வியாழன், 3 ஆகஸ்ட், 2017

வளர்மதி மீது குண்டர் சட்டம் ... சேலம் மாநகர காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் ஆணை


மாணவி மீது குண்டர் சட்டம் : கோர்ட் உத்தரவு!சேலம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவி வளர்மதி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தது தொடர்பாக சேலம் மாநகர காவல் ஆணையர் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று ஆகஸ்ட் 3ம் தேதி உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராடி வருகின்றனர். அதே போல, தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக அந்த கிராம மக்கள் போராடி வருகின்றனர். கதிராமங்கலம் மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெர்வித்தும் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழக இதழியல் துறை மாணவி வளர்மதி, சேலம் கோரிமேடு பெண்கள் கல்லூரி முன்பு துண்டுப் பிரசுரம் விநியோகித்ததற்காக ஜூலை 13ம் தேதி சேலம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இவர் மீது மக்கள் போராட்டங்களில் கலந்துகொண்டதற்காக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறி சேலம் மாநகர போலீஸார் மாணவி வளர்மதியைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து, மாணவி வளர்மதியை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் தற்காலிக இடைநீக்கம் செய்தது.
இதைத்தொடர்ந்து, மாணவி வளர்மதி துண்டுப்பிரசுரம் விநியோகித்த வழக்கில் ஜூலை 18ம் தேதி சேலம் மாவட்ட நீதிமன்றம் ஜே.எம். 4 நீதிபதி லிங்கம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இருப்பினும், மாணவி வளர்மதி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதால், ஜாமின் கிடைத்தாலும் வெளிவர முடியாத நிலையில் அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கோவை சிறையில் உள்ளார். சிறையில் உள்ள மாணவி வளர்மதிக்கு அரசியல் கட்சியினரும் அரசியல் இயக்கங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாணவி வளர்மதியின் தந்தை மாதையன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது மகள் வளர்மதி மீது போடப்பட்டுள்ள குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், காவல்துறை அனுமதி வழங்கிய ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டங்களில், தனது மகள் வளர்மதி உரிய அனுமதி பெற்றுதான் போராடி உள்ளார். அரசியல் காரணங்களுக்காக தனது மகள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறை அனுமதி பெற்று நடைபெற்ற போராட்டங்களில் கலந்துகொண்டதற்காக தொடரப்பட்ட வழக்குகளுக்காக வளர்மதி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது தவறானது. அதனால், நீதிமன்றம் அவர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரனை இன்று ஆகஸ்ட் 3ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் மாணவி வளர்மதி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தது தொடர்பாக சேலம் மாநகர காவல் ஆணையர் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக