புதன், 9 ஆகஸ்ட், 2017

குழந்தைகள் முகத்தில் ’சீல்’ வைத்த சிறை அதிகாரிகள்!

மத்தியப் பிரதேசத்தில் சிறையில் உள்ள தந்தையைப் பார்க்கச் சென்ற குழந்தைகளின் முகத்தில் அதிகாரிகள் சீல் வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இதில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளைக் காண வரும் உறவினர்களை உள்ளே அனுமதிப்பதற்காகச் சிறையின் வாசலில் அவர்களுக்குச் சிறையின் முத்திரை அச்சடிக்கப்பட்ட டோக்கன் வழங்கப்படும்.
சிறையில் உள்ள தந்தையைப் பார்ப்பதற்காக இரு குழந்தைகள் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 7) அங்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களை உள்ளே அனுமதிப்பதற்கு முன்னர் அவர்களின் முகத்தில் சிறை அதிகாரிகள் அடையாள சீல் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. முகத்தில் சீல் வைக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். பிஞ்சுக் குழந்தைகளின் முகத்தில் சீல் வைத்துள்ளது மனிதாபிமானமற்ற செயல் என்றும் தெரிவித்துள்ளனர்.

மத்தியப் பிரதேச மனித உரிமைகள் ஆணையம் இந்தச் சம்பவத்தைக் கையில் எடுத்துள்ளது. இதற்கிடையே, சீல் வைக்கப்பட்டது எதிர்பாராமல் நிகழ்ந்த சம்பவம் என்று சிறைத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அன்றைய தினம் ரக்ஷாபந்தன் என்பதால் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் சிறைக்குப் பார்வையாளர்களாக வந்துள்ளனர். எனவே அப்போது தவறுதலாக இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று போபால் மத்திய சிறைச்சாலைக் கண்காணிப்பாளர் தினேஷ் நர்கவே தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய பிரதேசம் சிறைச்சாலை அமைச்சர் குசும் மெஹ்டெலே தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்றுவருகிறது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக