புதன், 30 ஆகஸ்ட், 2017

ஸ்டாலின் to ஆளுநர் : எங்களிடம் இருக்கும் பந்தை வீச தயங்கமாட்டோம்.. நம்பிக்கை வாக்கெடுப்பு ..

Mathi   Tamil Oneindia    சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில் தமிழக நலன்களைப் பாதுகாக்க எங்களிடம் இருக்கும் பந்தை பயன்படுத்த எள்முனையளவும் தயங்கமாட்டோம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது என்று கருதுவதற்கு இடமில்லை", என்று ஆளுநர் தெரிவித்திருப்பது, அரசியல் சட்டப்பதவியில் அமர்ந்துகொண்டு, ஜனநாயக படுகொலைக்கு பச்சைக்கொடிக் காட்டுவதுபோல் அமைந்துவிட்டதை எண்ணிப் பெரும் அதிர்ச்சியடைகிறேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா ஆகியோரிடன் இப்படியொரு கருத்தினை, ஆளுநர் தெரிவித்து, "பந்து என் கோர்ட்டில் இல்லை", என்று கூறியிருப்பதும் ஆச்சரியமளிக்கிறது.

எடப்பாடி கே.பழனிசாமியை முதலமைச்சராக நியமிப்பதற்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்து, கடிதம் கொடுத்த சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலில் இந்த 19 சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள். அந்த ஆதரவுக் கடிதத்தின் அடிப்படையில்தான் ஆளுநர், எடப்பாடி கே.பழனிசாமியை முதல்வராக நியமித்தார். அந்த நேரத்தில் எனக்கும் முதலமைச்சராக ஆதரவு இருக்கிறது என்று கடிதம் கொடுத்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேரும் அன்று அதிமுகவில்தான் இருந்தார்கள். ஆனாலும் அன்றைக்கு ஏன் எடப்பாடி கே.பழனிசாமியை, "15 தினங்களுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு பெற வேண்டும்", என்று ஆளுநர் உத்தரவிட்டார்?

ஏனென்றால், அரசியல் சட்டப்படி முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவைக்குக் கூட்டுப் பொறுப்பு உண்டு. அப்படியுள்ள அமைச்சரவை எப்போதும் சட்டமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்ற அமைச்சரவையாக இருக்க வேண்டும். அந்த நம்பிக்கையானது, பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவின் அடிப்படையில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளவே, முதல்வர் நம்பிக்கை தீர்மானத்தையோ அல்லது எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தையோ கொண்டு வருகின்றன. முதலமைச்சராக நியமிக்கப்படுபவரை சட்டமன்றத்தில் நம்பிக்கை பெற உத்தரவிடுவதும் இந்த அடிப்படையில்தான் என்பதை அரசியல் சட்டப் பதவியில் அமர்ந்திருக்கும் ஆளுநர் அறிந்திருக்கமாட்டார் என்பதை நான் நம்புவதற்கு தயாராக இல்லை.

ஒரு அமைச்சரவையின் மீது நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்பதை முடிவுசெய்ய வேண்டிய இடம் ராஜ்பவன் அல்ல என்றும் சட்டமன்றத்தில் நடத்தப்படும் வாக்கெடுப்பு மூலமே முடிவுசெய்ய வேண்டும் என்றும் எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் கூறப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பையும் ஆளுநர் படித்திருக்க மாட்டார் என்று நான் கருதவில்லை.

ஆனாலும் மத்தியில் உள்ள பா.ஜ.க.வின் வற்புறுத்தலின் காரணமாகவும், தானே கைப்பிடித்து இணைத்து வைத்த, இந்த ஊழல் ஆட்சி நீடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவும், தமிழகத்தில் பா.ஜ.க.வின் கொல்லைப்புற அரசியல் பிரவேசத்திற்கு தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளவும் வழியேற்படுத்தி, தனது அரசியல் சட்டக் கடமைகளில் இருந்தும் தார்மீக பொறுப்பிலிருந்தும் ஆளுநர் தவறிச் செல்வது ஜனநாயகத்தின் மிகமோசமான இருண்ட பக்கங்களாகவே அமையும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
சட்டமன்ற கட்சிக்குள் நடக்கும் மோதல்களுக்கும், தான் நியமித்த முதல்வர் மீதான நம்பிக்கையைச் சட்டமன்ற உறுப்பினர்கள் திரும்பப் பெற்றதற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை ஆளுநர் இத்தனை நாட்களாக உணராமல் இருப்பது உள்நோக்கம் கொண்டது. 19 உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று துணை சபாநாயகரே நோட்டீஸ் கொடுத்த பிறகும், "அந்த 19 பேரும் அதிமுகவில்தான் இருக்கிறார்கள்", என்று ஆளுநர் கூறுவது வியப்பை அளிக்கிறது. அவர்கள் அதிமுகவில் இருக்கிறார்கள் என்றால் சபாநாயகர் ஏன் நோட்டீஸ் கொடுக்க வேண்டும்? எந்த எம்.எல்.ஏ.க்களின் ஆதரவின் அடிப்படையில் எடப்பாடி கே.பழனிசாமியை முதல்வராக நியமித்தாரோ, அதே சட்டமன்ற உறுப்பினர்கள் அந்த முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என்று கூறி ஆதரவு வாபஸ் கடிதம் கொடுத்த பிறகு, இந்த விவகாரம் முழுக்க முழுக்க ஆளுநரின் அதிகாரத்திற்குள் வருகிறது. ஆகவே, எடப்பாடி கே.பழனிசாமியை சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டியது ஆளுநரின் மிக முக்கியப் பொறுப்பு. ஆனால், இதை, "ஏதோ உள்கட்சி தகராறு", என்ற அளவில் பொறுப்புள்ள ஆளுநர் தெரிவித்து, வேடிக்கைப் பார்ப்பது, மைனாரிட்டியாக இருக்கும் முதலமைச்சரை மெஜாரிட்டியாக இருப்பவர் போல் சித்தரிக்கும் அரசியல் சட்ட விரோத முயற்சி.< இதன்மூலம், ஆளுநர் பதவியைப் பயன்படுத்தி, தமிழக நலன்களுக்கு புறம்பாக ஒரு, "மைனாரிட்டி பொம்மை" அரசை வழிநடத்திச் செல்ல, பா.ஜ.க. விரும்புவது அப்பட்டமாக தெரிகிறது. இதுபோன்ற அரசியல் சட்ட விரோத - ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் போன்ற மிகப்பெரிய ஜனநாயகவாதி ஒருவரின் அமைச்சரவையில், அமைச்சராக பொறுப்பேற்று இருந்த தமிழக பொறுப்பு ஆளுநர் உடன்படுவது மிகுந்த வேதனைக்குரியது. அதனால்தான், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிடவிருக்கிறோம். பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்ல வேண்டிய ஆளுநர் "பந்து என்னிடம் இல்லை", என்கிறார். அதில் உண்மையில்லையென்றாலும், "தி.மு.க.விடமும் பந்து இருக்கிறது", என்பதால்தான், 40 நாட்களுக்கு மேல் தாமதமாக குட்கா விவகாரத்தை கையில் எடுத்து, 21 தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிமைக்குழு மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
பந்தை பயன்படுத்துவோம்< ஆளுநரிடம் கடிதம் கொடுத்த 19 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, சபாநாயகர் தனபால், சட்டமன்ற உறுப்பினர்களின், "அரசியல் சட்டம் தந்துள்ள வாக்குரிமையை", தடுத்தோ அல்லது பறித்தோ, குறுக்கு வழியில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறும் கால அவகாசம் கிடைக்கும் வரை ஆளுநர் அவர்கள் பொறுத்திருப்பார் என்றால், ஜனநாயகத்தில் இதைவிட வேறு கேலிக்கூத்து எதுவும் இருக்க முடியாது. ஆகவே, தமிழக நலன்களைக் காப்பாற்றுவதற்கு, தன்னிடம் உள்ள பந்தை பயன்படுத்த திராவிட முன்னேற்றக் கழகம் எள் முனையளவும் தயங்காது, என்பதை தமிழக மக்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக