புதன், 9 ஆகஸ்ட், 2017

ஸ்டாலினுக்கு திருமாவளவன் அழைப்பு .. விடுதலை சிறுத்தைகளின் மாநில சுயாட்சி மாநாட்டில் ஸ்டாலின்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் மாநில சுயாட்சி மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டுமென திமுக செயல்தலைவர் ஸ்டாலினுக்கு, விசிக தலைவர் திருமாவளவன் அழைப்பிதழ் வழங்கினார்.
கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலிலிருந்து திமுக கூட்டணியில் இருந்துவந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, அதிலிருந்து விலகி மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. ஆனால் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து கூட்டணியிலிருந்து ஒவ்வொரு கட்சியாக வெளியேறின.

இதற்கிடையே சமீப காலமாக விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் திமுகவுடன் சேர்ந்து விவசாயிகள் பிரச்னை, நீட் தேர்வு என மக்கள் நலப் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றன. இதைத் தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர். தனபாலனின் தாயார் படத்திறப்பு நிகழ்வில் பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின், மாற்றம் வேண்டும் என்று கூறும் விசிக தலைவர் திருமாவளவன், தனக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து பேசிய திருமாவளவன், 'மக்கள் பிரச்னைகளில் திமுகவுடன் இணைந்து செயல்படத் தயார்' என்று தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழ்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநிலங்களின் உரிமைகளைக் காப்பதற்காகக் குரல் கொடுக்கும் வகையில், மாநில சுயாட்சி மாநாட்டை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் நடைபெறவுள்ளது. இதையடுத்து இன்று (ஆகஸ்ட் 9) சென்னை தேனாம்பேட்டையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில், திமுக செயல்தலைவர் ஸ்டாலினைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,'ஸ்டாலினுடனான இந்தச் சந்திப்பை அரசியலாகப் பார்க்க வேண்டாம். நீட் விவகாரத்தில் தமிழக அரசு இரட்டை நிலைப்பாட்டில் உள்ளது. மாநில உரிமைகளைப் பறிக்கும் செயல்களில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் அந்த மாற்றம் பாஜகவினால் ஏற்பட வாய்ப்பில்லை. தமிழகம் என்பது பாதுகாக்கப்பட்ட மதச்சார்பற்ற மண். இங்கு மத அரசியலுக்கோ, சாதி அரசியலுக்கோ மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள்' என்று தெரிவித்துள்ளார். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக