சனி, 2 செப்டம்பர், 2017

தடைகளை உடை தமிழா ! ஏகலைவனின் கட்டை விரலை வெட்டியவர்கள் நீட் வடிவில் வருகிறார்கள்!

நீட் தேர்வு புதியதல்ல. அது நுழைவுத்தேர்வும் அல்ல ... தகுதித் தேர்வு ! நீ என்றுமே தகுதி பெறக்கூடாது என்ற தேர்வு ! என்ன தகுதி? நாம் எப்போதும் அடைய முடியாத தகுதி. சமத்துவத்தை சீர்குலைக்கும் பழையகால ஆயுதமே நீட்.
நாம் உலகின் முதல் பெண் மருத்துவரை உருவாக்கினோம்.
நாம் இந்தியாவின் முதல் பெண் மருத்துவரை உருவாக்கினோம்.
நாம் பலரையும் உருவாக்கினோம்.

அவர்கள் மீண்டும் நம்மீது போர் தொடுத்துள்ளனர்மருத்துவ சேவைகளை பொறுத்தவரையில் தமிழ்நாடு எப்பொழுதுமே முதன்மையாகவே உள்ளது. அது பலர் கண்களை உறுத்துகிறது. தமிழ்நாடு என்பது ஒரு மாநிலம் மட்டும் அல்ல. பல தடைகளை உடைத்து சமூக நீதியை நிலைநாட்டிய முன்னோடி ! மருத்துவத்துறை வளர்ந்து கொண்டிருந்த 18,19ஆம் நூற்றாண்டுகளில் அதை பெண்கள் பயில தடை செய்யப்பட்டிருந்தது. 1878ல் மருத்துவம் படித்த மேரி ஸ்கார்லீப் உலகின் முதற்சில பெண் மருத்துவர்களுள் ஒருவர்.
எங்கே நடந்ததென தெரியுமா? சென்னை மருத்துவக் கல்லாரியில். பிரிட்டனிலேயே வாய்ப்பு மறுக்கப்பட்ட அவருக்கு சென்னை மருத்துவக் கல்லூரி வாய்ப்பு வழங்கியது. முத்துலக்ஷ்மி ரெட்டி என்று அறியப்பட்ட மருத்துவர் முத்து லட்சுமி இந்தியாவின் ஒரு சில முதல் பெண் மருத்துவர்.
ஆனால் இருவருக்குமான பிரச்சனைகள் வேறானவை. பெண் என்பதே ஒரு தடையாக இருந்த நேரத்தில், முத்துலட்சுமிக்கு வேறு பிரச்சனைகளும் இருந்தன. மருத்துவக் கல்லூரியில் பயில சமஸ்கிருதம் தெரிய வேண்டும். அதாவது பூணூலும் சமஸ்கிருதமும் மருத்துவக் கல்லூரியில் சேரத் தகுதிகள்.

அவற்றை கடந்து கல்லூரியில் சேர்ந்த முத்துலட்சுமிக்கு வேறு பிரச்சனைகளும் எழுந்தன. ஆண் மாணாக்கர்களின் கவனம் சிதறும் என்பது போல பல பிரச்சனைகளைக் கூறினர். ஆனால் புதுக்கோட்டை மகாராஜா இவற்றை எல்லாம் புறக்கணித்து, உதவித் தொகை அளித்து கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தார். அப்படி உருவானவர் தான் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி.
1925 வரை சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருத மொழியறிவு கட்டாய தகுதியாக இருந்தது. பெரியாரும், நீதிக்கட்சியும் அந்த அராஜகத்தை மிகுந்த போராட்டத்திற்குப்பின் நீக்கினர். பெரியார் போன்ற சமூகப்போராளிகளின் உழைப்பை மீறியும் மருத்துவப்படிப்பிற்கு நேர்முகத் தேர்வு முறை இருந்தது. வெளிப்படைத் தன்மை இல்லாத அந்த நேர்முகத் தேர்வுகள் மாணவர்களின் தகுதியை தீர்மானித்தன. எந்த வெளிப்படைத் தன்மையிமின்றி, ஊழல் மிகுந்த நேர்முகத் தேர்வுகள் மேல்சாதி மாணவர்களை தேர்ந்தெடுக்க மட்டுமே உதவின.
முன்னாள் முதல்வர் எம்ஜியார், நேர்முகத் தேர்வுகளின் சூட்சமத்தை புரிந்து கொண்டு அவற்றை ஒழித்து நுழைவுத் தேர்வை கொண்டுவந்தார். அந்தச் சூழ்நிலையில் சமூக நீதிக்கு நுழைவுத் தேர்வு மிக அவசியமாக இருந்தது. (திமுகவினர் கூட அதைப் புரிந்து கொள்ளாதது வருத்தமே) ஆனால் நுழைவுத் தேர்வையும், கல்லூரி நிர்வாகங்களை வைத்து தங்களுக்கு ஏற்றார்போல மாற்றினர் உயர் வகுப்பினர். நிர்வாக முடிவுகளுக்கு முன் நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் மதிப்பிழந்தன.
தற்கால தமிழக மருத்துவத்துறையின் சிற்பி கலைஞர் கருணாநிதி மருத்துவச் சேர்க்கை முறையில் வெளிப்படைத் தன்மையை கொண்டுவந்தார். மதிப்பெண்களை பொதுமக்கள் அறியும்படி வெளியிடச்செய்தார். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் மதிப்பெண் இல்லையென்றால் இடமில்லை என்ற நிலையை உருவாக்கினார். அனைத்தும் வெளிப்படையாக இருப்பதால் முறைகேடுகள் தடுக்கப்பட்டன. சமூகநீதியின் முக்கிய வளர்ச்சி இது.
நுழைவுத்தேர்வு, எளிய மக்கள் உள்நுழைய தடையாகவும், பயனற்றும் இருப்பதாக எண்ணிய கலைஞர் கருணாநிதி அதையும் நீக்கினார்.(பின்னர் விரிவாகப் பார்க்கலாம்).
மேலும் விரிவாகச் செல்வதற்கு முன் சிலவற்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். சமூக நீதிக்காக எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டாலும், இரு திராவிட கட்சிகளும் சில அடிப்படை கட்டமைப்புப் பிரச்சனைகளை புரிந்து கொள்ள தவறிவிட்டன.
நுழைவுத்தேர்வு ரத்தும், சேர்க்கை முறையின் வெளிப்படைத் தன்மையும் பல பள்ளிகளிலும் இருந்து மாணவர்கள் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர உதவின. குறிப்பாக வசதி குறைவான பள்ளிகளில் இருந்தும் மாணவர்கள் மருத்துவர் ஆயினர். ஆயினும் அவர்கள் இரண்டாம், மூன்றாம், நான்காம் தலைமுறையாக மட்டுமே கல்வியைப் பெறுபவர்கள்.
மேல்சாதியினரால் மேல்சாதியினருக்காக நடத்தப்பட்ட பள்ளிகளும், சென்னை போன்ற பெருநகரங்களின் பணக்காரப் பள்ளிகள் மட்டுமே பொதுத் தேர்வுகளில் முதலிடம் பெற்றனர்.
அதற்காக கடுமையான பயிற்சி முறைகள், வீட்டு டியூசன் போன்றவற்றையும் சில நேரங்களில் முறைகேடான வழிகளையும் கூட பின்பற்றினர். தமிழக கல்வி வரலாற்றில் வீட்டு டியூசன் என்ற புதிய கலாச்சாரம் உருவானது. வகுப்புவாரியாக, பாடம் வாரியாக பயிற்சி அளிக்கப்பட்டது. ஒவ்வொரு பாடத்திற்கும் நான்கு வகுப்புகளுக்கு இரண்டாயிரம் முதல் மூன்றாயிரம் வரை வசூலிக்கப்பட்டது.
இரு திராவிட அரசுகளுமே இதை சமாளிக்க தெரியாமல் திணறினர். கல்வி வணிகமயமான சூழலில் மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் பள்ளிகள் பெருகின. குறிப்பாக இராசிபுரம் பள்ளிகள் பலரது கவனத்தைப் பெற்றன. அவை சென்னையின் மேல்சாதிப் பள்ளிகளின் முறைகளை பின்பற்ற ஆரம்பித்தன. ஒரே வித்தியாசம் இப்பள்ளிகளில் சாதிக்குப் பதில் பணமே பிரதானம்.
இந்த இராசிபுரப் பள்ளிகளின் அபார வெற்றி சென்னை மேல்தட்டுப் பள்ளிகளை உறுத்தியது. ஊடகங்களில் அவற்றைப் பற்றி எதிர்மறை விசமக் கருத்துகள் பரப்பப்பட்டன.
கோழிப்பண்ணை" என கிண்டல் செய்யுமளவு ஆனது. கிண்டலையும் தாண்டி ஒரு முத்திரையாக குத்தப்பட்டது. அந்தப் பள்ளிகளை ஒடுக்க பலமுயற்சிகள் எடுக்கப்பட்டன. நான் ஒரு தரப்பிற்கு ஆதரவாக பேசுவதாக எண்ண வேண்டாம், இராசிபுரம் பள்ளிகளை மட்டும் குறிவைத்து தாக்கிவிட்டு பத்மசேஷாத்திரி, டீஏவி பள்ளிகளை கண்டுகொள்ளாமல் விடுவதில் உள்ளது சூட்சமம். இதற்குப்பின்னால் தெளிவான நோக்கம் உள்ளது. சமூக ஆர்வலர் என்ற முகமூடியில் செயல்படும் ஸ்லீப்பர் செல்களும் இவற்றை பரப்பினர்.
மாணவர்கள் மீது திணிக்கப்படும் அழுத்தங்களுக்கு நானும் எதிரானவன் தான். ஆனால் தலைகீழாக நின்று தண்ணீர் குடிப்பதே தகுதி என பேசுபவர்களுக்கு மத்தியில் அவர்களும் என்னதான் செய்வார்கள்? ஊரோடு ஒத்துவாழ் என உடன்பட வேண்டியது தான். மதிப்பெண் சார்ந்த கல்விமுறையை ஒழிப்பது கனவாக இருக்கலாம். ஆனால் நடைமுறை எதார்த்தம் வேறு. அவர்களின் முன் உள்ள கடமைகளுக்கு இதைப் பின்பற்றியே ஆக வேண்டும்.
இராசிபுரம் பள்ளிகளும் அதே தகுதி பெற்ற மாணவர்களை உற்பத்தி செய்தவுடன் கூக்குரலிடுகின்றனர். எளிய, நசுக்கப்பட்ட மக்கள் கல்வியில் முன்னேறாதவாறு தடுக்க மேல்சாதி மாஃபியாக்கள் நுழைவுத் தேர்வு என்ற பெயரில் பெருமுயற்சி எடுக்கின்றனர்.
கலைஞர் ஏன் நுழைவுத் தேர்வால் பயனில்லை என்று ஒழித்தார் என்பதைப் பற்றி பார்க்கலாம். குழப்பங்களைத் தவிர்ப்பதற்காக இட ஒதுக்கீட்டு கொள்கையையும் சேர்த்துக் கொள்ளலாம்.
உதாரணமாக சேஷாத்திரி, அருண், அம்பேத்கார் என்ற மூவர் பனிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறுவதாகக் கொள்வோம். சேஷாத்திரி 200க்கு 200ம், அருண் 200க்கு 198ம், அம்பேத்கார் 200க்கு 196 மதிப்பெண்களும் பெறுவதாக வைத்து கொள்வோம்.
சேஷாத்திரிக்கு நல்ல கல்லூரியில் மதிப்பெண் காரணமாக இடம் கிடைக்கிறது. அருணும் அம்பேத்காரும் இடஒதுக்கீட்டின் காரணமாக அதே கல்லூரியில் சேர்கின்றனர். இப்போது நுழைவுத் தேர்வு இருப்பதாகக் கருதி கொள்வோம். நுழைவுத் தேர்வில் மருத்துவப் பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படுவதில்லை, (+2)மேல்நிலை பாடத்திட்டத்தில் இருந்து தான் கேட்கப்படும். எனவே நுழைவுத் தேர்வு பயனற்ற ஒன்றே.
அப்போ அருணும், அம்பேத்காரும், சேஷாத்திரியை விட குறைவான மதிப்பெண்கள் எடுத்து அதே கல்லூரியில் சேர்வது மருத்துவர்களின் தரத்தை பாதிக்குமா? கண்டிப்பாக இல்லை. இட ஒதுக்கீட்டிற்கு எதிரான விசமப் பிரச்சாரம் இது.
இதை இவ்வாறு கொள்ளவும், மூவரும் ஒரே கல்லூரியில் சேர்கின்றனர். மூவருக்கும் ஒரே மாதிரியான தேர்வு முறை தான். ஒரே மாதிரியான பயிற்சி தான். யாருக்கும் எந்தச் சலுகையும் கிடையாது.
ஒரு மருத்துவ மாணவர் 110 முதல் 130 தேர்வுகளை எழுதுகிறார். இவை தவிர பரிசுத் தேர்வுகள் தனி. இவை ஒவ்வொரு கல்லூரிக்கும் சிறிதளவு மாறுபடலாம்.
இந்தத் தேர்வுகளில் யாருக்கும் சலுகை கிடையாது. இலவச தேர்ச்சி கிடையாது. அனைவருக்கும் ஒரே விதிகள் தான். சொல்லப் போனால் நடைமுறையில் சேஷாத்திரியை விட அருணுக்கும் அம்பேத்காருக்கும் தான் தேர்ச்சி பெற தடைகள் அதிகம்.இது தான் உண்மை. இது தான் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்து.
இதே தான் முதுநிலை (PG ) படிப்பிலும் நிகழ்கிறது.
தமிழக மருத்துவத்துறை பல தடைகளைத் தாண்டியே இந்த சமூக நீதி நிலைக்கு வந்துள்ளது. ஒவ்வொரு நிலையிலும் அவர்களின் தடுத்து நிறுத்தும் முயற்சியை முறியடித்தே நாம் இந்த நிலைக்கு வந்துள்ளோம், உலகிற்கே எடுத்துக்காட்டாக.
அவர்கள் மீண்டும் தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு - நீட் என்ற பெயரில் போர்தொடுத்துள்ளனர். ஹிந்தி மொழி தான் தகுதி எனச் சொன்னாலும் ஆச்சரியமில்லை. நீட் தேர்வு பற்றிய வழக்கின் இறுதித் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் வராதபோதும் . ஆனால் அதற்குள் "நான் ஹிட்லராக இருந்தால் பகவத் கீதையை கட்டாயமாக்குவேன்" எனக்கூறிய நீதிபதி நீட் தேர்வுக்கு எதிரான தீர்ப்பை திரும்பப் பெறுகிறார். நீட் தேர்வுக்கு சாதகமாக தனித் தீர்ப்பையே வழங்குகிறார்.
நம்மைத் தடுக்க அவர்கள் எங்கும் இருக்கிறார்கள்.
வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால் திறமைக்கு பல தேர்வுகள் நடத்தப்பட்டிருக்கும். ஆனால் அவர்கள் நிர்ணையிக்கும் தகுதிக்கு?
இது தான் மிகத் தெளிவாகத் திட்டமிடப்பட்ட சூது.
கடந்த இரண்டாயிரம் வருடங்களாக பக்தியில் சிறந்து விளங்கிய ஒரு பக்திமானுக்கு கூட கோயில் கருவறைக்குள் செல்லும் தகுதி வந்ததில்லை. அந்தத் தகுதி உங்களுக்கு எப்போதுமே வராது.
"நான் உன்னை விடப் புனிதமானவன்; நீ உள்ளே வராதே" என்பதை அவர்கள் பாணியில் சொல்வதன் பெயர் தான் தகுதி.
ஆனால் நாம் எத்தனையோ தடைகளை உடைத்து தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளோம் என்பதை நம் வரலாறு நமக்கு உணர்த்துகிறது. நம் வரலாறே ஒரு எடுத்துக்காட்டு.
நாம் உலகின் முதல் பெண் மருத்துவரை உருவாக்கினோம்.
நாம் இந்தியாவின் முதல் பெண் மருத்துவரை உருவாக்கினோம்.
நாம் பலரையும் உருவாக்கினோம்.
அவர்கள் மீண்டும் நம்மீது போர் தொடுத்துள்ளனர். என்ன நேர்ந்தாலும் அப்போரில் நாமே வெற்றி பெறுவோம்.
- தமீம் தந்திரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக