புதன், 23 ஆகஸ்ட், 2017

தொழிற்சாலை கழிவு: நிறம் மாறிய நாய்கள்!

தொழிற்சாலை கழிவு: நிறம் மாறிய நாய்கள்!மும்பையில் ஆற்றில் வெளியேற்றப்பட்ட தொழிற்சாலை கழிவுகள் காரணமாக நாய்கள் நிறமாறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ளது காசடி ஆறு. இந்த ஆறு செல்லும் பாதையில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் உள்ளன. இந்தத் தொழிற்சாலைகள் தங்களின் கழிவுகளை ஆற்றிலேயே விடுவதால் ஆறு மாசுபடுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். இந்த நிலையில், இந்த ஆற்றில் நனைந்த நாய்கள் நீல நிறமாக மாறியுள்ளதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்திலும் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் மகாராஷ்டிரா மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் புகார் அளித்தனர். இதுதொடர்பான முதற்கட்ட விசாரணையில், டூகோல் ஆர்கானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் இருந்து வெளியாகும் ரசாயன கழிவுப் பொருள்கள் ஆற்றில் கலப்பதால்தான் நாய்களின் நிறம் மாறியுள்ளது தெரியவந்தது. மொத்தம் 11 நாய்களின் நிறம் மாறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு வாரியம் முறைப்படி நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அந்நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், நிறுவனத்தை இழுத்து மூடும்படி வாரியம் உத்தரவிட்டது. மேலும் நிறுவனத்துக்கான தண்ணீர் சப்ளையை நிறுத்தும்படி எம்.ஐ.டி.சி-க்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
என்.ஜி.ஓ. ஒன்றின் தரவுபடி, காசடி ஆறு அமைந்திருக்கும் தலோஜா தொழிற்பேட்டையில் ரசாயனம், மருத்துவ, உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை என 977 தொழிற்சாலைகள் செயல்படுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக