வெள்ளி, 1 செப்டம்பர், 2017

உறவாடிக் கெடுப்பவர்களை உணர்ந்துகொண்டேன்!’ - கலங்கும் நடிகை மதுமிதா

நடிகை மதுமிதா‘பக்கத்து வீட்டுப் பெண்ணின் கையை எதற்காகக் கடித்தேன்' என்று நகைச்சுவை நடிகை மதுமிதா விரிவாக விளக்கமளித்துள்ளார்.
சென்னை, வளசரவாக்கம், அன்பு நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர், நகைச்சுவை நடிகை மதுமிதா. இவரது பக்கத்து வீட்டில் குடியிருப்பவர், உஷா. இவர்கள் இருவருக்கும் நடந்த தகராறில் நடிகை மதுமிதா, உஷாவின் கையைக் கடித்ததாக கோயம்பேடு போலீஸில் உஷா புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் விசாரணை நடந்துவருகிறது.
இந்தத் தகவல் கிடைத்ததும் நடிகை மதுமிதா வீட்டுக்குச் சென்று, நடந்தது என்ன என்று விசாரித்தோம். அப்போது, அவர் நம்மிடம் விரிவாகப் பேசினார். ''நான் நடிக்க வந்து இத்தனை ஆண்டுகளாக என்னைப்பற்றிய நல்ல கமென்ட்ஸ்தான் கேட்டிருப்பீர்கள். ஆனால், நேற்று மாலையிலிருந்து தவறான தகவல் பரப்பப்பட்டுவருகிறது. இந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கு குடிவந்து ஆறு மாதங்களாகின்றன. எனக்கு ஆக்டிவ் டிரைவராக வந்தவர்தான் பாலாஜி. அப்போது, நான் வாடகை வீட்டில் குடியிருந்தேன். டிரைவர் பாலாஜி, அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு விற்கப்படுவதாகத் தெரிவித்தார். டிரைவர் பாலாஜியின் மனைவி உஷா, வீட்டு புரோக்கர். அவர்தான் எனக்கு வீடு வாங்கிக்கொடுத்தார். அதற்கு, கமிஷனாக 60 ஆயிரம் கொடுத்தேன். வீடு பராமரிப்புப் பொறுப்பு, உஷாவிடம் இருந்தது. அப்போது, பராமரிப்புக்கான தொகை அதிகமாக இருப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.

இதனால், மீட்டிங் நடத்தினோம். உஷா, ஒவ்வொருவரையும் தவறாகச் சொல்லியிருப்பது தெரிந்தது. உறவாடிக் கெடுப்பது போல அவர் செயல்பட்டது தெரியவந்தது. இதனால், வேறு ஒருநபரிடம் பராமரிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அதன்பிறகு நடந்த சம்பவம், எங்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியது. வாடகை வீட்டில்கூட இப்படி நடக்காது. மின்சாரத்தை கட் பண்ணுவது, ஏ.சி. இணைப்பைத் துண்டிப்பது, மாடிப்படிகளில் எண்ணெய்யை ஊற்றிவிடுவது போன்ற செயல்கள் நடந்தன. இது, அடுக்குமாடியில் குடியிருந்தவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது.
இதனால், போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க முடிவுசெய்தோம். அப்போது, அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்த டீச்சர் ஒருவர், நான் புகார் கொடுத்ததற்கு, என் கணவர் மீது போலீஸ் நிலையத்தில் உஷா, புகார் கொடுத்ததாக தெரிவித்தார். இதன்பிறகு, எல்லோரும் சேர்ந்து உஷா மீது போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தோம். அப்போது, போலீஸார் உஷாவை எச்சரித்து அனுப்பினர். பின்னர், உஷாவின் டார்ச்சர் அதிகமானது. அப்போதுகூட நான் அமைதியாக இருந்தேன். சூட்டிங்கில் இருக்கும்போது, எனக்கு ஆதரவாக வந்தவர்களுக்கு உஷாவால் தொல்லை அதிகமானது.
நடிகை மதுமிதா
சம்பவத்தன்று போலீஸ் உயரதிகாரி ஒருவர், வீட்டில் உஷாவிடம் விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது, அந்த போலீஸ்  அதிகாரியையும்  என்னையும் தவறாக பேசினார் உஷா. அதை நான் தட்டிக்கேட்டேன். இதனால் வாக்குவாதம் அதிகமானது. அப்போது, உஷா என்னைக் கடுமையாகத் தாக்கினார். அதை அருகிலிருந்தவர்கள் தடுக்க முயன்றனர். அவர் என்னைத் தாக்கியதைத் தடுக்கவே லேசாகக் கடித்தேன். எங்களுக்கு நடந்த தகராறில், உஷாவின் குழந்தை நடுவில் மாட்டியதால், நான் என்ன செய்வதென்று திகைத்தேன். என்னுடைய போனையும் காவல்துறை அதிகாரியின் போனையும் எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார் உஷா. கதவைத் தட்டியும் திறக்கவில்லை.என்னுடைய சிம் கார்டை திருடி வைத்துவிட்டார். காவல்நிலையத்தில், விசாரித்துவிட்டு எங்களை அனுப்பிவிட்டனர்.
என்னைக் குறித்த தவறான தகவல்களைச் சொல்லிவருகிறார் உஷா. அவர், டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்தவுடன், நான் புகார் கொடுத்திருக்க வேண்டும். நம்முடைய சட்டத்தில் ஒரு பெண் தாக்கப்படும்போது தற்காப்புக்காக, நகத்தையும் பற்களையும் பயன்படுத்தலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. நான் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். மக்கள்தான் என்னுடைய முதல் கடவுள். இன்று நடக்கும் விசாரணையில், காவல்துறையில் நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறேன்'' என்றார்.
இதுகுறித்து கோயம்பேடு போலீஸாரிடம் கேட்டபோது, “நடிகை மதுமிதா, உஷா ஆகியோரிடம் விசாரணை நடந்துவருகிறது. விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் தங்கள் தரப்பு வாதங்களைச் சொல்லியிருக்கின்றனர்" என்றனர்.
நகைச்சுவை நடிகை மதுமிதா சொன்ன தகவல்குறித்து உஷாவிடம் பேச முயன்றோம். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. அவர் தரப்பில் விளக்கம் அளித்தால் அதையும் பரீசிலனைக்குப்பிறகு வெளியிடப்படும்.   vikatan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக