் அவர்களது நெஞ்சுரத்தைத் தமிழகத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே தெரிவித்திருக்கிறது.

தியானன்மென் சதுக்கப் போராட்டம் 1989 - சீனா
உலோக உடலால் ஆன இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களைக் கைகளைப் பிடித்துக்கொண்டு மறித்து நின்ற அந்த தைரியத்தை யாராலும் திணித்துவிடவோ, தூண்டிவிடவோ முடியாது என்பதை இந்நாடு புரிந்துகொள்ளாதது ஒன்றே, இப்போராட்டம் இத்தனை நாள்கள் தொடர்ந்துகொண்டிருப்பதற்குக் காரணம். அடுப்பில் பற்ற வைத்த தீ அணையலாம். தானே பற்றிக்கொண்ட காட்டுத் தீ இறுதிவரை செல்லாமல் நிற்காதென்பதை வரலாற்றின் சிவப்புப் பக்கங்களிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

கார்களை வழிமறித்து உச்சி வெயிலில் தார் சாலையில் அமர்ந்திருந்த அவ்விரு தளிர்களையும் தியானன்மென் சதுக்கத்தினருகே ராணுவ டேங்கர்களை தடுத்து நிறுத்திய போராட்டக்காரருடன் பொருத்திப் பார்க்கத் தோன்றிய ஒரு நொடி கொடுத்த பரவசம்தான், களத்தில் ஒவ்வொரு நொடியும் போராடிக் கொண்டிருப்பவர்களை நாளுக்கு நாள் அதிக நெஞ்சுரத்துடன், கல்வி கற்பதற்கான தங்களது அடிப்படை உரிமையைப் பரித்ததை நோக்கிக் கேள்வியெழுப்ப வைத்திருக்கிறது.

மாணவிகளை அப்புறப்படுத்த முயன்ற காவல்துறையினர் தோற்றுவிட்டனர் என்றும் சொல்லலாம். ஆனால், அங்கு போராடிக் கொண்டிருப்பவர்களை அவர்கள் பொருட்டாகவே மதிக்கவில்லை. பத்திரிகையாளர்கள் இருப்பதால்தான் இவர்கள் இவ்வளவு செய்கிறார்கள். நீங்களெல்லாம் கிளம்புங்கள் என ஊடகங்களைத் துரத்திக்கொண்டிருந்தபோது, நீங்க மட்டும் என்ன வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கீங்க. வந்து எங்களோட போராடுங்க என பத்திரிகையாளர்களையும் போராட்டத்துக்கு அழைத்தவர்கள் மீடியா வெளிச்சத்துக்காக சாலையில் இறங்கியிருக்கின்றனர் என்று சொல்லவைத்தது எது?

Occupy Wall Street 2011 - அமெரிக்கா
‘வால் ஸ்டிரீட்டை கைப்பற்றுங்கள்’ என உலகிலுள்ள பல நாடுகளைக் கைப்பற்றிக்கொண்டிருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தையே அசைத்துப் பார்த்தனர் அந்நாட்டு இளைஞர்கள். இதற்கு முக்கியக் காரணமாக அமைந்த சமூக ஊடகங்கள் மூலம் ஒன்றுசேர்ந்த இளைஞர்களின் பெற்றோர்கள்தான் அப்போராட்டத்தை உலகறியச் செய்த பத்திரிகையாளர்களாகவும், அடக்கி ஒடுக்க நினைத்த நியூயார்க் காவல்துறையிலும் இருந்தவர்கள். அதேபோலத்தான் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய இந்தப் போராட்டத்திலும் பத்திரிகையாளர்களும், காவல்துறையினரும் இருந்தனர். அவர்களைப் பார்த்து அம்மாணவிகள் எழுப்பிய கேள்விகளும் அதையேதான் உறுதிசெய்தன. உன் புள்ளைக்காகவும் சேர்த்துத்தான் இங்க போராடிக்கிட்டு இருக்கோம். சும்மா இருங்க சார். ஓரமாத்தான நிக்கிறோம். ரோட்டுக்கா போனோம்? என்று அவர்கள் கேட்டபோதே காவல்துறை அவர்களை அமைதியாக விட்டிருந்தால் சாலைக்கு இறங்கியிருக்க மாட்டார்கள் அம்மாணவிகள்.
தூக்குவதற்கு எளிதாக இருந்ததால் அவர்களை காவல்துறையின் பேருந்தில் ஏற்றுவதற்கு அத்தனை சிரமப்படத் தேவையில்லாமல் இருந்தது. அதேபோல அவர்கள் பேருந்துக்குள்ளிருந்து தப்பிக்கவும் அத்தனைக் கஷ்டப்படத் தேவையில்லாமல் இருந்ததுதான் அவர்களை சாலைக்குக் கொண்டு வந்தது. ஓரமா நின்னாத்தான் டார்ச்சர் பண்றாங்க. வாங்கடி போவோம் என கிடைத்த கையைப் பிடித்துக்கொண்டு சாலைக்கு இறங்கினாள் அந்த மாணவி. பிடித்த கையிலிருந்த உறுதியும், பார்த்த கண்ணிலிருந்த தெளிவும் அனைத்து வண்டிகளையும் காவல்துறையினராலேயே நிறுத்த வைத்தது. அங்கேயே அமர்ந்தார்கள். ஜல்லிக்கட்டுக்கு பீட்டா, அனிதாவுக்கு நீட்டா? என்ற கேள்வி, யாருக்கோ யாரோ சாமரம் வீச, நாங்கள் ஏன் கஷ்டப்பட வேண்டும் என்பதன் சுருக்கமே அன்றி வேறில்லை.

வியட்நாம் போர் 1972 - தென் வியட்நாம்
மாணவிகளின் இதே குரல் வரலாற்றின் சிவப்புப் பக்கங்களில் ஏற்கெனவே எழுதப்பட்ட ஒன்று. வியட்நாம் அரசியலில் அமெரிக்கா தலையிட்டு பிரித்தாளும் கொள்கையின்மூலம் தென் வியட்நாம், வட வியட்நாம் எனப் பிரித்து ஒரு பகுதியைத் தன் கைப்பாவையாக வைத்துக்கொண்டு வட வியட்நாமில் குண்டுகளை எரிந்து நாசம் விளைவித்தபோது, அமெரிக்காவைக் கண்டித்து 1965இல் சமூக ஆர்வலர்களின்மூலம் தொடங்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வைக் கொண்டு சென்றன. அடுத்த மூன்று வருடங்களில் மாணவர்களின் பேராதரவுடன் 1968இல் இந்தப் போராட்டங்கள் தீவிரமாகி புது வழியினை உருவாக்கிக் கொடுத்தது. அப்போது அவர்களை அடக்கிய வியட்நாம் ராணுவம் மற்றும் காவல்துறையைப் பார்த்துக் கேட்கப்பட்ட கேள்வி உங்கள் உயிருக்கும் சேர்த்துப் போராடும் எங்களை ஏன் அடக்குகிறீர்கள்? என்பதே.
காவல்துறையின் அடக்குமுறைகளால் இந்த ‘இளைஞர்களும், மாணவிகளும் அடங்கிவிடுவார்களா?’ , ‘திருமண மண்டபங்களில் இவர்களை அடக்கிவிடமுடியுமா?’ என்றால், இல்லை. சமூக ஊடகங்கள் அத்தனைக் குடிமகனின் கைகளுக்கும் சென்றுவிட்ட பிறகு இவையெல்லாம் வெறும் பகல் கனவுகள். சமூக ஊடகத்தின் உண்மையான சக்தியை முதன்முதலாக இந்த உலகத்துக்குப் பதிவு செய்த ஒரு புரட்சியைப் பற்றி காவல்துறைக்கு மட்டுமல்ல உலகத்துக்கே நினைவூட்ட வேண்டிய கடமை இப்போது இருக்கிறது.

January 25 Revolution 2011 - எகிப்து
வால் ஸ்ட்ரீட் புரட்சிக்கு முன்பே எகிப்தில் 2011இல் உருவான ‘January 25 Revolution’ மிக முக்கியமானது. சமூக ஊடகத்தின் மூலம் ஒரு நாடு முழுவதுமாகவே ஒன்றிணைந்தது. யாருக்கு எதிராக? ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சிக்காலத்தில், காவல்துறையின் அடக்குமுறை அதிகமானதால் எகிப்து நாட்டின் மொத்த இளைஞர்களுமே கைரோவிலுள்ள தரிர் சதுக்கத்தில் ஒன்று சேர்ந்தனர். அந்தப் புரட்சி ஹொசினி முபாரக்கின் அரசைக் கவிழ்த்ததுடன், அவர்களது அத்தனைக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வைத்தது. இந்த வெற்றிதான் அமெரிக்க இளைஞர்களையும் வால் ஸ்டிரீட்டுக்குத் தள்ளியது. ஏன், கண்முன்னே நாம் கண்ட ஜல்லிக்கட்டுப் போராட்டமும் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டதற்கும், அதிகாரத்தை சாமான்யர்களின் மேல் செலுத்தி கொக்கரிக்க நினைத்த அரசியல்வாதிகளுக்குப் பாடம் புகட்டவும் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வுதான். இதோ, நுங்கம்பாக்கத்தின் சிறு சாலையில் சிறுமிகள் பற்றவைத்திருக்கும் இந்தத் தீ, மேலே குறிப்பிட்ட வரலாற்றுச் சம்பவங்களுக்கு சிறிதும் குறைந்ததல்ல. இந்த வரலாற்றுச் சம்பவத்தில் யாரெல்லாம் நற்பெயர் பெறப்போகிறார்கள் என்பதை ‘நீட் தேர்விலிருந்து தமிழகம் தன்னை விலக்கிக்கொண்டது’ என்று அறிவிக்கப்படும்போது தெரியவரும். அதானே, அவர்கள் என்ன விலக்கு அளிப்பது?

இப்படி பலப்பல உரிமைப் போராட்டங்களைப் பற்றித் தெரிந்தும் தெரியாமலும் போராடிக்கொண்டிருக்கும், ஒவ்வொரு தமிழக மாணவனும் மாணவியும் அவர்களது நோக்கத்தில் தெளிவாக இருக்கிறார்கள். சிறுவர்/சிறுமியரென்று அவர்களை எளிதில் தொட்டுவிட வேண்டாம் என்பதற்கு பாரதி ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறான்;
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
நுங்கம்பாக்கம் மாணவிகள் போராட்டப் படங்கள்: கவி பிரியா
மற்ற படங்கள்: கூகிள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக