செவ்வாய், 19 செப்டம்பர், 2017

18 தொகுதிகளுக்கும் மறு தேர்தல் நடக்கும்.! ஜெயாவின் டான்சி வழக்கறிஞர் ஜோதி பேட்டி

tamilthehindu :சென்னை மூத்த வழக்கறிஞர் ஜோதி 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் குறித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
முதல்வர் ஜெயலலிதாவின் பல வழக்குகளில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜோதியிடம் தி இந்து தமிழ் சார்பில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் குறித்த கேட்டதற்கு அவர் அளித்த பதில்:
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் சாத்தியமா? இதற்கு முன் இப்படி நடந்த உதாரணம் உண்டா?
தமிழ்நாட்டை பொறுத்தவரை முதன் முதலில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் ஹாஜாஷெரீப் என்கிற துறைமுக தொகுதி எம்.எல்.ஏ. அவர் பத்தாவது ஷெட்யூல்படி தகுதி நீக்கம் செய்யப்படவில்லை.அவர் சவுதி தூதராக சென்றதால் நீக்கப்பட்டார்.
1986 ல் 10வது ஷெட்யூல் வந்த பிறகு தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஜி.விஸ்வநாதன் மற்றும் அழகு திருநாவுக்கரசு என்கிற இரண்டு எம்.எல்.ஏக்கள் தான். அவர்கள் அன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடத்திய பொதுக்கூட்டத்துக்கு சென்று வாழ்த்தி பேசினார்கள். இதை வைத்து அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார்.

அன்று யார் சபாநாயகர்? வழக்கில் என்ன நடந்தது?
அன்றைய சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா. நோட்டீசை எதிர்த்து கீழ்க்கோர்ட்டில் தள்ளுபடியாகி, உயர் நீதிமன்ற பெஞ்ச் தள்ளுபடி செய்து, உச்சநீதிமன்றம் வரை சென்றார்கள். சுப்ரீம் கோர்ட்டில் அரசு தரப்பில் நான் தான் ஆஜரானேன். உச்சநீதிமன்றம் தகுதி நீக்கம் சரிதான் என்று ஏற்றுக்கொண்டார்கள்.
அதில் என்ன சொன்னார்கள் என்றால் ஒருவர் எந்தக்கட்சியில் தேர்வு செய்யப்பட்டாரோ, அந்த கட்சிக்கு விரோதமாகவும், மாற்றுக்கட்சியினருடன் சேர்ந்து கருத்தை பரிமாறுவது தவறு என்றார்கள். கட்சியின் செயல்பாடுகளை விமர்சிப்பது வேறு, கட்சிக்கு வெளியே பேசுவது வேறு. உங்கள் மாற்றுக்கருத்துக்களை கட்சிக்குள் எந்த குழுவுக்குள்ளும் பேசலாம், ஆனால் வெளியில் பேசுவதோ இது போன்ற மாற்றுக்கட்சியினர் கூட்டத்தில் கலந்து கொள்வதோ கட்சித்தாவல்தான் என்றார்கள்.
இதில் 18 பேர் நீக்கத்தை எப்படி ஒப்பிட முடியும்?
இவர்கள் 19 பேரும் பத்திரிக்கை நிருபர்களை சந்திக்கும் போதெல்லாம் முதல்வரை மாற்றணும் என்று பேட்டி அளிக்கிறார்கள், கவர்னரிடம் போய் முதல்வரை மாற்ற மனு கொடுக்கிறார்கள். இதை உட்கட்சி பிரச்சனையாக பார்க்க முடியாது.
கட்சி தான் தேர்வு செய்து கட்சி கடிதம் கொடுத்து முதல்வராக கவர்னர் ஒருவரை பதவி பிரமாணம் செய்து முதல்வராக்குகிறார். அவரிடமே சென்று முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்வது தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் செய்யும் காரியமல்ல. ஆகவே 10 வது ஷெட்யூல் பிரிவு 2(எ) படி அவர்கள் தகுதியிழப்புக்குள்ளாகிறார்கள்.
இது நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படுமா? நீதிமன்றத்தில் இந்த வாதம் நிற்குமா?
தகுதி இழப்பில் முன்னோடி தீர்ப்புகள் வடகிழக்கு பிரதேச மாநிலங்களில் தான் அதிகம் வந்துள்ளது. கோவாவில் நாயக் வழக்கு, ஹிலோ கோட்டகன் ஆகியோர் வழக்கில் இதே போன்ற தீர்ப்பு வந்துள்ளது. அதெல்லாம் முன்னுதாரணம். இந்த வழக்குகளின் அடிப்படையில் பார்க்கும் போது இது செல்லும்.
பொதுக்குழுவை கூட்ட நீதிமன்றம் அனுமதித்த பிறகு, அதில் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்துக்கொண்டு தினகரன் , சசிகலாவை நீக்கிய பிறகு 19 எம்.எல்.ஏக்களும் தங்கள் நிலையை மறுபரிசீலனை செய்திருக்க வேண்டும். அவர்கள் இன்னும் அதே நிலையில் நீடித்ததே அவர்கள் தானாக தங்களை கட்சித்தாவல் தடைச்சட்டத்திற்குள் கொண்டு வந்துவிட்டார்கள் என்று அர்த்தம்.
நீதிமன்றம் இதை எப்படி பார்க்கும்? தடை கொடுக்குமா?
தடை கொடுக்க மாட்டார்கள். 10 வது ஷெட்யூல் பிரிவு 7ன் படி ஹிலோ கோட்டகன் தீர்ப்பின் அடிப்படையில், தகுதி நீக்கம் குறித்த விவகாரங்களில் நீதிமன்றத்தின் பார்வையில் சபாநாயகருக்கு எதிராக தீர்ப்பு வருவது மிக மிக அரிது. இதைப்பற்றி விவாதிக்கலாமே தவிர சபாநாயகர் எடுத்த முடிவுகள் தவறு என்று நீதிமன்றம் சொல்வதற்கு வாய்ப்புகள் குறைவு.
இது தான் நடைமுறை. ரவி நாயக் வழக்கிலும், வடகிழக்கு மாநிலங்களில் வந்த தீர்ப்புகளிலும் சபாநாயகர் தீர்ப்புக்கு எதிராக வந்தது மிக மிக குறைவு என்பது என் தனிப்பட்ட கருத்து.
சபாநாயகரின் அதிகாரத்தில் எந்த அளவுக்கு நீதிமன்றம் தலையிட முடியும்?
சபாநாயகர் அவரது நடவடிக்கையில் முழு அதிகாரம் பெற்றவர். அவர் போதிய வாய்ப்புகளை கொடுத்தார். ஆனால் அவர்கள் அதை பயன்படுத்திக்கொள்ளவில்லை. இப்போது சொல்லும் குறைகளை கூட நேரில் சென்று பதிவு செய்திருக்கலாமே? ஆகவே சபாநாயகர் எடுக்கும் நடவடிக்கைகளில் நீதிமன்ற தலையீடு குறைவு என்பதே என் கருத்து.
இவர்கள் 18 பேர் தகுதி நீக்கம் மறுபரிசீலனைக்கு உட்பட்டதா?
வாய்ப்பே இல்லை. 18 தொகுதிகளுக்கும் மறு தேர்தல் நடக்கும். சபாநாயகரே நினைத்தால் கூட முடியாது.
ஒரு வேளை ஜனாநாயக படுகொலை என்று திமுக எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்தால் என்ன நடக்கும்?
அந்த தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கும். 89 தொகுதிகளுக்கும் மறு தேர்தல் வரும் அவ்வளவுதான். அதை விட இப்படி ஒரு முடிவெடுத்தால் திமுகவில் பிளவு வரும். யாரும் மறு தேர்தலை விரும்ப மாட்டார்கள்.
2 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் சம்பந்தப்பட்ட அப்போதைய சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா இன்று மாறுபட்ட கருத்தை தெரிவிக்கிறாரே?
வக்கீல் என்ற முறையில் நான் அன்று சொன்ன கருத்தை இன்றும் சொல்கிறேன். அவர் அரசியல்வாதி என்ற முறையில் அன்று ஒரு முடிவு இன்று ஒரு முடிவை எடுக்கிறார்.
ஓபிஎஸ் அணியினர் 10 பேர் மீது ஏன் இதே போன்று நடவடிக்கை இல்லை?
அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை, யார் சபாநாயகரிடம் போய் புகார் கொடுத்தார்கள். இப்போதுகூட புகார் கொடுக்கலாம். அவர்களும் தகுதியிழப்பின் கீழ் தாராளமாக வருவார்கள். அவர்கள் மீது கொறடா தான் புகார் அளிக்க வேண்டும் என்பதல்ல யாராவது ஒரு எம்.எல்.ஏ கூட புகார் அளிக்கலாம்.
இவ்வாறு மூத்த வழக்கறிஞர் ஜோதி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக