திங்கள், 25 செப்டம்பர், 2017

குழந்தைகள் இறப்பு வீதம் இந்தியா முதலிடம் .. நைஜீரியா காங்கோவை பின்தள்ளி 195 நாடுகளில் .. வடமாநிலங்களின் "திறமை"?

ருக்மிணி எஸ் : மின்னம்பலம் :
உலகிலேயே ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் இந்தியாவில் அதிகம் என லான்சிட் மருத்துவ இதழ் வெளியிட்ட 2016 குளோபல் பர்டன் ஆஃப் டிசிஸ் (ஜி.பி.டி.) அமைப்பின் புதிய புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
ஜி.பி.டி. தான் வருடாந்திர, உலகளாவிய சுகாதார நிலவரங்கள் குறித்த விரிவான மதிப்பாய்வு செய்யும் ஒரே அமைப்பு. உலக அளவிலும் தேசிய அளவிலும் உள்ள 330 நோய்கள், இறப்புகளின் காரணங்கள், காயங்கள் ஆகியவற்றைக் குறித்த ஆய்வை மேற்கொள்ளும் அமைப்பு இது. இந்த ஆய்வு உலகம் முழுவதும் 195 நாடுகளின் நிலவரங்களைத் தெரிவிக்கிறது. இந்த ஆய்வு அமெரிக்காவில் சியாட்டிலில் (Seattle) வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள இன்ஸ்ட்டியூட் ஃபார் ஹெல்த் மாட்ரிக்ஸ் அன்ட் எவால்யுயேஷன் (ஐ.ஹெச்.எம்.இ.) அமைப்பால் ஒருங்கிணைக்கப்படுகிறது.
இறப்பு விகிதம் அனைத்து வயதினரிடையேயும் குறைந்து வருகிறது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் பெருமளவில் குறைந்துள்ளது. 1970இல் 16.4 மில்லியனாக இருந்த ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு, 2016இல் 5 மில்லியனுக்குக் குறைவாகவே இருந்தது. ஆனால், 9 லட்சம் என்ற மிகப் பெரிய எண்ணிக்கையில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு இந்தியாவில் 2016இல் நிகழ்ந்தது. இதற்கடுத்து நைஜீரியாவிலும் காங்கோ ஜனநாயகக் குடியரசிலும் இருந்தது. 2016இல் இந்த அனைத்து மரணங்களில் 72.3% (39.5 மில்லியன்) மரணங்கள் தொற்று நோய் அல்லாத நோய்கள் காரணமாகக் கூறப்பட்டது. ரத்த ஓட்டத் தடை இதயநோய் (Ischemic heart disease) அத்தனை பகுதிகளிலும் இந்த அகால மரணங்களின் முக்கியக் காரணமாக இருந்தது.

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் இதற்கான முக்கியக் காரணம் சுவாசத் தொற்று நோய்கள். உலக அளவில் 2016இல் இந்த இதயநோயால் மொத்தம் 9.48 மில்லியன் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இது 2006 முதல் உலக அளவில் 19% அதிகரித்துள்ளது. இதுதான் இந்தியாவிலும் முன்னணிக் காரணியாக இருந்தது. நீரிழிவு நோய் 2016இல் உலகளவில் 1.43 மில்லியன் மரணங்களுக்கான காரணமாக இருந்தது. இது 2006 முதல் 31.1% அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, ஹெச்.ஐ.வி/எய்ட்ஸ் உள்ளிட்ட தொற்று நோய்களால் ஏற்படும் மரணங்கள், காச நோய்கள் மற்றும் மலேரியாவால் ஏற்படும் மரணங்கள் குறைந்துள்ளன. விதிவிலக்காக, டெங்கு காய்ச்சல் நோயால் 37,800 மரணங்கள் 2016இல் (இது 2006 முதல் 81.8% அதிகரித்துள்ளது) நிகழ்ந்துள்ளன. மேலும் மருந்தை எதிர்த்து நிற்கும் காசநோயால் 2016இல் 10,900 மரணங்கள் நிகழ்ந்துள்ளன (இது 2006 முதல் 67.6% அதிகரித்துள்ளது).
7.1 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளுக்குக் காரணமாகப் புகையிலை இருந்தது. போதிய உணவு கிடைக்காதது மொத்த மரணங்களில் ஏறக்குறைய 5இல் 1க்கான (18.8%) காரணமாக உள்ளது. இவற்றைத் தவிர உயர் ரத்த குளுக்கோஸ், உயர் ரத்த அழுத்தம், உயர் உடல் நிறைக் குறியீட்டெண் (பி.எம்.ஐ), மொத்த கொழுப்புச்சத்து அதிகமாக இருத்தல் ஆகியவை எல்லாம் உலக அளவில் ஆண்களும் பெண்களும் இறப்பதற்கான முதல் பத்து காரணங்களில் இடம்பெறுகின்றன.
‘மக்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள் என்பதை எங்கள் கண்டுபிடிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன, கடந்த சில பத்தாண்டுகளில், நாங்கள் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு மற்றும் மலேரியா போன்ற உலகின் மிக மோசமான சில நோய்கள் மற்றும் நோய் நிலவரங்களிலிருந்து இறப்பு விகிதங்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதை அடையாளம் கண்டோம்’ என்று ஐ.ஹெச்.எம்.இ.யின் இயக்குனர் டாக்டர் கிறிஸ்டோபர் முர்ரே கூறினார். இந்த முன்னேற்றம் இருந்தாலும்கூட, உடல் பருமன், மோதல்கள் மற்றும் மனநலம் பாதிப்பு உள்ளிட்ட மனநோய்கள் ஆகிய பிரச்னைகளால் பல நாடுகள், சமூகங்கள் பின்னடைவைச் சந்திக்கும் நிலையையும் நாம் எதிர்கொண்டுள்ளோம்.
2006 முதல் மோதல்கள் மற்றும் பயங்கரவாதங்களால் மரணமடைந்தோர் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. இது 2016இல் 150500 (2006 முதல்143% அதிகரித்துள்ளது) அளவை எட்டியுள்ளது. நிலவரம் பெரும்பாலும் வடஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படும் மோதல்களின் விளைவுதான்.
உலகம் முழுவதிலும் மனிதர்களின் வாழ்நாள் அதிகரித்துள்ளது. ஆனால், இந்தியாவில் குழந்தைகளின் வாழ்வு பிஞ்சிலேயே கருகிப்போவது அதிகமாகக் காணப்படுகிறது. இந்தியக் குழந்தைகளின் நிலை உலகளாவிய போக்கினின்றும் பின்தங்கிய நிலையில் இருப்பது கவலைக்கும் ஆய்வுக்கும் உரியது.
நன்றி: http://www.huffingtonpost.in/
தமிழில்: ராஜலட்சுமி சிவலிங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக