செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

அல்வா வாசு ... 'அல்வா கொடுப்பதில் ' திரைத்துறை மட்டும் விதிவிலக்கா என்ன ?

davamudhalvan.davan? திரையில் மின்னும் மாபெரும் நடிகன் -நடிகை , இயக்குனர் போன்றவர்களின் பின்னால் இருக்கும் எளிய மனிதர்களின் உழைப்பை அதன் அருமை உணர்ந்தோரே அறியமுடியும். முகம் அறியாத நூற்றுகணக்கான மனிதர்களின் உழைப்பின் ஒளியால்தான் நட்சத்திரங்களே திரையில் மின்னுகின்றன . தமிழ் திரை உலகில் நகைச்சுவைக்கு என்று பலர் இருப்பினும் கலைவாணர் தொடங்கி, நாகேஷ், சுருளிராஜன் , கவுண்டமணி , ஆகியோருக்கு பிறகு என் மனதில் நிற்கும் கலைஞன் வடிவேலு என்பேன். கவுண்டமணியின் பெரும்பாலான காட்சிகளில் செந்திலை ' ஓட்டி' ' உதைத்து' இருந்தாலும் அந்த வசனங்களோடு விமர்சனங்களாக சமூகத்தின் எல்லா தரப்பினரையும் ஓட்டியிருப்பார் .
நாகேஷ் , சுருளிராஜன் போன்றோர் தங்கள் தனித்த நபராகவே நின்று நடித்திருப்பார்கள் . நம் சம காலத்து நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு 'அண்ணனின் விழுதுகளாக', உண்மையில் சொல்லப்போனால் கிளை படரும் ஆலமரத்தை தாங்கும் விழுதுகளைப் போல அவருக்கு பக்க பலமாக வடிவேலுவின் நகைச்சுவைக்கு உயிர் கொடுத்தவர்களில் அல்வாவாசு மிகவும் முக்கியமானவர். வெங்கல்ராவ் ,போண்டாமணி , பெஞ்சமின் , மகாநதி சங்கர் , கோவை செந்தில் ,கர்ண ராதா , சிசர்மனோகர் என அவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருப்பினும் வாசுவின் வின் வெள்ளந்தியான பாவமும் , அண்ணனுக்கு கட்டுப்பட்ட தம்பியாக , தலைவனுக்கு அடிபணியும் தொண்டனாக , வீரசவடால் விட்டு அண்ணனையே 'மாட்டிவிடும் ' போட்டுகொடுக்கும் அடியாளாக அவரின் நடிப்பு அபாரம் . வடிவேலு என்ற கலைஞன் உச்சம் தொட இந்த எளிய மனிதனின் பங்களிப்பை யாரும் மறக்க முயாது . ஒரு முறை தி .நகரிலிருந்து என நினைவு பேருந்தில் என் அருகில் நின்றுகொண்டிருந்தார். அன்று அவரின் நகைச்சுவைக் காட்சிகள் எல்லாம் மறைந்து அவர் பொருளாதார நிலை பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன் . இப்போதும்கூட யோசிக்கிறேன். உழைப்பை வாங்கிவிட்டு 'அல்வா கொடுப்பதில் ' திரைத்துறை மட்டும் விதிவிலக்கா என்ன ? சந்தை மதிப்பிலிருந்து கடந்து மானுட மதிப்பில் கலைஞர்களை கொண்டாடும் நாள் எந்நாளோ ? அல்வா வாசு என்கிற கலைஞனுக்கு என் ஆழ்ந்த இரங்கல் !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக