சனி, 12 ஆகஸ்ட், 2017

ஜெயலலிதா போர்ஜரி கைரேகை வழக்கு: ராஜேஷ் லக்கானி ஆஜராக உத்தரவு!

ஜெயலலிதா கைரேகை வழக்கு: ராஜேஷ் லக்கானி ஆஜராக உத்தரவு!
திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. போஸ் வெற்றிபெற்றதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, ஜெயலலிதா கைரேகை வைத்தது தொடர்பான ஆவணத்துடன் வரும் 24ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2016 மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிகளவில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாகக் கூறி தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் சீனிவேல் வெற்றிபெற்றபோதும் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்பதற்கு முன்னதாகவே உடல்நலக் குறைவால் மரணமடைந்தார்.
இந்த நிலையில் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் 2016 நவம்பர் மாதம் மேற்குறிப்பிட்ட தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தது தேர்தல் ஆணையம்.

தேர்தலின்போது தாக்கல் செய்யப்படும் வேட்புமனுவுடன் படிவங்கள் ‘ஏ’ மற்றும் ‘பி’-யில், வேட்பாளர் எந்தக் கட்சியை சார்ந்துள்ளாரோ, அக்கட்சியின் தலைவரோ அல்லது பொதுச்செயலாளரோ கையெழுத்திட வேண்டும். அவர்கள் கையெழுத்திட்டால்தான் கட்சியின் சின்னத்தைப் பெற முடியும்.
ஆனால், தேர்தல் நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதனால், அதிமுக வேட்பாளர்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் ஏ, மற்றும் 'பி' படிவங்களில், ஜெயலலிதாவால் கையெழுத்திட இயலவில்லை என்றும் அதற்கு பதிலாக கைரேகை வைக்க அனுமதிக்க வேண்டுமென்றும் தேர்தல் ஆணையத்திடம் அதிமுக கோரிக்கை வைத்தது. அதை ஏற்று, அரசு மருத்துவர் முன்னிலையில் கையெழுத்துக்குப் பதிலாக கைரேகை வைக்க அனுமதி கொடுத்தது தேர்தல் ஆணையம். இதன் காரணமாகவே மேற்குறிப்பிட்ட தொகுதிகளின் தேர்தல் அலுவலர்கள், அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்தனர்.
இதைத் தொடர்ந்து, நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக-வைச் சேர்ந்தவர்களே வெற்றிபெற்றனர். மதுரை திருப்பரங்குன்றத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அதை எதிர்த்து போஸுக்கு எதிராக போட்டியிட்ட திமுக வேட்பாளர் மருத்துவர் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் முன்பு நடைபெற்ற விசாரணையில், ‘அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட போஸின் வேட்புமனுவில் ஜெயலலிதாவின் கையெழுத்துக்குப் பதிலாக கைரேகை வைத்துள்ளார். அது முறைகேடாக பெறப்பட்டது ஏற்கக் கூடியதல்ல. இதனடிப்படையில் அதிமுக வேட்பாளர் போஸின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும்’ என்றும் சரவணன் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் மீதான விசாரணை தொடர்ந்து நடந்துவருகிறது. சரவணன் சார்பாக இரண்டு சாட்சிகள் முதல் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை செய்து முடிக்கப்பட்ட நிலையில் நேற்று (ஆகஸ்ட் 11) நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது சரவணன், ‘தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி இந்த நீதிமன்றத்தில் ஆஜராகி திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் போஸின் வேட்புமனுவில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைரேகையிட அனுமதிக்கப்பட்ட ஆவணங்கள் உட்பட 22 ஆவணங்களுடன் சாட்சியம் அளிக்க வேண்டும்’ என்று மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை அதிமுக தரப்பு கடுமையாக எதிர்த்த நிலையில்.. மாண்புமிகு நீதிபதி எதிர்ப்பை ஏற்றுக் கொள்ளாமல் சரவணனின் மனுவை அனுமதித்து, ‘தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எதிர்வரும் 24ஆம் தேதி நீதிமன்றத்துக்கு மேற்குறிப்பிட்ட ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
ராஜேஷ் லக்கானி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்கும்போது ஜெயலலிதாவின் அப்போலோ நாள்கள் பற்றிய மேலும் சில அதிர்ச்சிகள் வெளியாகக் கூடும் என்று அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. மின்னம்பலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக