செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

புதிய கள்ள நோட்டுகள் ரூ.2.55 கோடி!

பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு ரூ.2.55 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இன்றைய (ஆகஸ்ட் 8) மக்களவையின் கேள்வி நேரத்தின் போது இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சரான ஹன்சராஜ் ஜி.அஹிர் எழுத்துப்பூர்வமாகப் பதிலளிக்கையில், “கடந்த ஆண்டின் நவம்பர் மாதம் 8ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் நவம்பர் 9ஆம் தேதியிலிருந்து 2017 ஜூலை 14ஆம் தேதி வரையில் மொத்தம் 23,429 கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவையனைத்தும் மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகளாகும். குஜராத், மிசோரம், மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அதிகளவிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில் மொத்தம் ரூ.1.37 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குஜராத்தைத் தொடர்ந்து மிசோரத்தில் ரூ.55 லட்சமும், மேற்கு வங்கத்தில் ரூ.44 லட்சமும், பஞ்சாபில் ரூ.5.60 லட்சமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கைப்பற்றப்பட்ட மொத்த கள்ள நோட்டுகளின் மதிப்பு ரூ.2.55 கோடியாகும். நாட்டின் எல்லைப் பகுதிகளில் கள்ள நோட்டுகளை எடுத்துச் செல்ல முடியாத வகையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொண்டுள்ளது. இதன் மூலமாகப் பெருமளவில் கள்ள நோட்டுகளைக் கைப்பற்ற முடிந்தது” என்று தெரிவித்தார்  . மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக