சனி, 2 செப்டம்பர், 2017

தெற்காசியாவின் மருத்துவ தலைநகரம் தமிழ்நாடு ..... ஆக்கிரமிப்பு ஆயுதம்தான் நீட்!

நீட் வெறியர்களின் தரம் தகுதி என்கிற பொய் பிரச்சாரத்தில் சிக்கி அறியாமை இருளில் இருக்கிற நம் மக்களிடம் மீண்டும் மீண்டும் இதை பொறுமையாக சொல்லி புரியவைக்க முயல்வோம்!
கடந்த 15 வருடங்களாக, தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி சேர்க்கை என்பது 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில்தான் நடைபெறுகிறது. அதற்கு முன்பு சுமார் 15 ஆண்டுகள் மாநில அரசு நடத்திய நுழைவுத் தேர்வின் மதிப்பெண்ணுடன் 12ஆம் வகுப்பு மதிப்பெண்களையும் இணைத்து, அதன் அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது.
கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தமிழக மருத்துவக்கல்லூரிகளால் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்.
எம்.பி.பி.எஸ் முடித்தபிறகு, எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட மேற்படிப்புகளுக்காக இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகளில் தமிழக மாணவர்கள்தான் அதிக இடம்பிடிக்கிறார்கள். அதாவது, மாநில பள்ளி பாடத்திட்டத்தில் படித்து, அதில் 12ஆம் வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மருத்துவக்கல்லூரிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, எம்.பி.பி.எஸ் முடித்தப்பின் நடக்கிற மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வுகளில் இந்திய அளவில் முன்னிலை வகிக்கிறார்கள்.
இந்த ஒரு சான்று மட்டுமே போதும், நம்முடைய மாண்வர்களின் தரத்தை நிருபிப்பதற்கு.
பொது சுகாதாரம் குறித்த அனைத்து புள்ளிவிபரங்களும், இந்தியாவிலேயே மருத்துவத்துறையில் தமிழகம்தான் முன்னணியில் இருப்பதாக சந்தேகத்திற்கு இடமின்றி சொல்கிறது.
தெற்காசியாவின் பல பகுதிகளில் இருந்து சிகிச்சை பெறுவதற்கு தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள்.
மருத்துவத் துறையை பொருத்தவரை இந்தியாவில் மற்ற மாநிலங்கள் நம்மிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ளதான் வேண்டுமேயொழிய, நமக்கு தகுதி தரம் குறித்து பாடம் நடத்த வேண்டிய நிலையில் நாம் இல்லை!!!
Prabaharan Alagarsamy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக