செவ்வாய், 26 செப்டம்பர், 2017

ஸ்டாலின் : ஜெயலலிதா மரணம் .. சி பி ஐ விசாரணையே மர்மங்களை வெளிகொண்டுவரும்.

tamilthehindu : ஜெயலலிதாவின் மரணத்தில் அடங்கியுள்ள மர்மங்கள் குறித்த உண்மைகள் வெளி வரவேண்டும் என்றால், உடனடியாக சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டு வர சிபிஐ விசாரணை வேண்டும் என்று நேற்றைய முன்தினம் நான் கோரிக்கை விடுத்தபிறகு, நாற்பது நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட விசாரணை ஆணையத்திற்கு அவசர அவசரமாக இன்றைக்கு உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமியை நியமித்துள்ளார்கள். முன்னாள் முதல்வரின் மரணத்தைச் சூழ்ந்துள்ள மர்மங்களை விசாரிக்க வேண்டும் என்று தொடக்கத்திலிருந்தே திமுகவின் சார்பில் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

குறிப்பாக, பதவியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி மூலம் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தேன். ஆனால் அப்போதெல்லாம், ''இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் விசாரணை ஆணையம் அமைக்க இயலாது'' என்று அதிமுக அமைச்சர்களும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தட்டிக் கழித்து வந்தார்கள். ஏன், ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோதே, ''உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்'' என்று அறிவித்தார். ஆனால், அவர் பதவி விலகும் வரை அதற்காக ஒரு துரும்பைக் கூடத் தூக்கிப் போடவில்லை.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், இந்நாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து கொள்வதற்கு முன்பு, ''ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்'' என்று ஆகஸ்ட் 17 ஆம் தேதி பழனிசாமி அறிவித்தார். ஆனால், நேற்றைய முன்தினம் வரை நீதிபதியின் பெயரைக் கூட அறிவிக்காமல், துணை முதல்வர் பதவி, அமைச்சர்கள் பதவி போன்றவற்றை பங்குப் போட்டுக்கொண்டு அமைதி காத்தார்கள். இதுதொடர்பான வழக்கு ஒன்று, உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கும் வருகின்ற நிலையில், இப்போது திடீரென்று ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமியை ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நியமித்துள்ளார்கள்.
கடந்த வருடம் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல்வராக இருந்த ஜெயலலிதா அப்போலோ மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். அன்றிலிருந்து அதிமுகவின் ஒட்டுமொத்த அமைச்சரவை அப்போலோவில் முகாமிட்டு இருந்தது. முதல்வரின் செயலாளர்கள் அனைவரும் அங்கு சிறப்பு அலுவலகமே நடத்தினார்கள். லண்டனிலிருந்து மருத்துவர் ரிச்சர்ட் பீலே தலைமையில் வந்த வெளிநாட்டு மருத்துவர்கள் குழு ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்துள்ளது. மத்திய அரசின் நிறுவனமான எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் குழு சென்னை அப்பல்லோவிற்கு வந்து சிகிச்சை அளித்துள்ளது.
மத்திய அரசில் உள்ள மூத்த அமைச்சர்கள் வந்து சென்றுள்ளார்கள். தமிழக பொறுப்பு ஆளுநர் ஜெயலலிதாவின் உடல்நலம் விசாரிக்கச் சென்று, தன்னைப் பார்த்தவுடன், ''கட்டைவிரலை உயர்த்திக் காட்டினார்'' என்று கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கிறது. தமிழக அரசின் சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் எல்லாம் சிகிச்சையில் முழு பங்கு வகித்துள்ளார்கள். சிகிச்சையில் எந்த தவறும் நடக்கவில்லை என்று 6.3.2017 அன்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிக்கையே வெளியிட்டார்.
நிதியமைச்சராக இருந்து, பிறகு ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போதே முதல்வர் இலாக்காக்களை பெற்றுக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் அப்போலோவில் இருந்திருக்கிறார். தற்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் அப்போலோவில் துணைக்கு இருந்தார். அத்தனை பேருமே வெளியில் வந்து விதவிதமான பேட்டிகளை கொடுத்திருக்கிறார்கள். 'ஜெயலலிதா எழுந்து நடக்கிறார்', 'உடற்பயிற்சி செய்கிறார்' என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பொய் சொல்லி மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள்.
இப்போது மூத்த அமைச்சராக இருக்கும் திண்டுக்கல் சீனிவாசனே, 'நாங்கள் எல்லாம் ஜெயலலிதா உடல்நிலை பற்றி பொய் சொன்னோம்' என்று கூறி, பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டிருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகங்கள் எழுந்தபோது, லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேயே சென்னைக்கு வந்து பேட்டியளித்து, 'முறையாக சிகிச்சை அளித்தோம்' என்றும் கூறியிருக்கிறார். இந்த நிலையில், ஜெயலலிதா அருகில் இருந்தவர்களுக்கு துணைபோன முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையிலான அரசு இப்போது அறிவிக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தால் எவ்வித பலனும் இருக்கப் போவதில்லை.
அப்போலோவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு இருந்தபோது நிகழ்ந்த மர்மங்களில் அதிமுகவில் இருந்த சசிகலா, எடப்பாடி, ஓபிஎஸ் ஆகிய அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது. ஏனெனில், முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தபோது, இந்த மர்மம் குறித்து விசாரிக்க மறுத்தார். பிறகு, முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமியும் 40 நாட்களுக்கு மேல் நீதிபதியைக் கூட நியமிக்காமல் தடுத்துக் கொண்டிருந்தார். அதிமுக அமைச்சர்கள் ஒவ்வொருவரும் இன்றுவரை மாறி மாறி பேட்டியளித்து, ஜெயலலிதா மரணத்தில் மிகப்பெரிய மர்மம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இதுதவிர, யாருமே பார்க்க முடியாத நிலையில் இருந்த ஜெயலலிதா, புதுவை நெல்லித்தோப்பு உள்ளிட்ட நான்கு தொகுதிகளின் இடைதேர்தலின் போது, அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவில் கையெழுத்துப் போட்டதில் சர்ச்சை எழுந்துள்ளது. முதல்வர் இலாகாவை ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்குமாறு தமிழக பொறுப்பு ஆளுநருக்கு அறிவுரை வழங்கிய விவகாரமும் புதிதாக எழுந்துள்ளது. ஜெயலலிதா மறைந்தவுடன் நள்ளிரவில் ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டுள்ளார். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எய்ம்ஸ் மருத்துவர்கள் ஐந்து முறை வந்து சிகிச்சை அளித்துள்ளார்கள். வெளிநாட்டு மருத்துவர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்துள்ளார்கள்.
ஆகவே, இவ்வளவு பரந்த விசாரணையில் மத்திய அமைச்சர்கள், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, சிங்கப்பூர் டாக்டர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள் உள்ளிட்டவர்களைகளையும் அழைத்து விசாரிக்க வேண்டியுள்ளது. இதுபோன்ற மாநிலம் சார்ந்து மட்டுமின்றி, மாநிலத்திற்கு வெளியிலும், குறிப்பாக வெளிநாடுகளில் உள்ளவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. மட்டுமே இந்த விசாரணைக்கு உகந்த அமைப்பாக இருக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.
ஆகவே, முழு விசாரணை நடைபெற்று தமிழக மக்களுக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்தில் அடங்கியுள்ள மர்மங்கள் குறித்த உண்மைகள் வெளி வரவேண்டும் என்றால், இனியும் தாமதிக்காமல் உடனடியாக சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக