வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

தேர்தல் ஆணையம் சசிகலாவை பொதுசெயலாளராக அங்கீகரிக்கவில்லை

அதிமுக பொதுச் செயலாளர் விவகாரத்தில் சசிகலாவின் நியமனத்தை இதுவரை அங்கீகரிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுக-வின் பொதுச்செயலாளராகப் பொதுக்குழு முடிவின்படி சசிகலா நியமிக்கப்பட்டார். அதன் பிறகு, சசிகலா தலைமையை எதிர்த்து ஓ.பி.எஸ். தனியாக பிரிந்ததையடுத்து சசிகலா அணி என்றும் ஓ.பி.எஸ். அணி என்றும் அதிமுக இரண்டாகப் பிரிந்தது. இந்த நிலையில் அதிமுக-வின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். அதற்கு எதிராக சசிகலா தரப்பும் புகார் செய்த நிலையில், இரட்டை இலை சின்னத்தையும், கட்சியின் பெயரையும் தேர்தல் ஆணையம் முடக்கியது. அதையடுத்து இரு அணிகளும், கட்சியின் பெயரையும், சின்னத்தையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும், அதிமுக-வின் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட சசிகலா தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கிறார். இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் யார் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், வழக்கறிஞருமான அஸ்பயர் சாமிநாதன் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்குப் பதில் அளித்த தேர்தல் ஆணையம், ‘அதிமுக பொதுச்செயலாளர் நியமனத்தில் சர்ச்சை இருப்பதால் சசிகலாவின் நியமனத்தை அங்கீகரிக்கவில்லை. அதிமுக-வில் உட்கட்சி பிரச்னை நிலவுவதால் இரட்டை இலை சின்னம் குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை’ என்று நேற்று ஆகஸ்ட் 1௦ஆம் தேதி பதில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதலில் அதிமுக-வில் இருந்து சசிகலா, தினகரன் ஆகியோர் நீக்கம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கூட்டம் முடிந்து வெளியிடப்பட்ட தீர்மான நகலிலோ தினகரனை மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. அதில், தினகரனை துணைப் பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களைத் திரும்ப பெறுவது, ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகளே அதிமுக-வை வழிநடத்துவது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், சசிகலாவைப் பற்றிக் குறிப்பிடுகையில், கழகத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளராக பணியாற்றிய மாண்புமிகு அம்மாவின் இடத்தில் வேறு எவரையும் அமர்த்தி அழகு பார்க்க கழகத் தொண்டர்கள் விரும்ப மாட்டார்கள் என்று நாசூக்காகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக