பசுவை வைத்து நம் நாட்டில் பெரிய அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. பசுவுக்குக் கொடுக்கப்படும் பாதுகாப்பும் முக்கியத்துவமும் சக மனிதர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. பசுக்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் வகையில் சமீபத்தில் நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதனால், மத்திய அரசுக்கு எதிராக மாட்டுக்கறி உண்ணும் போராட்டங்கள் அதிகமாக நடைபெற்றன. கடந்த மே மாதம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பசுக்களைக் காக்கும் நோக்கில் 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவையை அம்மாநிலத்தின் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுர்யா தொடங்கி வைத்தார். ஆனால், அம்மாநிலத்தில் போதிய ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல், பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்தத் தொகுதியான கோரக்பூரில் 5 நாட்களில் 63குழந்தைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூளை வீக்கம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். கோரக்பூர் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து ஐந்துமுறை ஜெயித்த யோகி, சில தினங்களுக்கு முன்புதான் உ.பி. சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்காக, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்தார்.
48 மணி நேரத்தில் இறந்த 30 குழந்தைகளில் பெரும்பாலான குழந்தைகள் பச்சிளம் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாகப் பல குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். மருத்துவமனை நிர்வாகம், ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் நிறுவனத்துக்கு ரூ.67 லட்சம் செலுத்த வேண்டும். ஆனால், அந்தத் தொகையை மருத்துவமனை செலுத்தாததால் அந்நிறுவனம் ஆக்ஸிஜன் உபகரணங்களை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
கடந்த 9 ஆம் தேதி உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அந்த மருத்துவமனையை ஆய்வு செய்தபோது ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்து யாரும் தகவல் தெரிவிக்கவில்லை என அம்மாநில சுகாதார அமைச்சர் சித்தார்த் நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கோரக்பூர் மாவட்ட நீதிபதி ராஜூவ் ரவுட்லா தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தியதில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையின் காரணமாகத்தான் குழந்தைகள் உயிரிழந்தார்கள் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளின் இறப்புக்கு மாநில அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும், குழந்தைகளின் குடும்பத்துக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் எனவும் முன்னாள் முதல்வரும் ,சமாஜ்வாடி தலைவருமான அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
யோகி ஆதித்யாநாத் அரசுக்கு பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
பசுக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் உத்திரப்பிரதேச அரசு பச்சிளம் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கத் தவறியது ஏன் என்று நாடு முழுவதும் கேள்விக் கணைகள் எழுந்து வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக