புதன், 6 செப்டம்பர், 2017

பிரகாஷ் ராஜ் :அச்சமில்லை அச்சமில்லை என்ற கவுரி லங்கேஷின் மன உறுதி கண்டு வியக்கிறேன்.

கவுரி லங்கேஷ் படுகொலை மூலம் மவுனமாகிவிடுவார்கள் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் இப்போது கவுரி லங்கேஷ் மரணத்தால் சத்தம் அதிகமாகியிருக்கிறது. துப்பாக்கி குண்டுகளால், மிரட்டலால், கொலையால் இந்த சத்தத்தை நிறுத்த முடியாது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
பெண் பத்திரிகையாளர் கவுரி லங்லேஷ் மர்ம நபர்களால் செவ்வாய்க்கிழமை இரவு பெங்களூருவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் கவுரி லங்கேஷின் குடும்ப நண்பர் நடிகர் பிரகாஷ்ராஜ் இதுகுறித்துப் பேசியதாவது:
''லங்கேஷ் சார் என் குருநாதர். அவர் பத்திரிகையில் பணியாற்றும் போது அவரால் கொண்டு வரப்பட்ட இலக்கியங்கள், சிந்தனைகளே என்னை வளர்த்தெடுத்தன. அவர் மேடை நாடகம் நடத்தும்போது நான் தவறாமல் செல்வேன். பள்ளி வகுப்பறையில் கற்காத வாழ்க்கைப் பாடங்களை என் இளமைப் பருவத்தில் அவரிடம் நான் கற்றுக்கொண்டேன். நிறைய எழுத்தாளர்கள், கவிஞர்களை சந்தித்துப் பேசும் வாய்ப்பு லங்கேஷ் சாரால் கிடைத்தது.

'என்ன படிக்கிற, என்ன பண்ற' என்று தொடர்ந்து அக்கறையாக விசாரிப்பார். பிறர் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிப்பார்.
பத்திரிகையாளர்கள் எப்போதுமே எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்று சொல்வார். எதிர்க்கட்சி ஆளும்கட்சியாக மாறினாலும் அப்போதும் தொடர்ந்து கேள்வி எழுப்ப வேண்டும். கேள்வி எழுப்புவதே பத்திரிகையாளரின் பணி என்று சொல்வார்.
தப்பை தைரியமாகத் தட்டிக் கேட்க வேண்டும், நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும் என்பதை அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன். அவரின் மகள்தான் கவுரி லங்கேஷ். என் 30 ஆண்டுகால நண்பர். லங்கேஷ் என்னைப் பொறுத்தவரையில் ஒரு ஹீரோ. அவரின் விதைகள் நாங்கள்.
இப்போதைய சிந்தனையாளர்களைக் காட்டிலும் அதிகம் சிந்தித்து, பேசி, எழுதியவர் லங்கேஷ். ஆனால், அப்போது சமுதாயத்தில் பிறரின் சிந்தனைகளை மதிக்கும் பக்குவம் இருந்தது. இப்போது அந்தப் பக்குவம் எங்கே போனது என்று தெரியவில்லை.
கவுரி லங்கேஷை கொலை செய்தது யார் என்று கண்டுபிடிக்க வேண்டியது காவல்துறையின் வேலை. அதை அரசியலாக்குவதில் அர்த்தமில்லை. ஆனால், இங்கே 10 ஆண்டுகளுக்கும் மேலாக கேள்வி எழுப்புபவர்களின் குரல்கள் நசுக்கப்படுகின்றன. அடக்குமுறை நிகழ்த்தப்படுகிறது. இந்த நாட்டில் மனசாட்சி இல்லாமல் செயல்படுகிறார்கள்.
ஒருவருக்கு தன் கருத்தைச் சொல்ல உரிமை இருக்கிறது. ஆனால், அந்தக் கருத்து மேலெழக் கூடாது என்று அடிக்கிறார்கள். கவுரி லங்கேஷ் படுகொலையைக் கண்டித்தும், அவருக்கு மரியாதை செலுத்தவும் திரண்ட கூட்டத்தைப் பார்த்து ஒரு பக்கம் வேதனையும், மறுபக்கம் பெருமையும் அடைகிறேன். அச்சமில்லை அச்சமில்லை என்ற கவுரி லங்கேஷின் மன உறுதி கண்டு வியக்கிறேன்.
இப்படிப்பட்ட படுகொலை மூலம் மவுனமாகிவிடுவார்கள் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் இப்போது கவுரி லங்கேஷ் மரணத்தால் சத்தம் அதிகமாகியிருக்கிறது. இந்த சத்தம் இன்னும் அதிகரிக்கும். துப்பாக்கி குண்டுகளால், மிரட்டலால், கொலையால் இந்த சத்தத்தை நிறுத்த முடியாது.
ஒரு பெண் என்றும் பாராமல் இப்படி ஒரு கொலையைச் செய்திருக்கிறார்கள். இத்தனைக்கும் கவுரி லங்கேஷ் தனக்காக எதையும் செய்துகொள்ளவில்லையே? இந்தப் படுகொலையை செய்தது யார் என்பது முதலில் மக்களுக்குத் தெரிய வேண்டும்.
இங்கே பயம் என்பது தேசிய நோய் ஆகிவிட்டது. உண்மையைப் பேசினால் வாழ முடியாது என்ற நிலை வந்துவிட்டது. இது எதிர்ப்பு அரசியலை, மாற்று சிந்தனையை, இன்னொரு குரலைக் கொல்லும் முயற்சி. கோழைகளுக்கு நடுவில் வாழ்வது போல் இருக்கிறது.
கவுரி லங்கேஷ் கொலைக்காக மட்டும் இதைப் பேசவில்லை. நாம் அழிக்க வேண்டியது எதிர்க்கக் கூடாது, வேறு கருத்து சொல்லக் கூடாது, குரல் உயர்த்தக் கூடாது என்று நினைக்கும் சிந்தனையை. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதை மதித்து வரவேற்கும் மனப் பக்குவம் இங்கு வரவேண்டும்'' என்றார் பிரகாஷ்ராஜ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக