வெள்ளி, 29 செப்டம்பர், 2017

தலித் மாணவி அமராவதியின் மரணம் எழுப்பும் கேள்விகள்,, நீதி விசாரணை???

thetimestamil :அன்பு செல்வம் விருத்தாசலம் வட்டம் அரசக்குழி அருகேயுள்ள முதனை கிராமத்தில் பத்தாம் வகுப்பு படித்து வந்த தலித் மாணவி அமராவதி (வயது 15) கடந்த வெள்ளியன்று (22.9.2017) தற்கொலை செய்து கொண்டார். ஊடகங்களில் பெரிதும் பரபரப்பாக பேசப்படாத செய்தியாக இருந்தாலும் அண்மைக்காலத்தில் கல்விக்கூடம் தொடர்பான‌ சம்பவங்களால் தற்கொலை செய்து கொள்ளும் தலித் மாணவ – மாணவிகளின் மரணங்கள் அதிகரித்து வருவதை உணர்த்துகிற ஒரு படுகொலை. தொடர்ந்து நிகழுகிற‌ இது போன்ற மரணங்கள் பொதுச் சமூகத்தின் வழமையான செய்தியாகவும் மாறிவிட்டதை அமராவதியின் மரணம் உணர்த்தியுள்ளது. இது குறித்து விசாரிப்பதற்கு நேரில் சென்றிருந்தோம். உள்ளபடியே அமராவதியின் மரணம் குறித்து பேச பலர் தயங்கினார்கள்.
முதனை கிராமத்தில் 850 தலித் குடும்பங்களும், 6000 வன்னியர் குடும்பங்களும், சிறிய அளவில் முதலியார்களும் வசித்து வருகின்றனர். அந்த சுற்று வட்டாரத்தில் பறையர்களைக் கொண்ட ஒரே காலனி குடியிருப்பு முதனை தெற்குத் தெரு மட்டும் தான். அமராவதியின் தந்தை முருகன் (மாற்றுத்திறனாளி) சாத்தமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வாட்ச்மேனாகப் பணியாற்றி வருகிறார். அவரது தாயார் செம்பாயி கூலி வேலை செய்பவர். மூன்று பெண்கள் ஒரு ஆண் உட்பட நான்கு பிள்ளைகள். அமராவதி தான் மூத்தவள்.

இங்குள்ள பா. இராமலிங்க முதலியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமராவதி பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இதே பள்ளியில் கணித ஆசிரியராகப் பணி புரிபவர் தனலட்சுமி. வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவர். இதே ஊரில் வசித்து வருகிறார். அன்னை தெரசா மழலையர் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். கணிதப்பாடத்தில் அமராவதி மிகவும் குறைவாக மதிப்பெண் எடுத்தார் என்பதால் ஆசிரியை தனலட்சுமி அவரை அடித்து, சாதியைச் சொல்லி திட்டியுள்ளார். வகுப்பறையில் இருந்த சக மாணவர்கள் அப்போது சிரித்து தங்களின் கேலியை வெளிப்படுத்தியள்ளனர். இச்சம்பவத்தால் மிகவும் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டார் என்கிற செய்தி அமராவதியுடன் படித்த சக மாணவிகளாலும், அங்கு பரவலாக, பலராலும் சொல்லப்படுகிறது.
அமராவதியின் மரணம் சந்தேகத்திற்கிடமானது போல் பேசப்பட்டாலும், உண்மையில் என்ன தான் நடந்தது என்பதை அறிய முற்பட்டு பா. இராமலிங்க முதலியார் அரசு மேல்நிலைப் பள்ளிக் கூடத்துக்குச் சென்றோம். பள்ளி விடுமுறை என்பதால் பூட்டப்பட்டு இருந்தது. சில‌ மாணவர்கள் உள்ளே மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அதில் பெரும்பாலான மணவர்கள் வன்னியர் சங்கத்தின் தீச்சட்டி பொறித்த மஞ்சள் பனியன் அணிந்திருந்தனர். அமராவதி மரணம் குறித்து ஒரு மாணவரோடு பேசினேன். எங்களுக்கு எதுவும் தெரியாது என்று கலைந்து சென்றனர். ஒரேயொரு மாணவர் மட்டும் கொஞ்ச நேரம் பேசினார். “எல்லாரையும் தான் டீச்சர் அடிச்சாங்க . . . ” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்த மாணவக் கூட்டத்தின் தலைவர் போன்ற ஒருவர் “வாங்கடா” என்றதும் அனைவரும் சுவர் ஏறிக் குதித்து வெளியேறினர்.
அமராவதி இயல்பாகவே நன்றாக படிக்கிற மாணவி. சம்பவத்தன்று மதியம் 3.30 மணியளவில் பள்ளியை விட்டு வீட்டிற்கு வந்ததும் தன் புத்தகப் பையையும், துப்பட்டாவையும் தூக்கி வீசியெறிந்து விட்டு, தன் தாயாரை கொஞ்ச நேரம் அமைதியாகப் பார்த்து விட்டு, யாரிடமும் பேசாமல் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். மாலை 6 மணி நெருங்கும்போது மகளைக் காணவில்லை என அவரது அம்மாவும், அக்கம் பக்கத்து உறவினர்களும் டார்ச் லைட் எடுத்துக் கொண்டு தேடினர். கொஞ்ச தூரத்தில் பெண்கள் புழங்கும் பொதுக் கழிப்பிடத்தையொட்டி உள்ள ஒரு மரத்தின் உயரமான பகுதியில் அமராவதி தூக்கில் தொங்கினார். பிறகு அங்குள்ளவர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்து, பிரேதத்தைக் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்து உடற்கூறாய்வு செய்து, பிரேதத்தை எரித்தனர். அமராவதியின் தந்தை முருகன் இது குறித்து காவல் துறையில் புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரில் மகளின் மரணம் குறித்து எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை. இது வரை முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யவில்லை. “எல்லாத்தையும் முடித்து விட்டு வாங்க பேசிக்கலாம்” என்பதாக காவல் துறையிலிருந்து தகவல் தரப்பட்டுள்ளது.
அமராவதியின் மரணத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. 2003 -ல் கண்ணகி, முருகேசனை வன்னியர்கள் கூட்டாக கொலை செய்த புதுக்கூரைப்பேட்டை (குப்பநத்தம்) 10 கி.மீ. தொலைவில் தான் உள்ளது. முதனை கிராமமும் அது போலவே சாதி – தீண்டாமையை மிகவும் இறுக்கமாகப் பின்பற்றும் ஒரு கிராமம்.

அமராவதியின் மரணம் எழுப்பும் கேள்விகள்
  • பள்ளிக்கூடத்தில் நடந்தது என்ன? அமராவதியை அடித்த ஆசிரியை தனலட்சுமி மீது மாவட்ட க் கல்வி அலுவலகமும், காவல் துறையும் (வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் மூலம்) என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
  • தற்கொலையாகவோ, கொலையாகவோ, சந்தேகத்திற்கிடமான மரணமாக‌ இருந்தாலும் காவல்துறை விசாரணையை ஏன் இன்னும் தொடங்கவில்லை? முதல் தகவல் அறிக்கையை ஏன் இன்னும் பதியவில்லை?
  • அமராவதியின் தந்தை கொடுத்திருக்கும் புகார் மனுவில் பள்ளிக்கூட சம்பவம் குறிப்பிடவில்லை என்பதற்கு காரணம் மற்ற மூன்று பிள்ளைகளுக்கும் எதிர்காலத்தில் பாதுகாப்பு இருக்காது என்கிற அச்சம் தான். எனவே தான் பள்ளிக்கூடத்தில் நடந்த‌ சம்பவத்தை குறிப்பிட‌ தவிர்த்து விட்டார். இதை காரணமாக வைத்து அமராவதியை தற்கொலைக்குத் தூண்டிய ஆசிரியை தனலட்சுமி மீது நடவடிக்கை எடுக்காமல் காவல் துறை மௌனம் காப்பது ஏன்?
  • அமராவதியை இழந்து தவிக்கிற முருகன் குடும்பத்துக்கு சட்ட‌ ரீதியாக உதவி செய்ய யாரும் முன்வரவில்லை என்பதால் அடுத்தக் கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் தவிக்கின்றனர். இந்த நேரத்தில் மனித உரிமை அமைப்புகளும், தலித் இயக்கங்களும் ஆதரவு அளிக்க வேண்டியுள்ளது. எவ்வித சமரசங்களுக்கும் ஆட்படாமல் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
  • பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசு உடனடியாக‌ இழப்பீடு வழங்க வேண்டும்.
  • விசாரணைக்கு சாதிய அச்சுறுத்தல் தடையாக இருக்குமெனில் நீதி விசாரணைக்கு அரசு உத்தரவிட‌ வேண்டும்.
பாடம் நடத்துகிற ஆசிரியர்கள் மத்தியில் சாதிய மனோபவமும், அதன் ஆதிக்க உள்ளுணர்வும் எப்போதும் வேலை செய்து கொண்டே இருப்பதால் அது வார்த்தையாகவும், வன்கொடுமையாகவும் வெளிப்பட்டு தலித் மாணவச் செல்வங்களை கொன்று விடுகிறது. அமராவதியும் அப்படித்தான் கொல்லப்பட்டிருக்கின்றார். பொதுவாக தலித் மாணவ – மாணவிகளின் இது போன்ற தற்கொலைகளை கோழைத்தனமான முடிவு என்று சொல்லி தப்பிக்கிற மனநிலை பொதுச் சமூகத்துக்கு இயல்பாகவே உண்டு. அல்லது இவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை அதிகமாக இருக்கிறது, உளவியல் ரீதியாக‌ அதை உடைத்து வெளியேற வேண்டும் என எளிதாகவும் வகுப்பெடுக்க முடிகிறது. பிரச்சனை அது மட்டுமல்ல. அடிப்படையில் பள்ளிக்கூடத்தில் அல்லது சக மாணவர் குழுவில் ஒரு தலித் சாதி ரீதியாக இழிவுபடுத்தும்போது, வன்கொடுமைகளால் காயப்படும்போது ஏற்படும் உளவியல் வலியை யாரிடம் முறையிடுவது? அதற்கான நம்பகத் தன்மையுடைய பொது வெளி இங்கு இருக்கிறதா? பெற்றோரிடமோ, சக ஆசிரியரிடமோ, மாண‌வரிடமோ, நண்பரிடமோ நடந்ததை அப்படியே சொன்னாலும் அதை சரி செய்கிற நேர் மறை மனோபவமும், பக்குவமும், நேர்மையும் யாரிடம் இருக்கிறது? தன் உளவியல் காயத்துக்கு மருந்து கொடுக்கிற நம்பகத்தனமை கொண்ட பொது வெளி இங்கே குறுக்கப்பட்டு, சுருங்கி வருவதும் இது போன்ற மரணங்களுக்கு காரணமாக அமைகிறது. இதற்கு சாதிய மனோபவம் கூடுதலான வீச்சாக இருப்பதை அமராவதியின் மரணத்தில் கண்டுணர முடிகிறது. எனினும் அமராவதியின் மரணத்தில் அசைவற்று கிடக்கும் இச்சமூகம் சாதி – தீண்டாமை குறித்தான கேள்விகளை எழுப்பாத வரை இது போன்ற மரணங்களுக்கு முற்றுப்புள்ளி இல்லை.
அன்புசெல்வம் (26.9.2017), தலித் செயல்பாட்டுக்கான சிந்தனையாளர் வட்டம் – ICDA, புதுச்சேரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக