ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

பள்ளிப் பாடநூல் மறந்த எம்.சி.ராஜா ... நிலா நிலா ஓடிவா , கைவீசம்மா கைவீசு ..


பள்ளிப் பாடநூல் மறந்த எம்.சி.ராஜா எனும் கல்வியாளர்! 'எம்.சி.ராஜா அவர்கள்தான், அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிகள் உருவாகக் காரணமாக இருந்தார்' என்பது பரவலாக அறிந்த தகவல். இதன் மூலம் அவர் தலித் மாணவர்களுக் காக மட்டுமே சிந்தித்தார், உழைத்தார் என்கிற தோற்றத்தையும் உருவாக்கியிருக்கிறார்கள் என்பதையும் நாம் மறுக்க முடியாது. ஆனால் உண்மை என்ன? அவர் அப்படி ஒரு சமூகத்தைச் சார்ந்த மாணவர்களுக்குத்தான் பாடுபட்டாரா? அன்றைக்கு உருவான தலித் சமூகத்தலைவர்கள் போலவே, கல்வி மீது கவனமும் வளரும் தலைமுறைகள் மீது அக்கறையும் கொண்டவர் தான் பெருந்தலைவர் ராஜா. சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி முடித்தவுடன் சிறந்த ஆசிரியராக பணியாற்றினார். அவர் வெறுமனே கற்பிக்கும் ஆசிரியரிக அல்லாமல் கல்வி சிந்தனையாளராக திகழ்ந்தார். எல்லோருக்கும் கல்வி கிடைக்கவேண்டும் என்று செயல்பட்டு பல பாடநூல்களை இயற்றினார். அவரது கல்வி சிந்தனையை வரவேற்று பிரிட்டீஷ் ஆளுநரான திரு. பெனட்லான்ட் அவர்கள், பெருந்தலைவரை ஆரம்பக் கல்விக் குழுவில் 1919 இல் இணைத்தார். அதன்பிறகு, தமது அறிவார்ந்த பணிகளால் 1924 இல், சென்னைப் பல்கலைக் கழத்தின் ஆட்சிமன்றக் குழுவுக்கு நியமனம் செய்யப்பட்டார். மாணவர்களுக்கான விடுதிகளின் தேவையை அரசுக்கு எடுத்துரைத்தார். அப்போதுதான் மாணவர் விடுதிகள் நிறுவப்பட்டன. மேலும், 1926 இல் பாடிசன் விடுதிக்குழுவின் உறுப்பினராகவும் நியமிக்கப் பட்டார். தொடர்நது அவர் கல்விப்பணிக்கு ஆற்றிய பெருந்தொண்டை மதிக்கும் வகையிலும் அங்கீகரிக்கும் வகையிலும் 1927 இல் அவரை சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆட்சிமன்றக் குழுவிற்கு இரண்டாம் பருவ காலத்திற்கும் நியமித்தார் ஆளுநர் திரு. கோஷென் பிரபு அவர்கள். இவ்வாறு கல்விப்பணியாற்றிய பெருந்தலைவர் அத்தோடு நிற்காமல் மாணவர்களின் சமூக பற்றையும், சேவை மனப்பான்மையையும், தன்னம்பிக்கை உணர்வையும் ஊக்குவிக்கும் விதமாக 'சாரணர் இயக்கத்தை' தலைமையேற்று வடிவமைத்தார். பள்ளிகளின் சாரணர் இயக்குனராகவும் பணியாற்றி மாணவர்களை சீர்படுத்தினார். வேல்ஸ் இளவரசரின் இந்திய வருகையின் போது இளவரசரின் பெயரிலேயே சாரணர் அணியை துவக்கினார். ஆளுநர் பென்ட்லான்ட் பிரபுவின் அழைப்பில் அரசினர் மாளிகையில் நடந்த சாரணர் இயக்கம் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற பெருந்தலைவர் செங்கல்பட்டு மாவட்டத்தின் சாரணர் ஆணையராகவும் நியமிக்கப்பட்டார். பள்ளிகளில் அமைக்கப்பட்ட சாரணர் இயக்கத்தில் மட்டுமல்ல அதற்கும் வெளியே ஒரு பொது சாரணர் இயக்கத்தின் தேவையையும் அவர் வலியுறுத்தினார். இத்தகைய சிறந்த, புகழ்மிக்க கல்வியாளரான பெருந் தலைவர் எம்.சி.ராஜா அவர்களை நம் பள்ளி பாட நூல்களில் பாடமாக வைக்காமல் தமது தீண்டாமையை கடைப்பிடிக்கிறது தமிழக கல்வித்துறை!
ஸ்டாலின் தி: குழந்தைகளுக்காக நிலாவை அழைத்த தலைவர் எம்.சி.ராஜா!
தலைவர் எம்.சி.ராஜா அவர்கள் சிறந்த செய்யுள் ஆசிரியராகவும் திகழ்ந்தவர் ஆவார். 'ஆதிதிராவிடர் வரலாறு' எனும் நூலை இயற்றியவரான திரு. ஜே.சிவசண்முகம் பிள்ளை அவர்கள் தலைவர் ராஜாவைப் பற்றி 'இராவ்பகதூர் எம்.சி.இராஜாவின் வாழ்க்கையும் தேர்வு செய்யப்பட் எழுத்துகளும் உரைகளும்(The Life,Select Writings of Rao Bahdur M.C.Rajah, M.L.A.)' எனும் நூலை எழுதினார். 1930 இல் பித்தாபுரம் மகாராஜா கார்லைல் அவர்களின் அணிந்துரையுடன், Madras Thr Indian Publishing House LTD வெளியிட்ட அந்த நூலை முடிக்கும் போது அதன் ஆசிரியரான ஜே.சிவசண்முகம் பிள்ளை அவர்கள், தான் ராஜா அவர்களின் செய்யுள்களை படிக்காததால் 'திரு.ராஜா ஒரு கவிஞர்' எனும் தலைப்பில் இந்நூலில் தனி பகுதியை எழுத முடியவில்லை என்று வருந்துகிறார். அத்தகைய கவிஞானத்தை தலைவர் மழலையர் கல்விக்கு, எளிய மொழியில் படுத்தினார்.
'நிலா நிலா ஓடிவா' எனத்துவங்கும் மழலையர் பாடலை நாம் கடந்துதான் வந்திருக்கிறோம்.

பள்ளிப்படிப்பை படிக்காதவர்களுக்கும் கூட அந்த பாடலில் பரிச்சயம் உண்டு. அப்படி புகழ்ப்பெற்ற பாடலை இயற்றியதில் தலைவருக்கும் பங்குண்டு என்பதை நம் பள்ளிகள் போதித்ததில்லை. 'Kinder Gardan Room' என்னும் தலைப்பில் அவர் ஆர்.ரெங்கநாயகி அம்மையாருடன் இணைந்து மழலையர் பாடநூலை இயற்றினார். அந்த நூலில்தான் மக்களிடம் இன்றளவும் புகழ்பெற்ற 'நிலா நிலா ஓடிவா', 'கைவீசம்மா கை வீசு' போன்ற பல பாடல்கள் இடம்பெற்றிருந்தன. பிறகு சிலச்சில மாற்றங்களுடன் பள்ளியில் பயிற்று விக்கப்பட்டன. ஆசிரியர் பெயர் இல்லாமல் அந்த பாடல்கள் பாடத்தில் இடம் பெறக்காரணம் கல்வித்துறையிலும் கோலோச்சும் சாதியம்தான்.
இனி நம் தலைமுறை மழலைகளுக்காக நிலாவை அழைக்கும்போது ராஜாவின் வரலாற்றையும் போதிப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக