புதன், 23 ஆகஸ்ட், 2017

ப்ளூவேல் சேலஞ்ச்: சென்னைக்கும் பாய்ந்தது தற்கொலை விளையாட்டு!

ப்ளூவேல் சேலஞ்ச்: சென்னைக்கும் பாய்ந்தது தற்கொலை விளையாட்டு!மின்னம்பலம் : தமிழக அரசியலில் இன்றைய நிலையில், அதைத்தவிர வேறு செய்தியில் கவனம் செல்லாது மொத்த குடிமக்களுமே தங்களது எதிர்காலம் பற்றிய கேள்வியில் மூழ்கிக்கொண்டிருந்தபோது அந்தத் துயரச் சம்பவம் சத்தமில்லாமல் நடந்தேறியிருக்கிறது. ப்ளூவேல் சேலஞ்ச் விளையாட்டு மூலமாக சென்னையில் ஒரு பெண் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
ரஷ்யாவில் தொடங்கி உலகின் பல முக்கிய நாடுகளில் சுற்றிவிட்டு தற்போது இந்தியாவிலிருக்கும் குழந்தைகளின் உயிரைக் குறிவைத்திருக்கும் இந்த ப்ளூவேல் சேலஞ்ச் விளையாட்டு மஹாராஷ்டிரா, அரியானா வழியாக கேரளா வந்து மூன்று உயிர்களைக் குறிவைத்து ஓர் உயிரைக் கொன்றது. இப்போது சென்னை விருகம்பாக்கத்திலுள்ள பூஜா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்ற 25 வயது பெண்ணையும் விட்டுவைக்கவில்லை.


‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் ‘விருகம்பாக்கத்தில் ஒரு பெண் ப்ளூவேல் சேலஞ்ச் விளையாட்டினால் தற்கொலை முயற்சி’ என்று நேற்று (22.08.17) இரவு 9 மணியளவில் செய்தி வெளியானது. ப்ளூவேல் சேலஞ்ச் அதற்குள் தமிழகம் வரை வந்துவிட்டதா என்ற கேள்வியுடன் விருகம்பாக்கம் R-5 காவல் நிலையத்தை தொடர்புகொண்டு பேசியபோது, இந்தத் தகவலை உறுதி செய்தனர். 21ஆம் தேதி இரவு பூஜா என்ற பெண் அவர் குடும்பத்துடன் வசித்துவந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியிலிருந்து விழுந்திருப்பது தெரியவந்தது. இது ப்ளூவேல் சேலஞ்சின் பத்தாவது நாள் அல்லது பதினெட்டாவது நாள் டாஸ்க்கில் உயரமான மாடியின்மீது சென்று நிற்கச் சொல்லும் ப்ளூவேல் டாஸ்க்கின் ஒரு படி.
ப்ளூவேல் சேலஞ்சின் ஐம்பது நாள் டாஸ்க்கில் அனைத்துமே பயங்கரமானவை. எந்த நொடியிலும் மரணத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் இந்த டாஸ்க்கில் இதுபோல எதிர்பாராமல் சம்பவங்கள் நடைபெறும் வாய்ப்பு அதிகம். சிறிது நேரத்தில் வந்துவிடுகிறேன் என்று சொல்லிச்சென்ற பூஜா, மாடி மீதிலிருந்து கீழே விழுந்திருப்பது தவறுதலாக நடந்திருக்கக்கூடும் என்று காவல்துறை தரப்பு தெரிவித்திருக்கிறது.
வடபழனியிலுள்ள விஜயா ஹெல்த் சென்ட்டரில் அனுமதிக்கப்பட்ட பூஜா, எவ்வித அபாயமான காயங்களும் இன்றி தப்பித்துவிட்டதால் நேற்று (22.07.17) டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுவிட்டார். பூஜாவின் பெற்றோர் தரப்பிலிருந்து எவ்விதப் புகாரும் அளிக்கப்படாததால், காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை.
பத்தாவது நாள் வரை ஒரு பெண்ணை ப்ளூவேல் சேலஞ்ச் அழைத்துச் சென்றிருக்கிறதென்றால், தமிழகத்தில் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாகக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதைப்பற்றிய விழிப்புணர்வை அனைத்து வயதினரிடையேயும் கொண்டுசெல்வது அவசியமாகிறது.
ப்ளூவேல் சேலஞ்ச் என்றால் என்ன?
பகுதி 1: சைபர் சைக்கோக்களுக்குப் பாடம் புகட்டுவோமா?
பகுதி 2: சைபர் சைக்கோக்களுக்குப் பாடம் புகட்டுவோமா?
பகுதி 3: சைபர் சைக்கோக்களுக்குப் பாடம் புகட்டுவோமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக