செவ்வாய், 19 செப்டம்பர், 2017

புனிதத்தை தீட்டாக்கிய ஆண்கள் ...வெளிநாடுகளில் இருந்து கற்றுக்கொள்ளுவோம் ..ஷாலின் மரியா லாரன்ஸ்

Shalin Maria Lawrence : சுதந்திரத்தின் நிறம் சிவப்பு
நன்றி குமுதம் : Dated : 6-09 -2017
16 வயதிலிருந்தே எனக்கு தாயாகும் ஆசை இருந்தது .மற்றவர்கள் காதலனை
தேடும் அந்த காலத்தில் எனக்கு தாய்மை உணர்வு மேலோங்கி இருந்தது
.இன்று வரை குழந்தை பெற்றுக்கொள்ளவிட்டாலும் குழந்தைகளுக்கான அந்த
அதீத அன்பும் நேசமும் மனம் முழுதும் பரவி கிடக்கிறது . ஆனால் சில
நாட்களுக்கு முன் நடந்த அந்த விஷயத்தை கேள்வி பட்டபொழுது என் அடி
வயிற்றில் கூர் வாளை கொண்டு கிழித்ததை போல் ஒரு கோர உணர்வு . ஆம்
பாளையம்கோட்டையை சேர்ந்த சாஃரின் ஹாஜிரா என்கிற 12 வயதே ஆனா
ஒரு பெண் குழந்தையின் தற்கொலை செய்திதான் அது .மன்னிக்கவும்
....தற்கொலையல்ல கொலை செய்தி அது . பெண் உடலில் நிகழும்
இயற்கையின் அழகிய மாற்றங்களை தீட்டு ,அசிங்கம் என்று கூறி இழிவு
படுத்தி ஒரு சின்னஞ்சிறு குழந்தையை தற்கொலை என்கிற விஷயத்தை
செய்யவைத்த இந்த சமூகமும் இந்த சமூகத்தின் போலி கோட்பாடுகளும்
செய்த படுகொலை அது .

இரண்டு மாதத்திற்கு முன்பு தான் வயதிற்கு வந்த அந்த சிறுமியின் யூனிபார்ம்
உதிரப்போக்கில் கறைபட்டத்திற்காக அந்த சிறுமியை அவரின் ஆசிரியையை
எல்லார்முன் கடுமையாக திட்டி இருக்கிறார் ,அவருக்கு ஒரு நாப்கினுக்கு கூட
ஏற்பாடு செய்யாமல் அவரை தலைமை ஆசிரியரிடம் கொண்டுபோய் நிறுத்தி
அவரும் சிறுமியை திட்டி இருக்கிறார் . அந்த விஷயங்கள் தாங்காமல் அந்த
குழந்தை சரியாக எழுதக்கூட தெரியாமல் ஒரு கடிதத்தை எழுதி
வைத்துவிட்டு பக்கத்துவீட்டு மாடியில் இருந்து குதித்து தன் உயிரை
மாய்த்திருக்கிறது .
சில வாரங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் "சானிடரி நாப்கின் " பற்றி
சில பெண்கள் அதிகமா விழிப்புணர்வு கட்டுரைகள் எழுதினார்கள் .சானிடரி
நாப்கின் பாக்கெட்டை ஏன் கருப்பு கவரில் சுற்றி கொடுக்கின்றீர்கள் என்று ஒரு
சிறுமி கதாபாத்திரம் "Lipstick under my burkha " படத்தின் டிரெய்லரில் கேட்டு
இருப்பார் .அதன் தொடர்ச்சியாக எழுந்த சமூக பதிவுகள் அவை . அந்த
பதிவுகளில் ஏன் பெண்கள் மாதவிடாய் என்கிற விஷயத்தை பற்றி அசிங்கப்பட
கூடாது என்று பெண்கள் எழுதி இருந்தார்கள் .சானிட்டரி நாப்கின் வாங்க
இன்னும் கூட கடைகளுக்கு அண்ணன் தம்பிகளை அனுப்புவோரை பற்றி
எழுதி இருந்தார்கள் . மாதவிடாய் நாட்களில் அலுவலகத்தில் இருந்தால்
அங்கே அதை மாற்றும் வசதிகள் இல்லாதது பற்றி பெண்கள் வாய்திறக்க
கூச்சப்படுவதை எழுதி இருந்தார்கள் . பெண்கள் நாப்கின் வேண்டுமென்று
மற்றபெண்களிடம் எப்படி ரகசியமாய் பேசி கொள்கிறாரகள் என்பதை பற்றி
எழுதி இருந்தார்கள் . இந்த விஷயங்களினால் பெண்கள் எப்படி உடல் ரீதியாக
பாதிக்கப்படுகிறார்கள் ,எப்படி உளவியல் ரீதியாக சித்திரவதைக்கு
ஆளாகிறார்கள் என்று எழுதி இருந்தார்கள் .
அப்பொழுது இன்னும் சில பேர் எப்படி இந்தியாவின் பல கிராமங்களில்
பெண்களுக்கு சானிடரி நாப்கின் என்றால் என்னவென்றே தெரியாமல்
இருக்கிறார்கள் என்ற கசப்பான உண்மையை உரக்க சொன்னார்கள் .
இவை எல்லாம் நடந்து கொண்டிருக்கும்பொழுது பல ஆண்களும் ஏன்
பெண்களும் கூட சானிடரி நாப்கின் பற்றியும் மாதவிடாய் பற்றியும்
எழுதுவதை ,பேசுவதை கிண்டல் செய்ய ஆரம்பித்தனர் .பெண்கள் என்றாலே
இதை பற்றி மட்டும்தான் பேச வேண்டுமா ,மாதவிடாய் பற்றி பேசி என்ன
கிழிக்க போகின்றீர்கள் ,பெண்கள் எல்லாம் எப்பொழுதோ முன்னேறி
விட்டார்கள் ,நீங்கள் செய்வது தேவையில்லாத வேலை என்று எள்ளி
நகையாடினார்கள் .இன்னும் ஒருபடி மேலே பொய் மாதவிடாய் பற்றிய
விழிப்புணர்வு கட்டுரைகளை எழுதிய பெண்களை திட்டி தீர்த்தார்கள் . அந்த
அத்தனை பேர் கைகளிலும் இன்று ஹாஜிராவின் ரத்தம் வழிகின்றது .
கிமு கிபி என்கிற புத்தகத்தில் கார்ட்டூனிஸ்ட் மதன் ஒரு விஷயத்தை சொல்லி
இருப்பார் ,'உலகத்தில் பெண்ணுக்கு மட்டுமே படைக்கும் ஆற்றல் இருந்தது
இதை கண்டு மலைத்த ஆண் முதலில் அவளை வழிபட துவங்கினான் .பின்பு
அவள் பேராற்றல் அவனை அடிமைப்படுத்திவிடும் என்கிற எண்ணத்தில்
மாதவிடாய் -தீட்டு என்கிற விஷயத்தை தோற்றுவித்து அவளை மெல்ல
மெல்ல தனக்கு அடிமை ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டான் "
ஆம் ஆதி மனிதன் அதிசயித்துதான் போனான் . கொஞ்சநஞ்சமல்ல வாய்
திறந்து ஆவென மலைத்து போனான் . மருத்துவம் என்று ஒன்று இல்லாமல்
சிறிது அடிபட்டாலும் மனிதன் இறந்துகொண்டிருந்த காலத்தில் 5 நாட்கள்
உடலில் இருந்து குருதி கொட்டினாலும் பெண் சாகவில்லை .மாறாக
அதற்குப்பின்தான் அவள் இன்னும் பலம் பெறுகிறாள் . அவனோடு கலவி
கொள்கிறாள் .ஒன்பது மாதங்களில் ஒரு குழந்தையை வெளியே தள்ளுகிறாள்
.அப்பொழுதும் அவள் இறக்கவில்லை . இதை கண்ட ஆதி மனிதன் மிரண்டு
போனான் .அவளை "பராசக்தி" என்றான் ,"சக்தி" என்றான் அவளை வழிபட
துவங்கினான் . அம்மன் வழிபாடு இப்படித்தான் துவங்கியது . அவனே பூஜை
செய்தான் .பெண்ணை கேட்டே எல்லா விஷயமும் நடந்தது ,எப்பொழுது
வேட்டைக்கு போக வேண்டும் ,என்ன மருந்து போடுவது ,எப்போது விதைப்பது
,எப்போது அறுவடை செய்வது ,சமூக கட்டுப்பாடு பெண்ணின் கையில்
இருந்தது .
காலங்கள் மாறியது ஆணும் மாறினான் ,அவன் கட்டுப்பாட்டில் விஷயங்களை
கொண்டுவர துடித்தான் ,அவள் இடத்தில அவனை வைக்க முற்பட்டான் .
அவளின் மாதவிடாயை அசிங்கம் என்றான் ,தீட்டு என்றான் ,அவளை வெட்கி
போக செய்தான் .அவளை ஒதுக்கினான் .முடக்கினான் .
எது இதுவரையில் அவளின் பலமாக இருந்ததோ அதையே அவளின்
பலவீனமாக மாற்றினான் "Her strength was made her weakness "
தாய்மை ஒரு அழகான விஷயம் ,அந்த விஷயத்திற்கு பெண்ணின் உடலை
,மனதை தயார்படுத்தும் இயற்கையின் மாயாஜாலம் தான் உதிரப்போக்கு.
அந்த மாயாஜாலத்தை வக்கிரமாக மாற்றியது இந்த சமூகத்தின் போலி
கட்டமைப்புகள் . இயற்கையை மீறிய மனிதனின் ஆதிக்க சிந்தனைகள் .
இதற்கு பலி இந்திய பெண்களின் நிம்மதியும் ,தன்மானமும் ,ஆரோக்கியமும்
,இப்பொழுது ஒரு குழந்தையே பலியாக கொடுத்திருக்கிறோம் .
மாதவிடாயும் அது சார்ந்த விஷயங்களும் அசிங்கம் என்று கட்டமைத்ததின்
விளைவாக இன்று பல பெண்கள் அது தொடர்பான தெளிவு இல்லாமல்
அவர்களின் அவர்களின் பெண்ணிய ஆரோக்கியம் (feminine Health )
பின்னுக்கு தள்ளப்பட்டிருக்கிறது .கர்ப்பபை மற்றும் பெண் உறுப்பு சார்ந்த
தொற்றுகளும்,நோய்களும் அதிகரித்திருக்கிறது .
சமீபத்திய ஆய்வின் படி இந்தியாவின் கிராமங்களில் வெறும் 5 சதவிகித
பெண்கள் மட்டுமே சானிடரி நாப்கின்கள் பயன்படுத்துகிறாரகள் மற்றவர்கள்
துணி மட்டுமே உபயோகித்து அதனால் நடைமுறை சிக்கல்களுக்கு
ஆளாகின்றனர் . இந்தியாவில் நான்கில் ஒரு பெண் குழந்தை
பருவமடைந்ததும் மாதத்தில் தோராயமாக 3 நாட்கள் பள்ளிக்கு
செல்வதில்லை மற்றும் பருவமடைந்த பின் பல பெண்கள் பள்ளிக்கு
செல்லுவதை நிறுத்துகின்றனர் என்று அந்த ஆய்வு சொல்லுகிறது . இங்கே
ஆரோக்கியம் மட்டுமல்ல அவர்களின் கல்வியும் அது தரும் முன்னேற்றமும்
தடுக்கப்படுகிறது . இதற்கெல்லாம் காரணம் மாதவிடாய் அசிங்கம் என்று
கருதும் பொதுப்புத்தியே .
இதே நிலையில் தான் பல சிறுமிகள் பருவமடைந்தபின் தங்களுக்கு வரும்
உடலியல் மாற்றங்களை அசிங்கம் என்று நினைத்து அவர்களுக்கு ஏற்படும்
வலி ,வியாதி போன்ற விஷயங்களை பெரியவர்களிடம் இருந்து
மறைத்துவிடுகின்றனர் .
இங்கே நாம் செய்ய வேண்டியது என்ன ?
தயவு செய்து வெளிநாடுகளில் இருந்து கற்றுக்கொள்ளுவோம் .வெளிநாட்டு
போன் வாங்கி வைத்து கொள்ள தெரிந்த நமக்கு வெளிநாட்டு மனநிலை
வரவில்லை என்பதே உண்மை .
வெளிநாடுகள் மஞ்சள் நீராட்டு விழாக்கள் கொண்டாடுவதில்லை ,மாறாக
குழந்தைகளுக்கு அவர்கள் உடம்பில் நிகழும் மாற்றங்களை புரிய
வைக்கிறார்கள் ,அவர்கள் அச்சத்தை கலைகிறார்கள் ,அவர்களை
உடலளவிலும் ,உளவியல் ரீதியாகவும் தனியார் செய்கிறார்கள் .
அதுமட்டுமல்ல அந்த பெண்ணின் சகோதரர்களுக்கும் அதை பற்றி
புரியவைக்கிறாரகள் . இதன் மூலம் அந்த குழந்தைகள் சிறுவயது முதலே
தங்கள் ஆரோக்கியத்தை பேணி காத்துக்கொள்கிறார்கள் ,அவர்களின்
ஆண்களும் அவர்களை இந்த விஷயத்திற்காக கிண்டலடிப்பது இல்லை
.பள்ளிகளிலேயும் ஆன் பெண் இருபாலருக்கும் sex education எனப்படும் பாலியல்
கல்வியில் இதை பற்றியும் சொல்லித்தருகிறார்கள் . முக்கியமான விஷயம்
...எக்காரணத்தை கொண்டும் இயற்கை தந்த இந்த கோடையை அவர்கள் "தீட்டு
" என்று சொல்லுவது கிடையாது .
இங்கே இந்த நாட்டிலும் இதுதான் தேவை படுகிறது .இங்கு பெண்ணை
தெய்வமாய் பார்க்க வேண்டாம் .மாறாக பெண்ணை ரத்தம் ,நரம்புகள்
,உணர்வுகள் நிறைந்த ஒரு உடலாய் உதலில் பார்க்க துவங்கவும் .அந்த
உடலில் நிகழும் மாயாஜாலங்களை பெண்களுக்கும் குறிப்பாய் ஆண்களுக்கும்
கட்டாய கல்வியாக்கி அவர்களை பள்ளியிலேயே தெளிவாக்குவோம் . பெண்
படைப்பாற்றலின் சாரம் .அவள்தான் உதிரத்தை கருவாக்குகிறாள் ,அந்த
உதிரத்தில் இருந்துதான் நாம் பிறக்கிறோம் .9 மாதங்கள் ஒரு உயிர் அந்த
உதிரத்தில்தான் திளைக்கிறது . அந்த உதிரம் புனிதம் .
இந்த மனநிலையை ஆண்களும் சரி பெண்களும் சரி சரி விகிதத்தில் புரிந்து
தெரிந்துகொள்ளும் அவசியம் இந்த நவீன நூற்றாண்டில் இருக்கிறது .
மாதவிடாய் பற்றிய ஒரு ஆவண படம் இருக்கிறது தமிழில் (திருமதி கீதா
இளங்கோவன் இயக்கியது ) பள்ளி கல்லூரிகளில் அது காட்சிப்படுத்தப்பட்ட
வேண்டும் .குறிப்பாக கிராமங்களில் மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு அரசு
சார்பாக கொண்டுசெல்லப்படவேண்டும் . சமூகவலைத்தளங்களில் பாலின
பேதமில்லாமல் பாரும் இதைப்பற்றி எழுத வேண்டும் . இதுமட்டுமே
இந்தியாவின் பெண்களை காப்பாற்ற உதவும்.இன்னொரு உயிர்பலியை .
மேல்சொன்ன விஷயங்கள் நடக்கும்போது கேலி செய்யாதீர்கள் ,ஏனென்றால்
இன்று ஹாஜிராவுக்கு ஏற்பட்டது நாளை என் மகளுக்கோ இல்லை உங்கள்
பிள்ளைக்கோ நடக்கலாம் . பலி கொடுத்துவிடாதீர்கள் .
இந்திய சுதந்திரம் அடைந்துவிட்டதாக சொல்லுகிறார்கள் .ஆனால் எப்பொழுது
என் இந்திய பெண் உடலளவிலும் சுதந்திரம் அடைகிறாளோ அன்றே என் நாடு
சுதந்திரம் பெற்றதாய் நான் சொல்லுவேன் .
உதிரம் புனிதம் .
ஷாலின் மரியலாரன்ஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக