வியாழன், 17 ஆகஸ்ட், 2017

புறக்கணிக்கப்படும் தென்மாவட்டங்கள் ... இந்து பத்திரிகையின் ஆய்வு!

கடந்த பத்து ஆண்டுகளாக  தெற்கு மாவட்டங்கள் புறக்கணிக்க படுவதாக   குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. அதைக் காதுகொடுத்துக் கேட்கத்தான் எந்தக் கட்சிக்கும் நேரமில்லை! ஒரு பயணம் போதும்: தெற்கு எந்தளவுக்குப் பின்தங்கியுள்ளது என்பதை அறிய ஊர் ஊராகப்போய் ஆய்வு நடத்தவேண்டிய அவசியமில்லை. ஒரே ஒரு ரயில் பயணம் போதும். சென்னையிலிருந்து திருச்சி வரையில் இரட்டை ரயில் பாதையில் சூப்பர் ஃபாஸ்ட்டில் பயணிப்போர், அதே வேகத்தில் தெற்கே கன்னியாகுமரிக்கோ, ராமேஸ்வரத்துக்கோ போய்வர முடியாது. காரணம், இரட்டை ரயில் பாதை இடையிலேயே நின்றுவிடும். சென்னைக்குத் திரும்பிச் செல்ல, ஒரு மாதத்துக்கு முன்பே ரயிலில் முன்பதிவு செய்தால்தான் உண்டு.
சாலை மார்க்கமாக சென்னை - கன்னியாகுமரிக்கு நான்குவழிச் சாலையில் செல்வோர், மதுரைக்கு வந்ததும் ‘எங்கே ரோட்டக்காணோம்?’ என்று தேட வேண்டிய நிலை. காரணம் என்.எச் - 47-ல் மதுரையிலிருந்து திருமங்கலம் வரை சாலை துண்டு விழுந்துவிட்டது. இன்று நேற்றல்ல கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தச் சாலை இப்படித்தான் சபிக்கப்பட்டுக் கிடக்கிறது. சமீபத்தில் நடந்த சட்டமன்ற கூட்டத்தில், ‘தயவுசெய்து முதல்வர் அவர்கள், மதுரை ரிங்ரோட்டில் காரில் பயணிக்க வேண்டும்’ என்று திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கெஞ்சிக்கேட்டதன் அர்த்தம் நேரில் பார்த்தால்தான் புரியும்.

ப.சிதம்பரம் ஊருக்கே ரயில் இல்லை

திருச்சி - ராமேஸ்வரம் இருவழிச் சாலையும் கடந்த நான்கு வருடங்களாக காரைக்குடியைக் கடக்கமுடியாமல் நிற்கிறது. இத்தனைக்கும் இந்தப் பகுதியானது முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் பாராளுமன்றத் தொகுதிக்குள் வருகிறது. இதைவிட அவலம், ப.சிதம்பரத்தின் சொந்த ஊரான கண்டனூர் வழியாக காரைக்குடி - சென்னைக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணி வாஜ்பாஜ் காலத்தில் அறிவிக்கப்பட்டு, இன்னமும் பணிகள் முடிந்தபாடில்லை. சென்னை - கன்னியாகுமரி கிழக்குக் கடற்கரைச் சாலைகூட தென் மாவட்டங்களில் தேய்ந்தேதான் கிடக்கிறது.
சென்னை, கோவை, மதுரைக்கு ஒரே நேரத்தில்தான் மோனோ ரயில் திட்டத்தை அறிவித்தார் ஜெயலலிதா. சென்னையில் அது மெட்ரோ ரயில் திட்டமாக மாற்றப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறது. கோவைக்கும் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் தொடங்கிவிட்டன. மதுரையிலோ, ‘என்னது மோனோவா அப்படின்னா?’ என்று கேட்கிறார்கள் அமைச்சர்கள். தென் தமிழகத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சேதுசமுத்திரத் திட்டத்தை அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் மத மற்றும் வெறுப்பரசியல் காரணமாக முடக்கிவிட்டன. ஆபத்தானவை என்று சொல்லப்படும் ஸ்டெர்லைட், கூடங்குளம் போன்ற திட்டங்களை மட்டும் நைசாக தெற்கே தள்ளிவிட்டவர்கள், எய்ம்ஸ் மருத்துவமனையை மட்டும் இழுத்துப் பிடிக்கிறார்கள்.
சென்னைக்கு அருகே இருந்திருந்தால், கொடைக்கானலும் குற்றாலமும் அகில இந்திய சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டிருக்கும். குமரி, தேனியின் பல கிராமங்கள் மாநில அளவில் சுற்றுலா முக்கியத்துவம் பெற்றிருக்கும். ராமநாதபுரமும் சிவகங்கையும் தொழில் பூமியாகியிருக்கும். சிவகாசி உலக வரைபடத்தில் இடம்பெற்றிருக்கும்.
வளர்ச்சிப் பணிகளைத்தான் செய்யவில்லை. பிரச்சினைகளையாவது கவனிக்கிறார்களா என்றால், அதுவும் கிடையாது. கம்பம் பகுதியில் கேரள ஆக்கிரமிப்பை மீட்க முயன்ற தமிழக வனத்துறை அதிகாரியை தமிழக அரசே தூக்கியடித்துவிட்டது. பிரச்சினைக்குரிய இடத்தை கேரள முன்னாள் முதல்வரே நேரில் வந்து பார்க்கிறார். தமிழகத்திலோ எதிர்க்கட்சிகளுக்குக்கூட அதற்கெல்லாம் நேரமில்லை. கேரளாவுடனான முக்கிய நதிநீர்ப் பிரச்சினைகளில் ஒன்றான, குமரி மாவட்டத்தின் நெய்யாற்றங்கரை பிரச்சினை மாநிலப் பிரச்சினையாக கருதப்படுவதேயில்லை. மேட்டூர் அணை தூர்வாரப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் மதுரை மாவட்ட விவசாயிகள், ‘இனி, உங்களை நம்பிப் பிரயோஜனம் இல்லை, வைகை அணையை எங்களிடமாவது ஒப்படைங்கள்; நாங்களே தூர் வாருகிறோம்" என்று ஆட்சியரிடமே ஆவேசப்பட்டிருக்கிறார்கள்.

அறிவிப்புகளுக்குப் பஞ்சமில்லை

மதுரையிலிருந்து மேலூர், திருப்பத்தூர் வழியாக காரைக்குடிக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என்று 2008 ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 2011 பட்ஜெட்டில் மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு புதிய ரயில் பாதை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதற்கு முன்பாகவே, ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு புதிய ரயில் பாதை அமைப்பதாக மத்திய அரசு வாக்குறுதி தந்தது. இதில் எந்தத்திட்டத்திற்கும் இன்னமும் அடிக்கல்கூட நாட்டப்படவில்லை. அதாவது பரவாயில்லை, மதுரை போடிநாயக்கனூர் இடையே அகல ரயில் பாதை அமைக்கப் போவதாகக் கூறி, ஏற்கெனவே இருந்த மீட்டர்கேஜ் பாதையை பிரித்துப்போட்டு 7 ஆண்டுகள் ஆகியும் எந்த வேலையும் நடக்கவில்லை.
மதுரைக்குத் தெற்கே செல்லச் செல்ல தமிழக அரசு மீதான அதிருப்தி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குமரி மக்களோ வெறுப்பின் உச்சத்தில் இருக்கிறார்கள். "1956-ல் குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது. தமிழர் என்பதற்காக, வெறும் 70 கிலோ மீட்டர் தொலைவில் தலைநகர் திருவனந்தபுரம் இருக்கிற கேரளத்தைவிட்டுவிட்டு, 700 கி.மீட்டர் தள்ளி தலைநகர் இருக்கிற தமிழ்நாட்டுடன் வந்திணைந்தோம். ஆனால், எங்களை மிக மோசமாக நடத்துகிறது தமிழக அரசு. பேருந்து விஷயத்தில்கூட தமிழக அளவில் ஓடி, உருக்குலைந்த ஓட்டை, உடைசல்களே இங்கே இயக்கப்படுகின்றன.
எல்லா விஷயங்களிலும் இப்படி புறக்கணிக்கப்படுவதற்கா உயிரைக்கொடுத்து தமிழகத்தோடு இணைந்தோம்?" என்று கொந்தளிக்கிறார்கள் குமரி மக்கள்!

ஏன் மவுனம் காக்கிறார்கள்?

புதிதாக தொழில் தொடங்க வரும் நிறுவனங்கள் அனைத்தும் சென்னையைச் சுற்றியே வட்டமடிக்கின்றன. அவர்களை தென் மாவட்டங்களுக்குத் தள்ள வேண்டியதும் அங்கே அவர்களுக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதும் அரசின் கடமை. இதையெல்லாம் அரசு கவனத்தில் கொள்ளாததால் புதியவர்கள் தெற்கில் வரவே தயங்குகிறார்கள். ‘அங்கே தொழில் தொடங்கினால் சலுகைகள் தருகிறோம்’ என்ற அரசின் வாக்குறுதிகளிலும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை.
சுவற்றில் தொங்கும் மாநில வரைபடத்தைப் பார்த்தால், தென் மாவட்டங்கள் சென்னைக்குக் கீழே ரொம்பக் கீழே கிடப்பதைப் போல தோன்றலாம். ஆட்சியாளர்கள், அதை மேஜையில் விரித்து வைத்துப் பார்த்தால்தான் உண்மை புரியும். குமரியைப் போலவே சென்னையும் விளிம்பில் உள்ள மாவட்டம் தான் என்று. இதெல்லாம் நன்றாகப் புரிந்திருந்தும், மத்திய, மாநில அரசுகளில் அங்கம் வகிக்கும் தென்மாவட்டப் பிரதிநிதிகளெல்லாம் ஏன் மவுனம் காக்கிறார்கள்?
தென் தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளில் சில..
1. சேது சமுத்திரத்திட்டம்
2. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை
3. மதுரை விமான நிலையத்திலிருந்து வெளி நாடுகளுக்கு சரக்கு ஏற்றுமதிக்கு அனுமதி.
4. மதுரை வடபழஞ்சி, நாங்குநேரி தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை முழுமையாக செயல்படுத்துதல்.
5. தென்காசி, திருநெல்வேலியில் சுற்றுச்சாலை. மதுரையில் வெளிவட்டச்சாலை.
6. ராமநாதபுரம் - திருச்சி நான்கு வழிச்சாலை. தென்காசி - மதுரை, தென்காசி - காவல்கிணறு, திண்டுக்கல் - கோவை நான்கு வழிச்சாலைகள்.
7. கன்னியாகுமரி ரப்பர் தொழிற்சாலை.மார்த்தாண்டத்தில் தேனீ ஆராய்ச்சி மையம்.
8. மதுரைக்கு மெட்ரோ ரயில். அனைத்து தென்மாவட்ட தலைநகரங்களில் இருந்தும் சென்னைக்கு நேரடி ரயில்.
9. வைகை, பாபநாசம் அணைகளைத் தூர் வாருதல்
10. மதுரை - தூத்துக்குடி தொழில் பெருவழிச்சாலை (இன்டஸ்ட்டிரியல் காரிடார்) திட்டம்
11. மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்கள், கேந்திரிய (அ) நவோதய
பள்ளிகள். ஆயுதத் தொழிற்சாலை உள்ளிட்ட மத்திய தொழில் நிறுவனங்கள்.
12. மதுரையில் மண்டல அறிவியல் மையம். குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, 13. தேனி, திண்டுக்கல், விருதுநகரில் மாவட்ட அறிவியல் மையங்கள்.
14. மலர் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் தோவாளையிலும்,
நிலக்கோட்டையிலும் சென்ட் தயாரிக்கும் தொழிற்சாலை.
15. நத்தம் அல்லது அழகர்கோவிலில் மாம்பழக்கூழ் தொழிற்சாலை.
16. மதுரையில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம். மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுக்கென நிரந்தர ஸ்டேடியங்கள்.
17. சிவகங்கை கிராஃபைட் ஆலை விரிவாக்கம். மானாமதுரை
சிப்காட்டில் தொழில் நிறுவனங்கள்.
18. ராமநாதபுரம் உச்சிப்புளியில் பயணிகள் விமான நிலையம்.
19. குமரி, கீழக்கரை, சிங்கம்புணரி பகுதிகளில் தென்னை நார் தொழிற்சாலைகள்.
20. கீழடியில் தொல்பொருள் துறையின் நிரந்தரக் கண்காட்சி மையம்.
21. ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல்லில் மருத்துவக் கல்லூரிகள்.
22. கடலாடி, கமுதி பகுதிகளுக்கு காவிரி தண்ணீர். விருதுநகர் மாவட்டம்
முழுமைக்கும் தாமிரபரணித் தண்ணீர்.
23. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்புத் தொழில் ஊக்குவிப்பு.
ராமேஸ்வரத்தில் அரசு கலைக்கல்லூரி.
24. கொடைக்கானலில் சுற்றுலா மேம்பாடு, ரோப் கார் திட்டம்.
25. ஒட்டன்சத்திரம் காய்கனி மார்க்கெட்டில் குளிர்பதனக்கிடங்கு அமைத்தல்.
மதுரை விமான நிலையமும் தொழில் வளர்ச்சியும்
தொழில் வளர்ச்சியில் தமிழகம் பின்தங்கியதுக்கு, 2 கோடி மக்களைக் கொண்ட 9 தென்மாவட்டங்களும் பின்தங்கியிருப்பதே முக்கிய காரணம். தென்தமிழகம் புறக்கணிக்கப்படுவதை தட்டிக்கேட்கும் அளவுக்கு துணிச்சலான ஆளுமையும் இங்கே இல்லை. இதுபற்றிப்பேசும் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் முதுநிலைத் தலைவர் எஸ்.ரத்தினவேல், "அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்க்கவும் சுற்றுலாப் பயணிகள் வருகையை அதிகரிக்கவும் மதுரையிலிருந்து வெளிநாடுகளுக்கு நேரடி விமான சேவை முக்கியம். அதற்கு, பிற நாடுகளுடனான இருவழி விமான சேவை ஒப்பந்தங்களில் மதுரை விமான நிலையத்தையும் சேர்க்கவேண்டும். அப்படிச் சேர்க்காததால், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், டைகர் ஏர்வேஸ், ஏர் அரேபியா உள்ளிட்ட பல வெளிநாட்டு விமான நிறுவனங்கள் மலேசியா, சிங்கப்பூர், அரபு நாடுகளில் இருந்து மதுரைக்கு நேரடிய விமான சேவையைத் தொடங்க முடியவில்லை. அந்த ஒப்பந்தத்தில் மதுரையைச் சேர்க்கவும், மதுரை விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி பெறவும் தமிழக எம்.பி-க்கள் கூட்டாக கடும் முயற்சியெடுக்க வேண்டும்." என்கிறார் அவர்.
மின் உற்பத்தி இங்கே, தொழிற்சாலைகள் எங்கே?
‘‘கூடங்குளம் அணு மின்நிலையம், நெல்லை, குமரி, தேனி மாவட்ட காற்றாலைகள், நெல்லை, தேனி மாவட்ட அணைக்கட்டுக்களில் செயல்படும் நீர்மின் நிலையங்கள், தூத்துக்குடி அனல் மின் நிலையம், ராமநாதபுரத்தில் வழுதூர் இயற்கை எரிவாயு மின்நிலையம் என தென்மாவட்டங்களில்தான் நிறைய மின் உற்பத்தி நடக்கிறது. ஆசியா விலேயே மிகப்பெரிய சூரியமின்சக்தி திட்டமும் அண்மையில் கமுதியில் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது. உற்பத்தி மின்சாரத்தை தொலை தூரத்துக்கு கொண்டு செல்வதால் அதிகமான மின் இழப்பு ஏற்படும். இதைத் தவிர்க்க, அந்தந்த ஊர்களிலேயே அவற்றைப் பயன்படுத்தும் வகையில் தொழிற்சாலைகளை ஏற்படுத்துவதுதான் புத்திசாலித்தனம். இதன் மூலம் மின்சிக்கனம், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு என்று ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்கலாம் அரசு என்கிறார் மதுரை ‘மடீசியா’  மணிமாறன்.
சாதிக் கலவரங்கள் சொல்வது என்ன?
‘‘தென்மாவட்ட சாதிக் கலவரங்களின்போது அரசு அமைத்த விசாரணைக் கமிஷன்கள் எல்லாமே, 'போதிய வேலைவாய்ப்பின்மையும் கலவரங்களுக்கு முக்கியக் காரணம்' என்று திரும்பத் திரும்பச் சுட்டிக்காட்டியது. அப்படியிருந்தும் இதுவரையில் உருப்படியாக ஒரு தொழிற்சாலைகூட தென்னகத்தில் அமைக்கப்படவில்லை. பிறகு, யாரை ஏமாற்ற இந்த விசாரணைக் கமிஷன்களை அமைத்தார்கள் என்பதும் புரியவில்லை. நாங்குநேரி, வடபழஞ்சி தொழில்நுட்ப பூங்காக்கள் அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. கங்கை கொண்டான் தொழிற்பேட்டையில், ஏற்கெனவே நெல்லை மாநகரத்தில் இருந்த தொழிற்கூடங்கள்தான் செயல்படுகின்றனவே தவிர, புதிய, பெரிய நிறுவனங்கள் எதுவும் வரவில்லை. வீரவநல்லூர் கைத்தறி, சங்கரன் கோவில் விசைத்தறி என இங்கு காலங்காலமாக இருந்து வந்த தொழில்களும்கூட நசிந்துவிட்டன. நெல்லை மாவட்டத்தில் மட்டுமே 3 லட்சம் பேரும் ஒட்டுமொத்தமாக தென் மாவட்டங்களில் சுமார் 1 கோடிப் பேரும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பெயர்களைப் பதிவுசெய்துவிட்டு வேலைக்குக் காத்திருக்கிறார்கள்" என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் பாஸ்கரன்.
கேட்டது வர்த்தக துறைமுகம்: ஆனால் வந்தது?
குமரி மாவட்டம் குளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைக்க வேண்டும் என்பதே குமரி மீனவர்களின் நெடுநாளைய கோரிக்கை. ஆனால், இனயத்தில் 28,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துறைமுகம் அமைக்க முயன்று வருகிறது மத்திய அரசு. அது வர்த்தக துறைமுகம் அல்ல. பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனையம். எனவே, இத்திட்டத்தால் தங்கள் வாழ்வாதாரம், வாழ்விடங்கள் அழியும் என்று மீனவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். "இத்திட்டத்தால் வேலைவாய்ப்பு எதுவும் கிடைக்காது என்பதால், இனயம் துறைமுக திட்டத்தை ரத்து செய்து இதனை குளச்சலிலேயே மேற்கொள்ள வேண்டும்" என்கிறார் தெற்கு எழுத்தாளர் இயக்க மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் திருத்தமிழ் தேவனார்.
தூத்துக்குடிக்கு ஒரே ரயில்
தொழில் மாநகரமான தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு ஒரே ஒரு ரயில்தான் இயக்கப்படுகிறது. லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு விழுவதும் இங்கிருந்து சென்னைக்கு டிக்கெட் கிடைப்பதும் ஒன்றுதான். "தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், வி.வி.டி. சிக்னல் மேம்பாலம் போன்ற திட்டங்கள் கிடப்பில் உள்ளன. கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், கப்பல் கட்டும் தளம், குலசேகரப்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் எல்லாம் அறிக்கைகளில் மட்டுமே இருக்கிறது. தமிழகத்தின் ஐந்தாவது பெரிய விமான நிலையமான, தூத்துக்குடி விமான நிலைய விரிவாக் கமும் கண்டுகொள்ளப்படவில்லை" என்கிறார் துத்துக்குடியைச் சேர்ந்த இந்திய நுகர்வோர் உரிமை அமைப்பின் தலைவர் ஆ.சங்கர்.
தேவை நெல்லை கோட்டம்
“கன்னியாகுமரி மாவட்டம் முழுவதிலுமான ரயில்வே வழித்தடங்களும், நெல்லை மாவட்டத்தின் ஒரு பகுதி வழித்தடங்களும் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தின் கீழ் உள்ளன. குமரியிலிருந்து சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரத்திலிருந்து சென்னை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் இவைகளின் வருவாய் ரயில்வே துறைக்கு பொன்முட்டையிடும் வாத்து. இந்த வருவாயை முழுமையாகப் பெற்றுக்கொள்ளும் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம், தமிழக ஆளுகையில் உள்ள ரயில் நிலையங்களின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோன்ற சிக்கல்கள் தீர, நெல்லை கோட்டம் உருவாக வேண்டும். அல்லது குமரி மாவட்ட ரயில்வே வழித்தடங்களை மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும்” என்கிறார் குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் எஸ்.ஆர்.ஸ்ரீராம்.
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக