புதன், 6 செப்டம்பர், 2017

நீட் விவகாரம் உச்சத்திலிருந்தபோது, அ.தி.மு.க. பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?”

பி.ஜே.பி. கூட்டணியில் அ.தி.மு.க. இணைவது குறித்தும், மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்தும் டெல்லியில் பஞ்சாயத்து நடந்துள்ளது அருண் ஜெட்லி விகடன் :நீட் விலக்குக்காக தமிழகக் குரல்கள்
உச்சநீதிமன்றப் படியேறிய அதே சமயம், மத்திய அமைச்சரவையில் தங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று டெல்லியில் தமிழக அமைச்சர்கள் நடத்திய பஞ்சாயத்துகள் வெளிவந்துள்ளன. அமித் ஷா, ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, நிர்மலா சீத்தாராமன் என்று பல முக்கிய பி.ஜே.பி தலைவர்களை டெல்லியில் சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அ.தி.மு.க-வின் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணிகள் இணைந்த சில தினங்களில், தமிழக அரசின் மூத்த அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பி. தங்கமணி, சி.வி. சண்முகம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன், முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் ஆகியோர் டெல்லி சென்றனர். தேர்தல் ஆணையத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. சின்னமான இரட்டை இலையை மீட்கவும், தற்காலிக பொதுச்செயலாளராக உள்ள சசிகலாவை அதிகாரபூர்வமாக கட்சியிலிருந்து நீக்கவும் முக்கிய ஆலோசனை நடத்துவதற்காக டெல்லி சென்றதாக அப்போது விளக்கம் தரப்பட்டது. ஆனால், 'டெல்லியில் நடந்தது என்னவோ வேறு முயற்சி'  விவரம் அறிந்தவர்கள் தரப்பு கூறுகிறது.

அ.தி.மு.க. அமைச்சர்கள் டெல்லி சென்றதும் முதலில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்தனர். இந்தச் சந்திப்பின்போது மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் உடனிருந்தார். அப்போது அ.தி.மு.க-வின் இரு அணிகள் இணைக்கப்பட்டது; கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்று பொதுவான விஷயங்கள் பற்றி பேசிவிட்டு, அடுத்தகட்டமாக மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க-வை சேர்த்துக் கொள்வது குறித்து அருண் ஜேட்லியிடம் அவர்கள் பேச்சைத் தொடங்கியுள்ளனர். "தம்பிதுரை, மைத்ரேயன் ஆகியோருக்கு கேபினட் அந்தஸ்திலான அமைச்சர் பதவியும், தமிழக அமைச்சர் ஜெயக்குமார் மகனும், தென்சென்னை தொகுதி எம்.பி-யுமான ஜெ. ஜெயவர்தன், திருவள்ளூர் எம்.பி. வேணுகோபால் ஆகியோருக்கு இணை அமைச்சர் பதவியும் அளிக்க வேண்டும்" என்று கேட்டுள்ளார்கள்.
தம்பிதுரை மைத்ரேயன் வேணுகோபால் ஜெயவர்தன்
அதற்கு அருண் ஜெட்லி, “உங்கள் விருப்பத்தை பிரதமர் அலுவலகத்துக்குத் தெரியப்படுத்துகிறேன். ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அ.தி.மு.க - பி.ஜே.பி. இடையே எத்தகைய உறவு இருந்ததோ, அதே நல்லுறவு இனியும் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மத்திய அமைச்சரவையில் சேர வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் நாங்கள் கேட்டோம். அப்போது அவர் முடியாது என்று சொல்லிவிட்டார். உங்களின் கோரிக்கை பற்றி மூத்த அமைச்சர்களோடு ஆலோசனை செய்தபின் சொல்கிறேன்" என்று கூறி அனுப்பி வைத்துள்ளார். மேலும், "பிரதமர் மோடி மற்றும் பி.ஜே.பி. தலைவர் அமித்ஷா ஆகியோரைச் சந்திக்க வேண்டும்" என்று தம்பிதுரை கேட்டுள்ளார். அதற்கு ஓ.கே. சொல்லி விட்டார் அருண் ஜெட்லி.
இதையடுத்து, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் தமிழக அமைச்சர்கள் சந்தித்தனர். நிர்மலா சீதாராமன்தான், தற்போது தமிழக பி.ஜே.பி. விவகாரங்களைக் கவனித்து வருகிறார். அதனால் அவரையும் சந்தித்து, ஒரு ரவுண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். அருண் ஜெட்லியிடம் சொன்னதை நிர்மலா சீதாராமனிடமும் தெரிவித்தனர். அவரும் அதை கேட்டுக்கொண்டாராம். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்-கையும் சந்தித்து அ.தி.மு.க. அமைச்சர்கள் பேசினார்களாம். பின்னர், அமித் ஷாவைச் சந்தித்து கூட்டணி பற்றிய கோரிக்கையை முன்வைத்தனர். அ.தி.மு.க-வின் இரு அணிகளும் நல்லபடியாக இணைந்து விட்டது என்ற தகவலையும் சொன்னார்கள். இந்த டெல்லி சந்திப்புகளை மோப்பம் பிடித்த செய்தியாளர்கள், "மத்திய அமைச்சரவையில் இடம் கேட்டீர்களா..?'' என்று தம்பிதுரையிடம் கேள்வி எழுப்பினர்.
“அப்படி எதுவும் கேட்கவில்லை" என்று மறுத்த தம்பிதுரை மேலும் கூறுகையில், ''தமிழ்நாட்டு நலனுக்காகவே மத்திய அமைச்சர்களைச் சந்தித்துப் பேசினோம். மத்திய அரசிடம் இணக்கமாக இருந்து, தமிழக மக்களுக்குத் தேவையானவற்றை பெறுகிறோம். அதில் என்ன தவறு இருக்கிறது..? மத்திய அமைச்சர்களை, தமிழக அமைச்சர்கள் சந்தித்ததில் தவறேதும் இல்லை. தமிழகத்துக்கு வர வேண்டிய நலத்திட்டங்கள் குறித்துப் பேசினோம். தர வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத்தொகை குறித்துப் பேசினோம். இதனைத் தமிழக மக்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். மத்திய அமைச்சர்களைச் சந்தித்ததில் அரசியல் உள்நோக்கம் இல்லை'' என்றார்.
கூட்டணி பற்றி வெளிப்படையாக தம்பிதுரை ஏதும் சொல்லாவிட்டாலும், பி.ஜே.பி. கூட்டணியில் அ.தி.மு.க. இணைவது குறித்தும், மத்திய அமைச்சரவையில்  இடம்பெறுவது குறித்தும் டெல்லியில் பஞ்சாயத்து நடந்துள்ளது. இதுதான் இரண்டு கட்சிகளிலும் இப்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது. தற்போது அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக மத்திய அமைச்சரவை அறிவித்துள்ள நிலையில் மத்தியுடன் இவ்வளவு பேச்சுவார்த்தைகளை நடத்திய அ.தி.மு.க-வுக்கு ஒரு பதவியும் ஒதுக்கப்படவில்லை. எனினும், நீட் தேர்வு, அனிதா தற்கொலை போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அ.தி.மு.க டெல்லியில் நடத்திய பேச்சுகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக