புதன், 23 ஆகஸ்ட், 2017

இந்தி தேசிய மொழி அல்ல; ஆகவும் முடியாது: கர்நாடக முதல்வர் சித்தராமையா பேட்டி

கர்நாடக மாநிலத்துக்குத் தனிக்கொடி கோரும் முதலமைச்சர் சித்தராமையா, இந்தி என்பது தேசிய மொழி அல்ல, தேசிய மொழியாக ஆகவும் முடியாது என்று தெரிவித்துள்ளார்.'தி இந்து'வுக்கு (ஆங்கிலம்) அவர் அளித்த சிறப்பு பேட்டி:இந்திய அரசுக்கு நீங்கள் எழுதியுள்ள கடிதத்தில், மெட்ரோ பலகைகளிலும் அறிவிப்புகளிலும் உள்ள இந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளீர்கள். சுதந்திர தின உரையின் போதுகூட இந்தித் திணிப்பை எதிர்த்துப் பலமாக குரல் எழுப்பினீர்களே?
இந்தியை யாராலும் திணிக்க முடியாது. மக்கள் தங்களின் விருப்பத்துக்கேற்ப இந்தி கற்க விட்டுவிட வேண்டும். இந்தி தேசிய மொழி அல்ல. தேசிய மொழியாகவும் ஆக முடியாது. அது நாட்டின் பல்வேறு மொழிகளில் ஒன்று, அவ்வளவுதான்.

நான் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை. இந்தியோ, தமிழோ அல்லது வெளிநாட்டு மொழிகளோ அதை வலுக்கட்டாயமாகத் திணிக்காதீர்கள்.
மத்திய அரசு இந்தியைத் திணிக்க திட்டமிட்ட முயற்சிகளை மேற்கொள்கிறது என்கிறீர்களா?
ஆம், அப்படித்தான் உணர்கிறேன். உதாரணத்துக்கு நம்ம மெட்ரோவை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தியைப் பயன்படுத்துமாறு அவர்கள் கடிதம் அளித்துள்ளனர். அதைத் தமிழ்நாடு பின்பற்றவில்லை. ஆனால் கேரளா பின்பற்றுகிறது. இது நம்முடைய தேர்வாகத்தான் இருக்க வேண்டுமே தவிர அவர்களால் அதைத் திணிக்கமுடியாது. அந்தக் கடிதத்துக்கு, கன்னட மக்களின் உணர்வுகளுக்கு இது எதிராக இருக்கிறது என்று பதிலளித்துவிட்டேன்.
மாநிலத்துக்கான தனிக்கொடியை வடிவமைக்க ஒரு குழுவை அமைத்துள்ளீர்கள். இந்திய ஒருமைப்பாட்டுக்கு இது பங்கம் விளைவிக்கக் கூடும் என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வீர்கள்?
மாநிலத்துக்கென தனிக்கொடி இருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானதல்ல என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. யுஎஸ்ஸில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனிக்கொடி அல்லது தனி தேசிய கீதம் இருக்கிறது. மாநிலக் கொடி எப்போதும் தேசியக்கொடிக்குக் கீழே தான் இருக்கும். மேலே பறப்பது தேசியக் கொடியாகத்தான் இருக்கும். பிராந்திய மொழியின் பெருமை பேசுவதும், மாநிலக் கொடியை வைத்திருப்பதும் அரசியல் சாசனத்துக்கோ, இந்திய ஒருமைப்பாட்டுக்கோ எதிரானதல்ல.
இந்த செயல்முறைகள் அனைத்தும் ஏன் கர்நாடகத் தேர்தலை ஒட்டியே அமைந்துள்ளன? பாஜகவின் தேசியவாதத்தை, மாநில உணர்வுகள் கொண்டு வெற்றிகொள்ள காங்கிரஸ் முயல்கிறதா?
மாநில உணர்வுகள் எப்போதும் இருக்கின்றன. ஆனால் அவை தேசப்பற்றுக்கு எதிரானவை அல்ல. எல்லோரும் தேசபக்தியாளர்கள்தான். நானும் நாட்டுப்பற்றாளனே. இந்தியை எதிர்ப்பதாலோ, மாநிலக் கொடி கேட்பதாலோ நான் தேச பக்தியற்றவன் அல்ல. இங்கே போட்டி என்பது மதச்சார்பின்மைக்கும் வகுப்புவாதத்துக்கும் இடையில் நடப்பதாகும்.
ஆனால் மத்திய அரசு கூட்டாட்சித் தத்துவத்தையே சிதைத்துவிட்டது என்ற குற்றச்சாட்டை தேர்தல் நேரத்தில் சுமத்துகிறீர்கள். ஆனால் இதில் அரசியல் நோக்கம் தெளிவாகத் தெரிகிறதே....
எதிர்பாராத விதமாக, எல்லாம் ஒரே நேரத்தில் வருகிறது. ஆனால் எங்களின் நோக்கம் அதுவல்ல. இந்தித் திணிப்பு எதிர்ப்பை, மத்திய அரசுக்கு எதிராக பதிலடி இல்லை என்று சொல்லமாட்டேன். எந்தத் திணிப்புக்கும் இங்கே எதிர்ப்பு இருக்கும்.
அப்படியெனில் கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைப்பீர்களா?
தேவையில்லை. காங்கிரஸ் தனியாகவே போரிட்டு, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்.
தேர்தலை முன்னிட்டு ஒரு தலைவரை முன்னிறுத்துவது காங்கிரஸில் பெரும்பாலும் நடப்பதில்லை. ஆனால் கர்நாடகாவில் காங்கிரஸ் உங்கள் தலைமையின் கீழேதான் போராடிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸின் பலம், மாநிலத் தலைவர்களான உங்களைப் போன்றவர்களிடம் வந்துவிட்டதாக எண்ணுகிறீர்களா?
இல்லை. உயர் மட்டத்தில் இருந்து, மாநிலத்துக்கு எந்தப் பகிர்வும் நடக்கவில்லை. எந்தவொரு அரசியல் கட்சிக்கும் வலிமையான மாநிலத் தலைமை அவசியம். அதே நேரத்தில் அதனால் உயர் மட்டத் தலைமை வலிமையற்றதாகவும், மாநிலத் தலைமை வலிமை வாய்ந்தது என்றும் எண்ணக்கூடாது. நான் முதல்வராக இருப்பதால், என்னுடைய தலைமையின் கீழ் தேர்தல் நடத்தப்படும் என்று கூறியிருக்கிறார்கள். அவ்வளவே!
உங்களின் அரசு ஊழலில் ஈடுபட்டதால் மின்சாரத்துறை அமைச்சர் டி.கே.அமைச்சர் பதவி விலக வேண்டும் எனவும் பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பாவுக்கு எதிராக ஊழல் தடுப்பு ஆணையம் தொடுத்துள்ள வழக்கு அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் எனவும் பாஜக குற்றம் சாட்டியுள்ளதே...
எடியூரப்பா மீதான வழக்குக்குக் காரணம் அவருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்தான். சட்டம் தன் கடமையைச் செய்யும்.
டி.கே.சிவக்குமாரின் விவகாரத்தைப் பொறுத்தவரையில், யாரின் மேலும் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஏன் எப்பொழுதும் காங்கிரஸ் ஆட்களே சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்? எதனால் பாஜக உட்பட பிற கட்சிக்காரர்கள் மீது வருமான வரித்துறை, தன் சோதனையை மேற்கொள்வதில்லை?
சிவக்குமாரின் ராஜினாமாவை நீங்கள் கோருவீர்களா?
ஏன்? அதை நாங்கள் ஏன் செய்யவேண்டும் என்று கூறுங்கள். வருமான வரித் துறை எதையும் வெளிப்படுத்தவில்லை. அவர்களின் நோட்டீஸுக்கு சிவக்குமார் முறையாக பதிலளிக்கிறார். அதனால் அவர் குற்றம் இழைத்திருக்கிறார் என்று அர்த்தமா?
தேர்தல்கள் அனைத்தும் குறித்த நேரத்தில் நடக்குமா அல்லது முன்னரே நடத்தத் திட்டமிட்டிருக்கிறீர்களா?
தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திட்டமிட்டபடி நடக்கும். தேர்தலில் எங்களின் வெற்றி குறித்து உறுதியாக இருக்கிறோம்.
தமிழில்: ரமணி பிரபா தேவி tamilthehindu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக