செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

மிதிபட்டும் அடிபட்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது அவசியமா தலித்துகளே?#நல்லூர்கலவரம்

thetimestamil : கல்பாக்கம் அடுத்த நல்லூர் காலனி பகுதியில் உள்ள தலித்துகள், பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி சாலையோரத்தில் விநாயகர் சிலை வைத்து வெள்ளி இரவு  பூஜை செய்திருக்கிறார்கள். அப்போது வன்னியர் இனத்தை சேர்ந்த இளைஞர்கள் அவ்வழியாக பைக்கில் வேகமாக வந்ததாகவும், குழந்தைகள் விளையாடிக்கொண்டிருப்பதால் மெதுவாக செல்லும்படி அங்கிருந்த தலித்துகள்  கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த வன்னிய இளைஞர்கள் தகாத வார்த்தைகளால் பேச, தொடர்ந்து இரு பிரிவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பைக்கில் வந்தவர்கள் போன் செய்ததையடுத்து, 200க்கும் மேற்பட்டவர்கள் கத்தி, இரும்பு ராடு மற்றும் கட்டைகளுடன் நல்லூர் காலனி பகுதிக்குள் நுழைந்திருக்கிறார்கள்.
அங்கிருந்த மின்சார டிரான்ஸ்பார்மரை நிறுத்திவிட்டு, பல வீடுகளில் இருந்த டிவி, பிரிட்ஜ், வாஷிங் மிஷின் மற்றும் துணிமணிகளை சூறையாடியுள்ளனர். குடிசை வீடுகள் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளனர். வீடுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள், ஆட்டோக்களை அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் பயந்துபோன பெண்கள் ஓட்டம் பிடித்தனர்.
அவர்களையும் விரட்டி, விரட்டி தாக்கியுள்ளனர். இந்த மோதல் காரணமாக 5 பெண்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
விநாயகர் சிலைகளை வைத்து உருவாக்கப்பட்ட இந்த சாதிக்கலவரம், பத்திரிக்கைகளில் வெறும் “விநாயகர் சதுர்த்தி கலவரமாக” மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
விநாயகர் சதுர்த்தி பற்றி சில மாதங்களுக்கு முன் நானும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் தலித் செயற்பாட்டாளருமான Kiruba Munusamy கிருபா முனுசாமியும்  பேசிக்கொண்டிருந்தோம். நீலக்கொடிகள் பறந்துகொண்டிருந்த தலித்துகளின் பகுதிகளில் இப்போது காவிக்கொடிகள் பறக்க ஆரம்பித்திருப்பதை சிறிது அச்சத்துடன் அப்போது அவர் பகிர்ந்துகொண்டார். அதை நானும் உணர்ந்திருந்தேன்.
சமீபமாக,  விநாயகரை கரைப்பதற்காகாக பிரமாண்ட சிலைகளுடன் மெரீனாவுக்கு வருவதில் கடற்கரையோர மக்கள் அதிகம் இருப்பதைக் காண முடிகிறது. குறிப்பாக சேரிப்பகுதி இளைஞர்களின் பங்கு பெருமளவில் இருப்பதை பார்த்து நான் மிகவும் அயர்ச்சியுடன் கடந்திருக்கிறேன். “இந்துவாக சாக மாட்டேன்” என்று சொன்ன அண்ணலின் வாரிசுகள் ஏன் இப்படித் தடுமாறி தவறான பாதையில் செல்கிறார்கள் என்று.
திலகர் என்கிற பார்ப்பனர் “இந்து மதம்” என்கிற ஒன்றை, ஒற்றை சக்தியாக கட்டமைப்பதற்காக உருவாக்கிய விநாயகர் சதுர்த்திக்கும் தமிழ்நாட்டிற்குமே என்ன சம்மந்தம் என்று தெரியவில்லை? ஏழாம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் விநாயகர் என்கிற ஒருவரைப்பற்றிய குறிப்புகளே இல்லையே.
“தமிழர்களுக்கு விநாயகருக்கும்” என்ற கேள்விக்கே விடை கிடைக்காதபோது, “இந்துக்களாக பிறந்தாலும் மதத்தாலும், பிற சாதிக்களாலும் சமமாக ஏற்றுக்கொள்ளப்படாத தலித்துகளுக்கும் விநாயகருக்கும் எங்கிருந்து தொடர்பு வந்தது ? (விநாயகர் புத்தரின் குறியீடு என்றாலும், நாம் இப்போது புத்த பூர்ணிமா கொண்டாடவில்லையே. விநாயகர் சதுர்த்தியாகத்தானே விழா எடுக்கிறோம்).
“ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்களைத்திரட்ட” என்ற காரணத்துடன் தொடங்கப்பட்ட விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள், தற்போது பிற மதத்தினரை கலவரப்படுத்தும் ஒரு விழாவாக அல்லவா எஞ்சி நிற்கிறது. குறிப்பாக சேரிப்பகுதிகளுக்குள் வரத்தயங்கும் இந்துக்கடவுள்கள், எந்தவித பாரபட்சமுமின்றி இஸ்லாமியத் தெருவிற்குள் நுழையும் இந்த நாட்களில் இதுபோன்ற பண்டிகையை வேறெப்படிப் பார்ப்பது என்று தெரியவில்லை.
ஒவ்வொரு முறை விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்வும் அரங்கேறும்போதும், அந்த சிலைகளுடன் உடன் செல்பவர்களின் உடல் மொழியில் அப்படியொரு அசாத்தியமான வெறியைப்பார்க்கமுடிகிறது. அந்த வாகனங்கள் நகரும்போது ஏதேச்சையாக அதனருகில் நிற்க நேரிடுபவர்களுக்கு அந்த வெறியும், கூச்சலும் புரியும்.
இரட்டை அர்த்த வசனங்களும், பெருங்குரலுடன் ஆபாச வசவுகளும், எறியப்படுவதோடு, பூக்களும் பொருட்களும் நம் தலையில் வீசப்படுவதையும் தடுக்க இயலாத அமைதியான சாட்சியாக மட்டுமே அதை நாம் பதிவு செய்ய முடியும். கடந்த சில ஆண்டுகளாக வெறுமனே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடிய காவி அமைப்புகள், தற்போது அதை இந்து மக்கள் எழுச்சி விழாவாக தமிழ்நாட்டில் அறைகூவல் விடுக்கிறார்கள்.
இந்து மத ரீதியாகவோ அல்லது இந்து மதத்தின் முக்கிய கூறுகளான சாதி ரீதியாக பார்த்தாலும் கூட தலித்துகளுக்கும் விநாயகர் சதுர்த்திக்கும் எள்ளளவும் சம்மந்தம் இல்லாதபோது, எதற்காக இந்த கொண்டாட்டங்களில் அவர்கள் பங்கெடுக்கிறார்கள்? எதற்காக காவிக்கொடிகளை தங்கள் உடலில் சுமக்கிறார்கள் ? எதற்காக அந்த சிலையை கரைக்க செல்கிறார்கள் ? என்று எப்போதுமே குழப்பமாக இருந்திருக்கிறது.
சமீபத்தில் பவுத்த சன்மார்க்கத்தை தழுவியுள்ள டாக்டர் சத்வாவோடு Satva T இதுபற்றி பேசிக்கொண்டிருக்கையில் அவர் கூறிய சில கருத்துக்கள் இதற்கு விடையளிப்பது போல் தோன்றியது.
“வெகுசன மக்களால் பண்பாட்டு கொண்டாடங்கள் இல்லாமல் இருக்க முடியாது. இந்து மதத்திற்கு மாற்றாக நாம் வேறு கலாச்சார பண்பாடை நாம் வழங்க வேண்டும். அதை வழங்காமல் நாத்திகம் – முற்போக்கு என்று மட்டும் பேசினால் அந்த வளையத்திற்குள் நம்மை போல extreme view கொண்டோர் மட்டுமே வருவார்கள். மற்றவர்கள் இந்துவாகவே இருந்து கொண்டு தொடர்ந்து சாதி இந்துகள்ளிடம் அடிவாங்குவார்கள். மாற்று கொண்டாட்டங்களை, கலாச்சார நிகழ்வுகளை வழங்க வேண்டும்.இதை தலித்  பிரிவில் உள்ள அறிவுஜீவிகள் ஏற்றுக்கொள்ளவேண்டும். பின் அதனை சாதாரண மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். நியாயமாக சொன்னால் தலித் அறிவுஜீவிகள் இந்த விடயத்தில் சொந்தமாக சிந்திப்பதை நிறுத்தி விட்டு டாக்டர். அம்பேட்கரை முதலில் படித்து புரிந்து கொள்ள முயல வேண்டும்”
இதுதான் டாக்டர்.சத்வா கூறியது. பண்பாட்டுத் தளத்தில் கொண்டாட்டங்கள் எத்தனைத்தேவை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதன் ஒரு பகுதியாகவே தீவிர வலதுசாரிகளால் கட்டமைக்கப்பட்ட “இந்துத்துவ பண்டிகையான” விநாயகர் சதுர்த்தியை நோக்கி தலித்துகள் செல்கிறார்கள் என்பதையும்.
ஆனால், தலித்துகளை சாதி ரீதியாக அடிமைப்படுத்துவதற்கான அத்தனை கூறுகளையும் வர்ணாசிரமங்கள் மூலம் கட்டமைத்து வைத்த,வைத்திருக்கும், அப்படியே வைத்திருக்க விரும்பும் தீவிர வலதுசாரிகள், இது போன்ற “விநாயகர் சதுர்த்தி” ஊர்வலங்கள் மூலமாக, மிகவும் தந்திரமாக சேரிகளிலுள் தங்கள் வலதுசாரித்தனத்தை புகுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் மிகவும் முரணான ஒன்று.
ஆனால்,சேரிக்குள் புகும் வலதுசாரி காவி இயக்கங்களால் தலித் மக்களுக்கு ஏதேனும் லாபம் உண்டா என்றால் எதுவுமில்லை என்பதே என்னுடைய திட்டவட்டமான பதில். இல்லை. நாங்கள் சேரிகளுக்கு பாதுகாவலர்கள் என்று இந்த காவிகள் கூறுவார்களேயானால், நல்லூரில் வன்னியர்களின் தாக்குதலுக்கு தலித்துகள் ஆளானபோது இந்தக்காவிகள் எங்கிருந்தார்கள் ? இதற்கு அவர்களிடம் என்ன பதில் இருக்கிறது ?
அவர்களிடம் இதற்கு எந்தப்பதிலும் இருக்காது. கிடையவும்  கிடையாது. ஏனென்றால் இதே வலதுசாரிகள் வன்னியத்தெருவுக்குள்ளோ, அல்லது தேவர்களின் தெருவுக்குள்ளோ சாதி வெறியைத்தூண்டிவிடும்படியான வேலைகளையும், அங்குள்ள இளைஞர்களை சாதி மத ரீதியான வெறியர்களாக மாற்றுவதற்கான வேலைகளிலும் ஈடுபட்டிருப்பார்கள். தார்மீக அறமற்றவர்களுக்கு இதுபோன்ற பணிகள் மிக எளிதாக ஈடுபடமுடியும்.
இந்து மதத்தின் அடிபப்டையான சாதிக்கட்டமைப்பை, அந்த சாதியினால், “மதக்கொண்டாட்டங்களில்” ஈடுபடும் தலித்துகள் மிதிவாங்குவதைத் தடுக்க அல்லது அகற்ற இந்து வலதுசாரி அமைப்புகள் என்ன மாதிரியான முன்னெடுப்புகளை எடுத்திருக்கிறார்கள் என்றால் அதுவும் பதிலேயில்லாத கேள்விதான்.
முற்போக்கு தத்துவங்களை, கடவுள் மறுப்புக்கொள்கைகளை தலித்துகளிடம் கொண்டு செல்வதற்குமுன் பண்பாட்டுத்தளத்தில் அவர்களுக்கான மாற்றுக்கொண்டாட்ட வழிமுறைகள் என்ன என்பதை தலித்திய அறிஞர்கள் கண்டறியவேண்டும். சாதீயக்கட்டமைப்புகளில் இருந்து வெளிவராத இந்து மதம் என்றைக்குமே தலித்துகளுக்கு பாதுகாப்பற்ற ஒன்றுதான், அவர்களைக் கைவிடும் ஒன்றுதான் என்பதையும் புரிய வைக்கவேண்டும். தொடர்ந்த உரையாடல்கள் மூலமே தலித் இளைஞர்களை இந்த வலதுசாரித் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்க  இயலும்.
இறுதியாக அண்ணலின் “நான் ஓர் இந்துவாக சாகமாட்டேன்” என்ற புத்தகத்தில் இருந்து சில வார்த்தைகளை மட்டும் மேற்கோளிட்டு இந்த கட்டுரையை முடிக்க விரும்புகிறேன்.
“நாம் அனுபவித்த இயலாமைகள், நாம் பொறுத்துக் கொள்ள வேண்டியிருந்த அவ மானங்கள் அனைத்துமே நாம் இந்து மதத் தின் உறுப்பினர்களாக இருந்ததால்தான்.
இந்து மதத்துடனான உங்கள் தொடர்பை துண்டித்துவிட்டு வேறு ஏதேனும் மதத்தைத் தழுவுங்கள் என்று நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். ஆனால் அப்படியான புதிய நம்பிக்கையைத் தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருங்கள். நம்மை சரி சமமாக நடத்துவதும், நமக்கு சமமான நிலையும், வாய்ப்புகளும் வழங்குவது எவ்விதத் தடையுமின்றி அதில் உறுதிப்படுத்தப் பட்டுள்ளதா என்பதையும் கவனியுங்கள்.
கெடுவாய்ப்பாக, நான் ஓரு தீண்டத்தகாத இந்துவாகப் பிறந்து விட்டேன். அதைத் தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது. ஆனால், அருவறுக்கத்தக்க இழிவான நிலையில் வாழ்வதை என்னால் தடுத்துக் கொள்ள முடியும். எனவே நான் உறுதியாகக் கூறுகிறேன்: நான் ஒர் இந்துவாக சாகமாட்டேன்.”
*கட்டுரையாளர் பொசல்: தலித் செயற்பாட்டாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக