வியாழன், 17 ஆகஸ்ட், 2017

குத்தகை விவசாயிகளாகும் கார்ப்பரேட்டுகள் !

2016 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மோடி அரசு ”மாதிரி விவசாய நிலக் குத்தகைச் சட்டம்” ஒன்றை வெளியிட்டது. அனைத்து மாநிலங்களும் இந்த மாதிரிச்சட்டத்தின் அடிப்படையில் தமது குத்தகைச் சட்டங்களை திருத்த வேண்டுமென்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
  • விவசாயத்தில் உற்பத்தித் திறனை மேம்படுத்துவது;
  • சமத்துவத்தை கொண்டு வருவது;
  • விவசாயிகளுக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்புகளைப் பன்முகப்படுத்துவது;
  • கிராமப்புற பொருளாதாரத்தை விரைவாக மாற்றியமைப்பது.
ஆகியவையே இந்தப் புதிய சட்டத்தின் நோக்கங்கள் என்று பூசி மொழுகப்பட்ட மொழியில் சொல்கிறது நிதி ஆயோக். இந்தச் சட்டத்தினால் ஏற்படப் போகும் விளைவுகள் என்னென்ன, அரசின் உண்மையான நோக்கம் என்ன என்பதைப் பார்க்கலாம்.
பெரும்பாலும் சிறு, குறு விவசாயிகளும், நிலமற்ற விவசாயிகளும் நிறைந்த இந்திய விவசாயத்தை முற்றுமுழுதாகப் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்தியத் தரகு முதலாளித்துவ கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடியில் ஒப்படைத்து விட்டு, விவசாயிகள் குறித்த தனது பொறுப்புகள், கடமைகளிலிருந்து அரசு முழுமுற்றாக விலகிக்கொள்வதும், இதன் வாயிலாக விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளில் பெரும்பகுதியினரை விவசாயத்திலிருந்து வெளியேற்றுவதும் தான் அரசின் நோக்கம்.
இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு அரசு வகுத்திருக்கும் பல திட்டங்களில் ஒன்றுதான் மோடி அரசின் விவசாய நில குத்தகைச் சட்டம். இந்தப் புதிய குத்தகைச் சட்டத்தின்படி, ”குத்தகை விவசாயிகள்” யார் தெரியுமா? கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள். குத்தகைக்குத் தமது நிலத்தைக் கொடுக்கவிருப்பவர்கள் சிறு குறு விவசாயிகள்.
குத்தகை விவசாயி எனப்படுபவன் யார்?
பெரு நிலக்கிழார்கள், மடங்கள், ஆதீனங்கள் மற்றும் நகர்ப்புறத்தில் குடியேறிவிட்ட நிலவுடைமையாளர்கள் ஆகியோரது நிலங்களில் பாடுபட்டு, விளைச்சலில் கணிசமான பகுதியை நில உடைமையாளர்களுக்கு அளந்து விட்டு, வறுமையில் வாடுகின்ற விவசாயியைத்தான் குத்தகை விவசாயி என்று நாம் அறிந்திருக்கிறோம்.
இத்தகைய ஏழை குத்தகை விவசாயிகளைச் சுரண்டி வந்த பண்ணையார்களையும், மடங்களையும், கோயில் தர்மகர்த்தாக்களையும் எதிர்த்த விவசாயிகளின் போராட்டத்தின் விளைவாகத்தான் குத்தகை குறைப்பு, குத்தகைதாரர் பாதுகாப்பு உள்ளிட்ட பல சட்டங்கள் இயற்றப்பட்டன.
1960 -களிலும், 1970 -களிலும் அனைத்து மாநிலங்களும் விவசாய நிலத்தைக் குத்தகைக்கு விடுவது தொடர்பாகச் சட்டங்களை இயற்றின. அவை பல்வேறு ஐந்தாண்டு திட்டங்களின் பரிந்துரையின்படி திருத்தி அமைக்கப்பட்டன.
நில உச்ச வரம்பு சட்டங்கள் மூலமும் குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டங்கள் மூலமும் பெரிய நிலவுடைமையாளர்களின் உபரி நிலங்களை நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஏழை விவசாயிகளுக்கும் பகிர்ந்து கொடுப்பது என்ற பெயரில் இந்தச் சட்டங்கள் இயற்றப்பட்டன.
இந்த சீர்திருத்த சட்டங்கள் அனைத்தும் கண்துடைப்பு நடவடிக்கைகள்தான் என்ற போதிலும், இந்த கண்துடைப்பு நடவடிக்கைகளையும் கூட அரசும் ஆளும் வர்க்கமும் தானாகச் செய்து விடவில்லை. வெள்ளையன் ஆட்சிக்காலத்தில் தொடங்கி, பின்னர் தெலுங்கானா, நக்சல்பரி என்று தொடர்ச்சியாக எழுந்த விவசாயிகள் போராட்டம் எழுப்பிய ”உழுபவனுக்கே நிலம் சொந்தம்” என்ற முழக்கம்தான், இப்படிப்பட்ட சீர்திருத்தங்களை அறிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளும் வர்க்கத்தைத் தள்ளியது.
நிலச் சீர்திருத்த சட்டங்கள் இயற்றப்பட்டாலும், நடைமுறையில் பண்ணையார்களும், நிலக்கிழார்களும் சட்டங்களை ஏய்த்து, பினாமி பெயர்களில் நிலங்களைத் தக்க வைத்துக் கொண்டார்கள்; குத்தகைக்கு விடுவதையே சட்டத்துக்கு வெளியில் கொண்டு போய், வாய்வழி ஒப்பந்தங்களாக மாற்றிக் கொண்டார்கள்.
எனவே, ஆளும் வர்க்கத்தின் பல்வேறு வாக்குறுதிகளையும் மீறி இந்திய விவசாயம் ஏழை விவசாயிகளையும் கூலித் தொழிலாளர்களையும் கடுமையாகச் சுரண்டுவதாகவே நீடிக்கிறது. குத்தகைதாரர் சட்டங்களையும் மீறி ஏழை விவசாயிகளின் தேவையையும், நிலவுடைமையாளர்களின் ஆதிக்கத்தையும் ஒட்டி வாய்வழி குத்தகை முறை பெருமளவு நிலவுகிறது. இந்தியாவின் சுமார் 30% சாகுபடிப் பரப்புக்கு மேல் இத்தகைய வாய்வழிக் குத்தகையாளர்களாக ஏழை விவசாயிகள் இருக்கிறார்கள்.
2012 – 13 கணக்கெடுப்புபடி 5 ஏக்கருக்கும் குறைவான நிலத்தில் (சொந்த நிலம் அல்லது குத்தகை நிலம்) சாகுபடி செய்யும் குடும்பங்களின் எண்ணிக்கை சுமார் 7.8 கோடி. மொத்த நிலவுடைமைகளில் 69.4% -ஐக் கொண்டிருக்கும் இந்த குடும்பங்கள் மொத்த விவசாய உற்பத்தி மதிப்பில் 59%ஐ உற்பத்தி செய்கிறார்கள். ஆனால், இந்தக் குடும்பங்கள் விவசாயத்தில் ஈட்டும் வருமானம் அவர்களது நுகர்வு தேவையை விடக் குறைவாகவே உள்ளது. அதாவது, விவசாயத்தில் 100 ரூபாய் செலவழித்தால் ரூ 80 தான் வருமானமாகக் கிடைக்கிறது.
விவசாயிகள் சந்திக்கும் நெருக்கடிக்கு என்ன காரணம்?
விவசாயிகளின் இன்றைய கடும் நெருக்கடிக்குக் காரணம் விவசாயத்தை கார்ப்பரேட் இலாப வேட்டைக்கு இரையாக்கும் அரசின் விவசாயிகள் விரோத கொள்கைகளே ஆகும்.
  • பாசன வசதி பராமரிப்பைப் புறக்கணிக்கப்பது;
  • விதை, உரம், பூச்சிக் கொல்லி என்று உள்ளீட்டுப் பொருட்கள் வினியோகத்தில் அரசின் பங்களிப்பு விலக்கப்பட்டு, அனைத்தும் கார்ப்பரேட்மயமாக்கப்படுவது;
  • அரசு, விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகும் விலை நிர்ணயிக்க மறுப்பது, கொள்முதல் செய்ய மறுப்பது;
  • கல்வி, மருத்துவம், உணவு வினியோகம் என அனைத்திலும் விவசாயிகளின் செலவுகளை வணிகமயமாக்கி அதிகரித்திருப்பது;
  • விவசாயிகளைக் கடனில் மூழ்கடித்துத் தற்கொலைக்கும், அழிவுக்கும் தள்ளி விட்டிருப்பது

விழுப்புரம் மாவட்டம், வீ.சாத்தனூர் பகுதியில் தாழ்த்தப்பட்டோரிடமிருந்து அபகரிக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை மீட்க நடைபெற்ற போராட்டம்
மேற்கூறிய கொள்கைகள் மூலம் விவசாயம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. விவசாயம் செய்தால் நட்டம்தான் என்பது கல்லின் மேல் எழுத்தாக மாறி விட்ட சூழலில், விவசாயம் செய்யவும் முடியாமல், நிலத்தை விடவும் மனமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள்.
இந்த இக்கட்டான நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, விவசாயிகளைத் தங்களது காண்டிராக்ட் அடிமைகளாக மாற்றுவதற்கும், குத்தகை என்ற பெயரில் அவர்களுடைய நிலங்களை அபகரித்துக் கொள்வதற்கும் முயற்சிக்கின்றன கார்ப்பரேட் நிறுவனங்கள். இந்த நிலத்திருட்டு முயற்சியை, விவசாயிகளைக் காப்பாற்றும் முயற்சியாகக் காட்டுகிறது புதிய குத்தகைச் சட்டம்.
புதிய சட்டம் என்ன சொல்கிறது?
இப்போதைய விவசாயிகளின் நெருக்கடிக்குக் காரணம் விவசாய உற்பத்தித் திறன் குறைவாக இருப்பதே என்று சாதிக்கும் மோடி அரசு, விவசாயிகளை அதிலிருந்து விடுவித்து முன்னேற்றுவதற்காகக் கொண்டு வந்திருப்பதாகச் சொல்லிக் கொண்டு கார்ப்பரேட் ஆதிக்கத்தை இன்னும் புதிய பரிமாணங்களில் விரிவுபடுத்துகிறது.
  1. விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களைத் தமது சொற்ப நிலவுடைமைகளை கார்ப்பரேட்டுகளிடம் அல்லது பணக்கார சாகுபடியாளர்களிடம் ஒப்படைத்து விட்டு, வேறு வேலைகளுக்குப் போகும்படி ஆலோசனை சொல்கிறது மோடி அரசு.
  2. இன்னொரு புறம் பெரிய நிலவுடைமையாளர்களை நிலத்தைக் குத்தகைக்கு விட்டு விட்டு விவசாயத்துக்கு வெளியில் தொழில்முனைவில் ஈடும்படி வலியுறுத்துகிறது.
  3. ஒரு குத்தகைதாரர் குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்யும் நிலத்துக்கு உச்சவரம்பு எதுவும் விதிக்கப்படவில்லை.
  4. குத்தகைக்கு எடுப்பவர் யார் என்பதிலும் எந்த வரம்பும் இல்லை. எனவே, இந்தச் சட்டம் உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் குத்தகை சந்தையில் விவசாய நிலத்தைக் கைப்பற்றுவதற்கு வழிவகுப்பதாகவே இயற்றப்பட்டுள்ளது.

நவீன குத்தகை விவசாயிகளாக அவதாரமெடுத்துள்ள தரகு முதலாலிகள் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி மற்றும் சுனில் மித்தல்
இந்தச் சட்டத்தின்படி,
  1. நிலவுடைமையாளரும் குத்தகைதாரரும் பரஸ்பரம் குத்தகை ஷரத்துகளை முடிவு செய்து கொள்ளலாம். இதில் அரசு எந்த வகையிலும் தலையிடாது. ஒரு பணக்கார நிலவுடைமையாளரும் சிறு விவசாயியும் அல்லது ஒரு சிறு நிலவுடைமையாளரும் கார்ப்பரேட்டுகள் உள்ளிட்ட பெரிய சாகுபடியாளரும் அரசின் தலையீடோ, சட்டப்பாதுகாப்போ இல்லாமல் ஒப்பந்தம் போடும் போது, அது நிச்சயமாக வலியவர்களான கார்ப்பரேட்டுக்குச் சாதகமாகவே இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
  1. இந்த மாதிரிச் சட்டத்தின்படி குத்தகைக்கு எடுக்கும் நிலத்தில் பயிர்த் தொழிலோடு, தோட்டப் பயிர்கள், கால்நடை வளர்ப்பு  பால் உற்பத்தி, கோழி வளர்ப்பு, இறைச்சி விலங்கு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, விவசாயக் காடுகள், விளைபொருள் பதப்படுத்தல் மற்றும் தொடர்புடைய பிற நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படுகின்றன. எனவே, சிறிது காலம் குத்தகைக்கு விட்டு வருமானம் பார்க்கலாம் என்று நிலத்தை விட்டுக் கொடுக்கும் சிறு விவசாயி, குத்தகை காலம் முடிந்த பிறகு நிலத்தை திரும்ப பெற்றாலும், அது பயிரிடுவதற்கு இலாயக்கில்லாததாக மாறியிருக்கும்.
  1. ஏற்றுக் கொள்ளப்பட்ட குத்தகை காலத்துக்குப் பிறகு நிலம் தானாகவே உரிமையாளருக்கு திரும்பிப் போவதை உறுதி செய்வதாகச் சட்டம் சொன்னாலும் பல நூறு ஏக்கர் நிலத்தை நூறு விவசாயிகளிடம் குத்தகைக்கு எடுத்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனம், அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பத்து பேருடைய குத்த கையைப் புதுப்பித்துக் கொண்டாலே, மற்ற தொண்ணூறு பேரை பணிய வைத்து விட முடியும். குத்தகை ஒப்பந்தத்தை எந்த வெளி ஒப்புதலும் இல்லாமல் இருதரப்பும் பரஸ்பர சம்மதத்தின் பேரில் நீட்டித்துக் கொள்ளலாம் என்பது கார்ப்பரேட் முதலாளிகளின் அடாவடித்தனத்துக்கு வழங்கப்பட்டுள்ள லைசன்சு.
  2. குத்தகை காலம் முடிந்த பிறகு குத்தகைதாரர் (அதாவது கார்ப்பரேட் நிறுவனம்) நிலமேம்பாட்டுக்கு முதலீடு செய்த மதிப்பில் எஞ்சியதை திரும்பப் பெறும் உரிமையை (கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு) இந்த சட்டம் வழங்குகிறது. இதன் மூலம் நிலம் திரும்ப வேண்டுமென்றால், மேம்பாட்டுக்கு நான் செலவு செய்த தொகையை எடுத்து வை என்று கார்ப்பரேட் நிறுவனம் விவசாயியை மிரட்டும்.
  3. நிலத்தின் மண்வளம் பாதிப்படைந்தால் குத்தகையை ரத்து செய்யலாம் என்ற ஷரத்து இந்தச் சட்டத்தில் இருந்தாலும், மண் வளம் பாதிப்படைந்ததா இல்லையா என்பதை யார் தீர்மானிப்பார்கள் என்று சொல்லவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக ஒரு விவசாயி இதனை நிலைநாட்டவும் முடியாது.
ஏற்கனவே நுழைந்திருக்கும் கார்ப்பரேட்டுகள்
ஏற்கனவே பல்வேறு மாநில அரசுகள் கார்ப்பரேட் விவசாயத்துக்கு வழிவகுக்கும் சட்டத் திருத்தங்களைச் செய்திருக்கின்றன. அனைத்து பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களும், ஒடிசா மாநிலமும், காங்கிரசின் கர்நாடகா அரசும் இவ்வாறு சட்டங்களைத் திருத்தியிருக்கின்றன.

பஞ்சாபில் பெப்சி நிறுவனத்திற்காக உருளைக்கிழங்கு ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளோடு அந்நிறுவன அதிகாரி.
மத்தியப் பிரதேசமும், உத்தரப் பிரதேசமும், ஜார்கண்டும் விவசாய நிலத்தை விவசாயம் அல்லாத பயன்பாட்டுக்கு குத்தகைக்கு விடுவதை அனுமதிக்கும்படிச் சட்டத்தைத் திருத்தியிருக்கின்றன. ஒடிசா, பீகார், தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களும் அத்தகைய திருத்தங்களைச் செய்து வருகின்றன. இமாச்சல் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட இன்னும் பல மாநிலங்களில் ஏழை தலித், நலிந்த குடும்பங்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்களைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
  • ஆந்திர அரசு 4 இலட்சம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளது. இன்னும் 7 இலட்சம் ஏக்கர் நிலத்தைத் தனது நில வங்கிக்கு கையகப்படுத்தத்  திட்டமிட்டுள்ளது.
  • 2.5 லட்சம் ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியுள்ள தெலுங்கானா அரசு இன்னும் பல லட்சம் ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றத் திட்டமிட்டுள்ளது.
  • கர்நாடகாவில் அரசு நிலத்தில் பயிரிடும் 43 லட்சம் உழவர்கள் வெளியேற்றப்படும் வகையில் கொள்கை மாற்றியமைக்கப்படுகிறது.
விவசாய மற்றும் உணவுத் தொழிலில் பெரும் முதலாளிகளின் முதலீடு மற்றும் பங்கேற்புக்கு ஏற்ப ஒப்பந்த விவசாயத்தின் விரிவாக்கம் மற்றும் சிறு விவசாயிகளின் வெளியேற்றம் நடந்தேறும். மேலும், ஒப்பந்த விவசாயத்தின் விளைவாக ஓரினப்பயிர், மண் வளம் இழப்பு, பாசன வசதிகள் சூறையாடப்படுதல் மற்றும் சுற்றுச் சூழல் பாதிப்பு ஆகியவைகள் நடந்தேறும்.
  • குஜராத், ஒப்பந்த விவசாயத்திற்கு எனச் சிறப்பு சட்டத்தைக் கொண்டுள்ளது. இங்கு 2006 -ம் ஆண்டு இறுதியில் 40 லட்சம் ஏக்கர் ஒப்பந்த விவசாயத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.
  • பஞ்சாபில் 2007 – 08 -ம் ஆண்டில் சுமார் 2 லட்சம் ஏக்கர் ஒப்பந்த விவசாயத்தில் உள்ளது. இது 2009 – 10 -ல் 2.75 லட்சம் ஏக்கராக விரிவுபடுத்த திட்டமிடப்பட்டது. 1.92 லட்சம் ஏக்கரில் மட்டுமே விரிவுபடுத்தப்பட்டது.
இந்தப் பின்னணியில் ஒப்பந்த விவசாயத்தை விரிவுபடுத்த பஞ்சாப் அரசு ஒப்பந்த விவசாயம் 2013 சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இந்த இரண்டு மாநிலங்களில் அரசே முன்னின்று ஒப்பந்த விவசாயத்தை நடத்திக் கொடுக்கிறது.
  • பருத்தி விவசாயத்தில் 50% உற்பத்தி ஒப்பந்த விவசாயத்தின் அடிப்படையிலே நடக்கிறது.
  • கர்நாடகா மாநிலத்தில் ஒட்டு மொத்த உருளைக்கிழங்கு விவசாயத்தில் 15 சதவீதத்தை பெப்சி மற்றும் கோக்கோ கோலா நிறுவனங்கள், ஒப்பந்த விவசாயத்தின் மூலம் கட்டுப்படுத்துகின்றன.
மேற்குறிப்பிட்ட வழிகளில் சட்டரீதியிலோ அல்லது புறம்பாகவோ முதலாளிகள், பல்வேறு தினுசுகளாக நிலம் கைப்பற்றும் வேலையை செய்கின்றனர்.
  • டாடா நிறுவனம் சுமார் 60,000 ஏக்கர் நிலத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
  • குஜராத் மற்றும் பஞ்சாப்பில் முகேஷ் அம்பானி குழுமம் 7500, அனில் அம்பானி குழுமம் 3500 ஏக்கரும் கொண்டுள்ளது.
  • ஏர்டெல் நிறுவனம் பஞ்சாப் மாநில அரசிடமிருந்து 300 ஏக்கரும், சிறு விவசாயிகளிடம் இருந்து 4,000 ஏக்கர் நிலத்தையும் குத்தகை எடுத்துள்ளது. குத்தகைக்கு விட்ட விவசாயிகள் அவர்கள் நிலத்தில் (ரூ 80) தினக்கூலிக்கு வேலை செய்கிறார்கள்.
  • கிட்டத்தட்ட இதே பாணியில் சட்லஜ் அக்ரிகல்சர், நிஜேர் அக்ரோ, விமல் குழுமம் போன்ற நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து நூற்றுகணக்கான ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துப் பெரும் பண்ணைகளாக மாற்றி வருகிறது.
  • அயன் எக்சேஞ்ஜ் இந்தியா நிறுவனம் பங்குதாரர்களின் பெயரில் தமிழகத்தில் 650 ஏக்கரும், மகாராட்டிரத்தில் 750 ஏக்கரும், கோவாவில் 150 ஏக்கரும் வாங்கியுள்ளது.
  • தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் இமாமி (emami) நிறுவனம் 100 -க்கும் மேற்பட்ட பினாமி பெயர்களில் சுமார் 7,000 ஏக்கர் வாங்கியுள்ளது. இதில் 2,000 ஏக்கர் காட்டாமணக்கு மற்றும் பருப்பு வகை பயிர்கள் பயிரிட்டுள்ளது.
  •  பி.ஏ.சி.எல் (PACL) என்ற இன்சூரன்ஸ் நிறுவனம் 1 இலட்சம் ஏக்கர் நிலம் (பாகிஸ்தான் எல்லையை ஒட்டி மட்டும் 400 சதுர கி.மீ  பரப்பளவு நிலத்தை கொண்டுள்ளது) வரை கையகப்படுத்தியுள்ளது.
பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலத்தின் போது ஆங்கிலேய சாகுபடியாளர்கள் இந்திய விவசாயிகளை கட்டாயப்படுத்தியும் கடனுக்கு அடிமையாக்கியும் ஐரோப்பிய சந்தையின் தேவைக்கேற்ப அவுரி சாகுபடி செய்ய வற்புறுத்தினார்கள். அதை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்தது அவுரி விவசாயிகள் போராட்டம்.
இன்று விளைபொருளுக்கு விலை கிடைக்காமல், கடனுக்கு அடிமையாகித் தவித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளிடமிருந்து, அவர்களுடைய கையறு நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, குத்தகை என்ற பெயரில் நிலத்தைப் பறித்துக் கொள்வதற்கு இந்தப் புதிய சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது மோடி அரசு.
-சூரியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக