ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

அமைச்சர் உதயகுமார் :புதிய நிர்வாகிகள் நியமன அறிவிப்பால் குழப்பம்

udayakumar
அதிமுக அம்மா அணியின் புதிய நிர்வாகிகள் நியமன அறிவிப்பு கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன், கட்சியின் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து வெள்ளிக்கிழமை அறிவித்தார். இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை ஆர்.பி.உதயகுமார் கூறியது:
அதிமுக அம்மா அணியின் புதிய நிர்வாகிகளாக 18 பேர் அமைப்புச் செயலர்கள், 8 பேர் ஜெயலலிதா பேரவை இணைச் செயலர்கள் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளை தினகரன் அறிவித்துள்ளார். இத்தகைய புதிய நிர்வாகிகள் அறிவிப்பு கட்சியின் நடைமுறையில் இல்லாதது. அதிமுக பொதுச் செயலராக ஜெயலலிதா இருந்தபோது, புதிய நிர்வாகிகள் நியமிக்கும்போது அந்தந்த மாவட்ட ச் செயலர்கள், சார்பு அணிகளின் செயலர்களின் பரிந்துரையை ஏற்று அதை விசாரித்து உரிய நபர்களை நியமனம் செய்வார். இவ்வாறு அறிவிக்கும்போது மாவட்டச் செயலர்கள், சார்பு அணிகளின் செயலர்களுடன் நிர்வாகிகள் இணைந்து கட்சிப் பணியாற்றுவதற்கு உற்சாகமாக இருக்கும்.

இப்போது அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவருமே கட்சியில் சிறப்பாகப் பணியாற்றியவர்கள்தான். புதிய பதவிகளுக்குத் தகுதியானவர்கள்தான். அவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருப்பதில் எவ்வித மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதற்கான அறிவிப்பு முறை தான் ஏற்புடையதாக இல்லை. நன்றாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிற அமைப்பில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்துக்கு துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் அனுப்பிய பதிலை ஏற்க ஆணையம் மறுத்துவிட்டது. அவரைத் துணைப் பொதுச் செயலராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. இரு நாள்களுக்கு முன்புகூட பொதுச் செயலர் யார் என்று தேர்தல் ஆணையத்திடம் எழுப்பிய கேள்விக்கு, அதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஆணையம் தெரிவித்து இருக்கிறது. அதோடு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பாக செயலாற்றிக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் அரசைப் பாராட்டி வருகின்றனர். இத்தகைய சூழலில், புதிய நிர்வாகிகள் நியமனம் தேவையற்றது. சிலரை முன்னிலைப்படுத்துவதற்காக எடுக்கும் முடிவு கட்சிக்கு வலு சேர்க்காது. தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் கட்சியினருக்கும் ஊக்கம் அளிக்காது.
விருப்பம் இல்லை: திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கே.போஸ் உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட பதவியை ஏற்க விரும்பவில்லை எனக் கூறியுள்ளனர். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து கட்சித் தலைமை அறிவிக்கும் கிளைச் செயலர் பதவியைக் கூட இதுவரை யாரும் மறுத்தது கிடையாது. இப்போது முதல் முறையாக சட்டப்பேரவை உறுப்பினர்களே பதவியை வேண்டாம் எனக் கூறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது புதிய நிர்வாகிகள் நியமனத்தில் எத்தகைய நடைமுறை இருந்ததோ அதைப் பின்பற்ற வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.
மத்திய அரசுடன் மாநில அரசும் இணைந்து செயலாற்றினால்தான் மக்களுக்கு நல்ல திட்டங்களைக் கொடுக்க முடியும். மாறாக, எதிர்மறையாகச் செயல்பட்டால் மாநிலத்துக்கான உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். மக்களின் நலனுக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவது அவசியம். மத்திய அரசு கூறும் நல்லவற்றைக் கேட்டு இயங்குவதில் தவறில்லை.
அதிமுக நிர்வாகிகள் மட்டுமின்றி ஒன்றரை கோடி உறுப்பினர்களின் எண்ணம் பிரிந்தவர்கள் ஒன்று கூடுவது தான் என்றார் அமைச்சர் உதயகுமார்.

பதவியை ஏற்க விருப்பம் இல்லை
அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் அறிவித்த புதிய பதவியை ஏற்க விருப்பம் இல்லை என்று திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கே.போஸ் தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
அதிமுக அம்மா அணி விவசாயப் பிரிவு இணைச் செயலராக என்னை நியமித்து, துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார். தொலைக்காட்சியில் பார்த்து தான் இந்த தகவலைத் தெரிந்து கொண்டேன். எனது உடல்நிலை காரணமாக, இந்த பதவியை ஏற்க விரும்பவில்லை. அப்படியெனில் டி.டி.வி.தினகரனை ஏற்கவில்லையா எனக் கேட்கிறீர்கள். அவரை ஏற்பது, ஏற்கவில்லை என்பதல்ல பிரச்னை. என்னால் செயல்பட முடியாது என்பதால் மறுக்கிறேன். கட்சி அலுவலகத்துக்கு டி.டி.வி.தினகரன் வருவதை எதிர்க்கும் தகுதியும், அதிகாரமும் எனக்கு இல்லை. நான் சட்டமன்ற உறுப்பினர் மட்டுமே. முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் அரசு தொடர வேண்டும் என்று பொதுச் செயலர்
சசிகலா, கூவத்தூரில் சத்தியம் பெற்றார். அதைக் காப்பாற்றும் வகையில் தொடர்ந்து செயலாற்றுவேன் என்றார்.  தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக