புதன், 6 செப்டம்பர், 2017

'நீட்' போராட்டத்துக்கு தடை கோரும் மனு: உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

tamilthehindu : மாணவி அனிதா மரணத்தை அடுத்து நீட்டுக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் வலுத்து வருகிறது இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.> நீட் மருத்துவ நுழைவுத்தேர்வை அமல்படுத்துவதில் தமிழகத்துக்கு விதிவிலக்கு வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதில் இந்த ஆண்டு விதிவிலக்கு கட்டாயம் உண்டு என்று நம்பிய நிலையில் திடீரென நீட் மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு விதிவிலக்கு இல்லை என்று அறிவிக்கப்பட்டது.< நீட் நுழைவுத்தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற அரியலூர் மாணவி அனிதாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் மாணவி அனிதா திடீரென தற்கொலை செய்துக்கொண்டார். இதற்கு நீதி கேட்டும் நீட் நுழைவுத்தேர்வை எதிர்த்தும் தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தை சேர்ந்த ஜி.எஸ்.மணி என்ற வழக்கறிஞர் அனிதாவின் மரணத்தை அடுத்து, நீட் உத்தரவுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. நீட் விவகாரத்தில் உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது இது. உத்தரவை மீறுவதாகும்.
அனிதாவின் மரணத்தை அடுத்து நடக்கும் இத்தகைய போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன. இதில் உடனடியாக உச்ச நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் அவசர வழக்காக இதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று  கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு எடுப்பதற்கு அப்படி என்ன தேவை வந்தது, உடனடியாக வழக்கை விசாரிக்கும் அளவுக்கு என்ன நடந்து விட்டது என்று கூறி அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி மறுத்துவிட்டார்.
இந்த வழக்கு பின்னர் ஒரு நாளில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக