சனி, 16 செப்டம்பர், 2017

லண்டன் சுரங்க ரயில் குண்டு வெடிப்பு: 18 வயது இளைஞர் கைது

tamilthehindu :லண்டன் சுரங்க ரயிலில் நடந்த குண்டுவெடிப்பில் சுமார் 24 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்களை வேட்டையாடிய போலீஸார் 18 வயது இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
ஆனாலும், ஒரு நபருக்கு மேல் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் அதிகாரிகள் ரகசிய புலனாய்வு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதால் விவரங்களை வெளியிட இடமில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இங்கிலிஷ் கால்வாய், டோவர் துறைமுகப் பகுதியிலிருந்து 18 வயது இளைஞர் ஒருவரை கெண்ட் போலீஸ் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் இவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
“இன்று காலை எங்கள் விசாரணை அடிப்படையில் முக்கியக் கைது ஒன்றை மேற்கொண்டுள்ளோம்” என்று துணையுதவி போலீஸ் ஆணையர் நீல் பாசு தெரிவித்தார். ஆனால் விசாரணை நீளமானது, ஏனெனில் பயங்கரவாத அச்சுறுத்தல் தீவிரமாக உள்ளது என்றார். அதாவது இன்னொரு தாக்குதலுக்கு வெள்ள நீரோட்டம் பார்ப்பதாக இந்தத் தாக்குதல் இருக்கலாம் என்பதால் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்னொரு அபாயகர பயங்கரவாதி தலைமறைவாக இருப்பதாக நீல் பாசு நம்புகிறார்.
சிசிடிவி காமரா மற்றும் ஐஇடி வெடிகுண்டின் மீதமுள்ள பகுதிகளை போலீஸார் தீவிர ஆய்வுக்குட்படுத்தி வருகின்றனர். ரயில் உள்ளேயிருந்த காமராவில் பதிவான படங்களில் ஐஇடி வெடிகுண்டு பக்கெட்டில் வைக்கப்பட்டிருந்ததாகக் காட்டுகிறது. பக்கெட்டில் பிளாஸ்டிக் பையில் ஐஇடி குண்டு வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.
தென் மேற்கு லண்டனில் பார்சன்ஸ் கிரீன் ரயில் நிலையத்தில் ரயிலில் குண்டு வெடித்தது. இந்த சுரங்க ரயில் ஒட்டுமொத்த அமைப்பும் பல நூறு காமராக்களால் கண்காணிக்கப்பட்டு வருபவையாகும்.
ஐஇடி வெடிகுண்டு பாதிதான் வெடித்துள்ளது, முழுதும் வெடித்திருந்தால் சேதம் மோசமாக இருந்திருக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது, இதன் துணை அமைப்பொன்று இந்த குண்டு வெடிப்பை ஏற்பாடு செய்ததாக அது தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக