வெள்ளி, 29 செப்டம்பர், 2017

போலந்தின் க்ராக்காவ் - தமிழகத்தின் கீழடி தொல்லியல் ஆய்வுகள்

subashini.thf : மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இந்த வார வியாழன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை.
..இந்திய மத்திய அரசின் தொல்லியல் துறை, மதுரையில் பாயும் வைகைக்கு அருகே உள்ள 293 கிராமங்களில் தொல்லியல் சின்னங்கள் இருப்பதைக் கண்டறிந்தது. பின்னர் கீழடியில் 43 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டு ஆய்வாளர் அமர்நாத் என்பவரின் தலைமையில் இங்கு ஆய்வுகள் தொடங்கப்பட்டன. இந்த ஆய்வில் மனித நாகரிகத்தைப் பறைசாற்றும் பல சான்றுகள் கிடைத்தன. பானை ஓடுகளில் கீறப்பட்ட பிராமி எழுத்துக்கள், சுடுமண் உலைகள், சுடுமண் குழாய்கள், சுடுமண் உருவங்கள், சுடுமண் கலங்கள், தந்தத்தால் அலங்கரிக்கப்பட்ட தாயக் கட்டைகள், அணிகலன்கள் போன்றவை இந்த ஆய்வில் கிட்டின. அதுமட்டுமன்றி செங்கல்லினால் அமைக்கப்பட்ட கட்டிட சுவர்களையும் இந்த அகழாய்வு நமக்குப் புலப்படுத்தியது. அதுமட்டுமன்றி இதே போன்ற அடுப்புக்களும் தமிழகத்தின் அரிக்கமேடு, உறையூர் போன்ற இடங்களில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ளன என்பதும் ஒரு பண்பாட்டுக் கலாச்சார ஒற்றுமையை நமக்கு நிறுவும் சான்றாக அமைகின்றது.
ஏறக்குறைய 2500 ஆண்டுகள் இவை பழமையானவை என கரிமச் சோதனைகளின் வழி இந்த அகழாய்வுச் சான்றுகள் நிரூபிக்கப்பட்டன...

பெரிய எழுத்தில் முழுமையாகக் கட்டுரையை வாசிக்க இங்கே செல்க.
http://thfwednews.blogspot.co.uk/2017/09/71.html
சுபா

 ரஷ்யா, லுத்துவானியா, பெலாரஸ், உக்ரேன், சுலோவாக்கியா, செக், ஜெர்மனி ஆகிய 7 நாடுகளை எல்லைகளாகக் கொண்டும், வடக்கே பால்ட்டிக் கடலை ​எல்லையாகக் கொண்டும் திகழும் நாடு போலந்து. ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர் நாடாக இடம் பிடிக்கும் நாடுகளில் ஒன்று.

ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றிற்கும் பண்டைய வரலாற்றுப் பெருமைகள் இருப்பது போல, தனித்துவத்துடன் கூடிய வரலாற்றுப் பெருமை உள்ள நாடு போலந்து என்பதை மறுக்க முடியாது. இன்றைய நிலையில் பொருளாதார ரீதியாகச் சற்று பின் தங்கிய நிலையில் இருந்தாலும் கூட, சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை சிறந்த பொருளாதார பலத்துடன் திகழ்ந்தது போலந்து. இதன் இன்றைய தலைநகரம் வார்சாவ். ஆனால் இன்றைக்கு ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன்னர் வரை, போலந்தின் தலைநகரமாக விளங்கியது க்ராக்காவ் நகரமாகும். பல நூற்றாண்டுகளாக போலந்த்தின் பண்பாட்டுக் கலாச்சார நகரம் என்ற சிறப்புடன் விளங்கும் நகரம் இது. இதன் சிறப்பினைக் கருத்தில் கொண்டு இந்த நகரத்தை முழுமையாக யுனெஸ்கோ, பாதுகாக்க வேண்டிய நகரங்களுள் ஒன்றாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.  கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த க்ராக்காவ் நகருக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டியது. அப்பொழுது க்ராக்காவ் நகரின் தொல்லியல் பழமைகளையும் வரலாற்றுச் செய்திகளையும் ஓரளவு அறிந்து கொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டேன்.

க்ராக்காவ் நகர மையம் ஒரு விரிந்த பரந்த மேடையைப் போன்ற தோற்றம் கொண்டது. சதுர வடிவிலான அதன் மையப் பகுதியில் நடந்து செல்லும் போதும், அங்கு வரிசையாக அமைக்கப்பட்டுள்ள உணவகங்களில் ஏதாகினும் ஒன்றில் அமர்ந்து உணவருந்தும் போதும், அங்குள்ள The Cloth Hall என அழைக்கப்படும் 600 ஆண்டுகள் பழமையான வர்த்தக மையக் கட்டிடத்திற்குள் சென்று பொருட்களைத் தேடிப் பார்த்து வாங்கும் பொழுதும், அந்தத் தரைப்பகுதிக்கும் கீழே சுரங்கப்பாதை ஒன்று இருப்பதையும், அங்கே நம்மை அதிசயத்தில் ஆழ்த்தும் ஒரு அருங்காட்சியகம் இருக்கின்றது என்ற உண்மையையும் நிச்சயமாக யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம்.

Rynek Underground என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அருங்காட்சியகம் க்ராக்காவ் நகரத்தின் முக்கிய வரலாற்றுச் சான்றுகளில் ஒன்று. இது 4000 சதுரமீட்டர் பரப்பளவு கொண்டது. தொல்லியல் அகழ்வாய்வு செய்யப்பட்ட பகுதி கீழே நிலத்துக்கு அடியில் இருக்கின்றது. தொல்லியல் அகழ்வாய்வு நடத்தப்பட்ட ஒவ்வொரு பகுதிகளையும் தக்க வகையில் பாதுகாப்பு வளையங்களை அமைத்துப் பாதுகாத்திருப்பதோடு பொதுமக்கள் அவற்றை நேரில் கண்டு அங்கங்கு என்னென்ன பொருட்கள் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டனவோ அவற்றிற்கான விளக்கத்தினை இணைத்து, தேவைப்படும் இடங்களில் கணினிகளைப் பொருத்தி விரிவான விளக்கங்களைப் பார்வையாளர் அறிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்திருக்கின்றனர் தொல்லியல் துறையினர் . சில இடங்களில் லேசர் விளக்கொளிகளைப் பொருத்தி, அங்கே தொழில்நுட்பக் கருவிகளின் துணையோடு பழங்கால சூழலை விவரிக்கும் காட்சிகளை லேசர் காட்சிகளாகத் தத்ரூபமான வடிவில் நம் கண்களின் முன்னே கொண்டு வந்து காட்டுகின்றனர்.


2005ம் ஆண்டு இப்பகுதியில் அகழ்வாராய்ச்சி தொடங்கப்பட்டிருக்கின்றது. அதாவது நிலத்துக்கு மேலே 600 ஆண்டு பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்கக் கட்டிடங்கள் இருக்கின்ற அதே பகுதியின் அடித்தளத்தில் தான் இந்த ப் பணி தொடங்கப்பட்டிருக்கின்றது என்றால் எவ்வளவு சவாலான அகழ்வாய்வுப் பணியைத் தொல்லியல் துறை முன்னெடுத்திருக்கின்றது என்பதை நம்மால் ஓரளவு புரிந்து கொள்ள முடிகின்றது அல்லவா?

இந்த அகழ்வாய்வின் போது பண்டைய போலந்து மக்கள் இப்பகுதியை ஒரு வணிக மையமாகப் பயன்படுத்தியமை பற்றிய சான்றுகள் கிடைத்திருக்கின்றன. இந்த அகழ்வாய்வில், காசுகள், உடைகள், காலணிகள், அணிகலன்கள் ஆகியவற்றோடு 4000 ஆண்டு பழமையான மனித உடலின் மண்டை ஓடுகள் எலும்புக் கூடுகள் ஆகியவையும் ஈமக்கிரியைச் செய்யப்பட்ட சடங்குப் பொருட்கள் ஆகியனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 2010ம் ஆண்டு போலந்து அரசு இந்தப் பகுதியில் அகழ்வாய்வுப் பணியை வெற்றிகரமாக முடித்து இப்பகுதியை பொதுமக்கள் வந்து பார்த்து அறிந்து செல்லும் தரமான ஒரு அருங்காட்சியகமாக அமைத்துள்ளது என்பது பாராட்டத்தக்க செய்தியல்லவா?

இந்த அருங்காட்சியகத்தின் உட்சென்று அங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த வரலாற்றுச் சின்னங்களைப் பார்வையிட்டு வந்த பின்னர் என் மனதில் தமிழகத்தின் கீழடி அகழ்வாய்வுகள் தொடர்பான கடந்த சில மாதங்களின் நினைவுகள் நிழலாடத் தொடங்கின.

2015ம் ஆண்டு தொடங்கப்பட்ட அகழ்வாய்வு  தொடர்பான சர்ச்சைகளை இன்றளவும் நாம் செய்தி ஊடகங்களின் வழியாக அறிகின்றோம். இன்று புதிதாக பேசப்படும் பொருள் அல்ல கீழடி. 1980-1981ம் ஆண்டிலேயே இப்பகுதியின் மேற்பரப்பில் தென்பட்ட சிவப்பு-கருப்பு நிறத்தில் அமைந்த பானை ஓடுகளைப் பார்த்த சிலைமான் என்ற ஊரில் இருந்த ஆசிரியர் திரு.பலசுப்பிரமணியம் என்பவர், தாம் கண்டெடுத்த அப்பானை ஓடுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கக்கூடும் எனச் சந்தேகித்து அதனைத் திருமலை நாயக்கர் மகால் அருங்காட்சியகத்தில் ஒப்படைத்து தகவல் தெரிவிக்க, அப்போது ஆய்வுப் பணியை அங்கிருந்த ஆய்வாளர்கள் தொடங்க முயற்சித்தனர். அந்த ஆய்வின் போதே இப்பகுதி சங்ககாலத்திற்கு முந்தைய நாகரிகத்தின் சான்று அடங்கிய பகுதிதான் என அடையாளம் காணப்பட்டாலும் அகழாய்வுப் பணி தொடரவில்லை. இது ஏன் என்பது நம் முன்னே நிற்கும் கேள்வி என்றாலும், அது பழங்கதையாகிவிட்ட நிலையில், மீண்டும் 2015ம் ஆண்டு தொடக்கம் நடைபெறுகின்ற அகழ்வாய்வுச் செய்திகளில் நமது கவனக் குவிப்பைச் செலுத்த வேண்டியுள்ளது.

இந்திய மத்திய அரசின் தொல்லியல் துறை, மதுரையில் பாயும் வைகைக்கு அருகே உள்ள 293 கிராமங்களில் தொல்லியல் சின்னங்கள் இருப்பதைக் கண்டறிந்தது. பின்னர் கீழடியில் 43 அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டு ஆய்வாளர் அமர்நாத் என்பவரின் தலைமையில் இங்கு ஆய்வுகள் தொடங்கப்பட்டன. இந்த ஆய்வில் மனித நாகரிகத்தைப் பறைசாற்றும் பல சான்றுகள் கிடைத்தன. பானை ஓடுகளில் கீறப்பட்ட பிராமி எழுத்துக்கள், சுடுமண் உலைகள், சுடுமண் குழாய்கள், சுடுமண் உருவங்கள், சுடுமண் கலங்கள், தந்தத்தால் அலங்கரிக்கப்பட்ட தாயக் கட்டைகள், அணிகலன்கள் போன்றவை இந்த ஆய்வில் கிட்டின. அதுமட்டுமன்றி செங்கல்லினால் அமைக்கப்பட்ட கட்டிட சுவர்களையும் இந்த அகழாய்வு நமக்குப் புலப்படுத்தியது. அதுமட்டுமன்றி இதே போன்ற அடுப்புக்களும் தமிழகத்தின் அரிக்கமேடு, உறையூர் போன்ற இடங்களில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ளன என்பதும் ஒரு பண்பாட்டுக் கலாச்சார ஒற்றுமையை நமக்கு நிறுவும் சான்றாக அமைகின்றது. ஏறக்குறைய 2500 ஆண்டுகள் இவை பழமையானவை என கரிமச் சோதனைகளின் வழி இந்த அகழாய்வுச் சான்றுகள் நிரூபிக்கப்பட்டன.

பின்னர் கீழடியில் இரண்டாம் கட்ட ஆய்வு 2016ம் ஆண்டு தொடங்கியது. இதில் மேலும் வியப்பூட்டும் வகையில் ஏறக்குரைய 5000 சான்றுகள் அகழாய்வில் கிட்டின. இதன் பின்னர் படிப்படியாக கீழடி ஆய்வுக்குத் தடைகள் ஏற்படத் தொடங்கின. தொல்லியல் ஆய்வினைத் தொடர்வதற்கான நிதி ஒதுக்கீட்டில் பிரச்சனை, அகழாய்வுக் குழுவிற்குத் தலைமை தாங்கிப் பணிகளைச் சிறப்பாக முன்னெடுத்த ஆய்வாளர் திரு.அமர்நாத் அவர்களின் பணியிட மாற்றம், என ஒன்றை அடுத்து மற்றொன்றாக கீழடி ஆய்வு சவால்களை எதிர்நோக்கியதைப் பலரும் அறிவோம். இந்தச் சூழலில் இந்த ஆண்டு மீண்டும் மற்றொரு தலைமை ஆய்வாளரின் மேற்பார்வையில் அகழாய்வின் மூன்றாம் கட்டப் பணி தொடங்கப்பட்டது. ஆனால் அத்துடன் கீழடி அகழாய்வு நிறைவு பெறுகின்றது என்ற செய்தியையும் அறிவித்து மீண்டும்  இப்பணியில் ஒரு சிக்கல் முளைத்துள்ளது. இது கீழடி தொடர்பில் நம் முன்னே தொடர்கின்ற பெரிய சவால்.

இது ஒருபுறமிருக்க,  கீழடி அகழ்வாய்வுப் பணிகளின் போது கண்டெடுக்கப்பட்ட  அரும்பொருட்களைக் காட்சிப்படுத்தும் வகையில் ஒரு அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும் எனப் பலரும் குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். இக்குரல்கள் பல தரப்பிலிருந்து எழுகின்றன. சமூக ஆர்வலர்கள், வரலாற்று அறிஞர்கள், கல்வியாளர்கள் எனப் பலரும் இந்தச் சான்றுகளை மையப்படுத்தி ஒரு அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட வேண்டியது அவசியம் என்ற கருத்தினை முன் வைத்த நிலையில்,  போராட்டங்களும் நடைபெற்றன. அவை தொடர்கின்றன. இதற்கு முக்கியக் காரணங்களுள் ஒன்றாக இருப்பது, இங்கு உள்ளூரிலேயே ஒரு அருங்காட்சியகத்தை அமைப்பதை விடுத்து தமிழர் நாகரிகத்தைப் பறைசாற்றும் இவ்வரலாற்றுச் சான்றுகளை மைசூரில் உள்ள அருங்காட்சியகத்திற்குக் கொண்டு செல்லும் முயற்சிகள் தொடங்கப்பட்டமையே எனலாம்.

ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு போன்ற அகழ்வாய்வுகள் ஏற்படுத்திய அதிர்வலைகள் போலவும் அதற்கும் மேலான அதிர்வலையை கீழடி அகழாய்வுகள் ஏற்படுத்தியுள்ளன. தமிழரின் பண்டைய வாழ்வியல் கூறுகளையும் பண்பாட்டினையும் சான்று பகரும் இந்தத் தொல்லியல் சான்றுகள், கீழடிக்கு அருகாமையில் சிறப்பான ஒரு புதிய அருங்காட்சியகக் கட்டிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பொதுமக்கள் வந்து பார்த்து அறியும் வகையில் அமைக்கப்பட வேண்டியது மிக முக்கியம். தமிழக அரசு இந்தப் பணிக்கு சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கைகளை காலதாமதப்படுத்தாது செயல்படுத்த வேண்டியது மிக aவசியம். ஏனெனில் கண்டெடுக்கப்பட்ட பழம் சான்றுகளின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு அருங்காட்சியகத்தினை விரைவில்  அமைப்பது தமிழர் நம் பண்பாட்டுச் சான்றுகளைப் பாதுகாக்க  எடுக்கப்படும் காலத்திற்கேற்ற  நன்முயற்சியாக அமையும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக