வியாழன், 24 ஆகஸ்ட், 2017

சசிகலா, இளவரசி, சுதாகரன் சீராய்வு மனு தள்ளுபடி.. உச்சநீதிமன்றம்


சசிகலாவின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது!
சொத்துக்குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை இன்று (ஆகஸ்ட் 23) உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் பெங்களூரூ சிறப்பு விசாரணை நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழங்கிய 4 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் என்ற தீர்ப்பை கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இவர்கள் தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியான தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலமானதால் அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், சசிகலா, இளவரசி, சுதகாரன் 3 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.

முன்னதாக இந்த வழக்கில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், மற்றும் அமிதவா ராய் ஆகிய இருவரும் தீர்ப்பளித்திருந்தனர். இவர்களில் நீதிபதி பினாகி சந்திரகோஷ் ஓய்வு பெற்றுவிட்டதால், இந்த வழக்கை தற்போது நீதிபதிகள் ஃபாலி ரோஹிங்டன் நாரிமன் மற்றும் அமிதவா ராய் விசாரிப்பதாக இருந்தது. ஆனால், இந்த வழக்கை நீதிபதி ஃபாலி ரோஹிண்டன் நாரிமன் விசாரிக்க கூடாது என்று சசிகலா சார்பில் மனுதாக்கல் செய்திருந்ததால், அவர் இந்த வழக்கிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார். எனவே, நீதிபதிகள் அமிதவா ராய், பாப்டே ஆகிய இருவரும் இந்த சீராய்வு மனுவை விசாரிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, நேற்று (ஆகஸ்ட் 22) இந்த சீராய்வு மனு வழக்கை நீதிபதிகள் அமிதவராய், பாப்டே விசாரித்தனர். சசிகலா தரப்பில் வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜரானார். அப்போது அவர், இந்த வழக்கில் இன்னும் பல வாதங்களை முன்வைக்க வேண்டியிருப்பதால், நீதிபதிகள் தனி அறையில் இல்லாமல், நீதிமன்றத்திலேயே இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அப்படி இல்லையென்றால், தற்போது சமர்ப்பிக்கப்படும் எழுத்துபூர்வமான வாதங்களைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் முறையிட்டார். இது தொடர்பான உத்தரவு இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆரம்பத்திலிருந்தே, இந்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சசிகலாவுக்கு நம்பிக்கை அளித்து வந்தவர் சசிகலாவின் சகோதரர் திவாகரன்தான். சீராய்வு மனுவில் உச்ச நீதிமன்றம் சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கு தண்டனையை ரத்து செய்யும் என்று சசிகலாவுக்கு அவர் மிகுந்த நம்பிக்கையை அளித்துவந்தார். ஆனால், தினகரனோ டெல்லி வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்திய பிறகு, இந்த சீராய்வு மனுவில் தண்டனை ரத்து செய்வதற்கான வாய்ப்பு இல்லை என்று நம்பிக்கை இல்லாமல் இருந்தார்.
இந்த நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரின் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 23) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் இந்த தண்டனையிலிருந்து விடுபடுவதற்கான கடைசி நம்பிக்கையும் தகர்ந்துள்ளது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக