சனி, 5 ஆகஸ்ட், 2017

சினிமாவில் அடிமைத்தனத்தின் உச்சம்! கீரோக்களின் காட்டுமிராண்டி பிஹாவியர்

அலைபாயுதே திரைப்படத்தில் ஷாலினியின் அப்பா, மாதவனின் அப்பாவைப் பார்த்து கேட்கும் கேள்வி நியாபகம் இருக்கலாம். இல்லையென்றால் நியாபகப்படுத்துகிறோம். “எப்ப சார் வருது இந்த திமிரு? பணம் வரும்போதா? இல்லை, புகழ் சேரும்போதா? என்று கேட்பார். அந்தக்கேள்வி கேட்கப்பட்ட சூழலுக்கும், இந்த சம்பவத்துக்கும் வித்தியாசங்கள் இருந்தாலும் ஒரு மனிதரைவிட தன்னை சுப்பீரியராக நினைக்கும் தன்மை இரு இடங்களிலும் பொதுவானதுதான்.
நந்தாமுரி பாலகிருஷ்ணாவின் 102வது திரைப்படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார். அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோவில், பாலகிருஷ்ணா தனது அசிஸ்டெண்டின் தலையில் அடித்தது , தற்போது டிரெண்டிங் ஆகிக்கொண்டிருக்கிறது.

தன்னைச் சுற்றியிருப்பவர்களை இப்படி அடிப்பது பாலகிருஷ்ணாவுக்கு புதிதல்ல. ஏற்கனவே அவரது கௌதமபுத்திரா சதகர்னி திரைப்பட ரிலீஸ் கொண்டாட்டத்தில் ஒருவரை அடித்து சர்ச்சையில் சிக்கியவர்தான் பாலகிருஷ்ணா என்றாலும், இம்முறை அவர் செய்திருப்பது யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று.
இந்த சம்பவம் குறித்து விளக்கம் கொடுத்துள்ள கே.எஸ்.ரவிகுமார் அந்த ஷூட் ஒரு கோவிலுக்குள் நடப்பது போல திட்டமிட்டிருந்தோம். எனவே, ஷாட்டுக்கு ரெடியானதும் பாலகிருஷ்ணாவின் செருப்பை கொண்டுபோய் பத்திரமாக வைக்கவேண்டும் என அவர் ஏற்கனவே தனது அசிஸ்டெண்டிடம் சொல்லியிருந்தார். ஆனால், ஷூட் ரெடியானதும் அவரது அசிஸ்டெண்டைக் காணவில்லை. இதனால், அவர் வந்ததும் லேசாக தலையில் தட்டி எங்க போயிருந்த? என்று கேட்டார். அவ்வளவுதான் என்று சொல்லியிருக்கிறார்.
‘லேசான’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் ஏற்கனவே தமிழ்நாட்டில் ‘லேசான தடியடி’ என்பதன் மூலம் அனைவரும் அறிந்திருக்கிறார்கள். ஆனால், தனது செருப்பைக் கழட்டுவதற்குக் கூட உடல் வளையாமலா ஒரு நடிகர் இருக்கிறார்? அதைக் கழட்டுவதற்காக தனது அசிஸ்டெண்டை அவர் பயன்படுத்துவது எப்படி சரியானதாக இருக்கமுடியும்? என்பதுதான் நெட்டிசன்கள் முன்வைக்கும் கேள்வி.
இப்போதும்கூட பாலகிருஷ்ணா கடவுள் வேடம் தரித்துவந்தால், கையெடுத்து கும்பிட்டு காலில் விழும் மக்கள் இருக்கிறார்கள் என்பதற்காக எப்போதும் தன்னை அதே நிலையில் வைத்துக்கொண்டு மற்றவர்களை தன்னைவிட கீழான மனிதனாக பாவிப்பது எப்படிப்பட்ட செயல்? பாலகிருஷ்ணா அடித்த நிகழ்வு மட்டும் நடைபெற்றிருந்தால், அந்த அசிஸ்டெண்டின் தவறுக்கு பாலகிருஷ்ணா கொடுத்த ‘லேசான’ தண்டனையாக இதை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், தனது செருப்பைக் கழட்டுவதற்கு ஒருவரை அழைத்து, அவரது தவறுக்கு ஒரு அடியையும் கொடுத்து செருப்பைக் கழட்டிக் கொண்டுபோய் கேரவனில் வைக்கச் சொல்வது அடிமைத்தனத்தின் உச்சமே அன்றி, வேறு எந்த வரையறைக்குள்ளும் கட்டுப்படுத்தக் கூடிய செயலல்ல.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக