ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

சித்தராமையாவுக்கு ஸ்டாலின் : கர்நாடக சமத்துவ மாநாட்டு தீர்மானங்கள் சில திமுகவால் ஏற்கனவே நிறைவேற்றபட்டவை


பெங்களூரு பிரகடனம் வழங்கிய சில பரிந்துரைகளை ஏற்கனவே தமிழகத்தில் தி.மு.க. நிறைவேற்றி இருக்கிறது என்று கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையாவுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை, தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், கர்நாடக முதல்–மந்திரி சித்தராமையாவுக்கு நேற்று கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.
 அதில் கூறப்பட்டுள்ளதாவது:–31–7–2017 தேதியிட்ட தங்களுடைய கடிதம் கிடைக்கப்பெற்றது. ‘சமத்துவத்திற்கான தேடல்’ என்ற உன்னத நோக்கத்தோடு வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டை நடத்தியமைக்காக என்னுடைய வாழ்த்துகளை பகிர்ந்து கொள்கிறேன். கடந்த ஜூலை மாதம் 21 மற்றும் 23–ந் தேதிகளில் நடைபெற்ற அம்பேத்கர் சர்வதேச மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பெங்களூரு பிரகடனத்தை முழுவதுமாக படித்துப் பார்த்தேன். அரசியலமைப்பு சட்டத்தின் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற அடிப்படை அம்சங்களை உளமாற தொடர்ந்து பாதுகாக்கவும், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கான தூண்களை மேலும் வலுப்படுத்தவும் அம்பேத்கரின் சிந்தனைகளை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் என்று நான் கருதுகிறேன்.


இந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்கள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கான சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான இயக்கம் தான் தி.மு.க., இந்த கொள்கைகளை அடைவதற்காக, சமத்துவம், சமூகநீதி மற்றும் சமூக பாதுகாப்பு அளிக்கும் பல்வேறு சட்டங்களை இயற்றியவர் எனது தலைவர் கருணாநிதி. சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, அரசு வேலைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு, அரசு வேலைவாய்ப்புகளில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு ஆகியவை அடக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுடைய நலனுக்காக எங்கள் தலைவருடைய சிறப்பான ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டங்களில் சில என்பதை நினைவு கூர விரும்புகிறேன்.
சமத்துவபுரம் அனைத்து சாதியினரும் ஒரே கூரையின் கீழ் வசிக்கும் நோக்கில் தலைவர் கருணாநிதியின் சிந்தனையில் உருவான உன்னதமான திட்டம். சமூக நல்லிணக்கத்தை பேணும் வகையில் தமிழகம் முழுவதும் 150–க்கும் மேற்பட்ட சமத்துவபுரங்கள் அவரால் அமைக்கப்பட்டது.
பாபாசாகேப் அம்பேத்கரால் இந்த நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்காக என்றும் குரல் கொடுக்கும் இயக்கமாக தி.மு.க. திகழ்கிறது. எப்போதெல்லாம் மக்களுடைய ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு உரிமைகளை பறிக்கும் முயற்சிகள் நடைபெறுகிறதோ, அப்போதெல்லாம் அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகளை பாதுகாத்திட தி.மு.க. உறுதியாக எதிர்த்ததோடு, கடுமையாக போராடியும் வந்துள்ளது.

எனவே, நூறாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரும், மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதியும், சமூகநீதிக் காவலருமான தந்தை பெரியாரின் கனவுகளையும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த பாபாசாகேப் அம்பேத்கரின் சமத்துவக் கொள்கைகளையும் மதித்து போற்றும் வகையில், ‘பெங்களூரு பிரகடனம்’ வழங்கியிருந்த சில பரிந்துரைகளை, தி.மு.க. அரசு ஏற்கனவே தமிழகத்தில் நிறைவேற்றியது. தி.மு.க.வின் முக்கிய அங்கமாக திகழும், முரசொலி நாளேடு, தனது 75–வது ஆண்டு பவளவிழாவை கொண்டாடும் இந்த தருணத்தில், தங்களின் சமத்துவத்துக்கான பிரகடனங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து அந்த நாளேட்டில் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  தினத்தந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக