புதன், 5 ஜூலை, 2017

Big பாஸ் ...எப்படி உண்கிறோம், படுக்கிறோம் ,குனிகிறோம் , நடக்கிறோம் , சிரிக்கிறோம் , காதலிக்கிறோம் , கலவி கொள்கிறோம் ..


Shalin Maria Lawrence: இந்த நகரத்தின் மக்களுக்கு ஒரு புது தொலைக்காட்சி
நிகழ்ச்சி அறிமுகம் செய்யப்படுகிறது .நூறு நாட்கள், 15 பேர் பிக் பாஸ் அவர்களை பார்த்துக்கொண்டிருக்கிறார் ,கூடவே சேர்ந்து இந்த நகரத்தாரும் பார்த்துகொண்டேயிருக்கிறார்கள் . இந்த நகரத்தின் மக்களுக்கு பிக் பாஸ் அருவருப்பாய் மாறுகிறது . .என்ன இது இன்னொருவர் அந்தரங்கத்தை ஊருக்கு காட்டிக்கொண்டு என்று நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டே முணுமுணுக்க தொடங்கினார்கள் இந்த நகரத்தின் மக்கள் . இந்த நகரத்தில் சில பெண்கள் இருந்தார்கள் .> இந்த நகரத்தில் பெண்ணாய் இன்னும் சில பெண்கள் இருந்தார்கள் .இந்த பெண்கள் தங்களுக்குள் சிரித்து கொண்டார்கள் .பிக் பாஸ் அவர்களுக்கு எத்தகைய ஆச்சரியத்தையும் ,அதிர்ச்சியையும் கொடுக்கவில்லை .
மாறாக இந்த பெண்கள் தங்களுக்குள் கிசுகிசுத்து கொண்டார்கள் .
" நாங்கள் பிறந்ததில் இருந்தே பல ஜோடி கண்கள் எங்களை பார்க்க துவங்கி விட்டன .எங்கள் முதல் அழுகையிலிருந்தே நாங்கள் கண்காணிக்கப்பட்டோம் .நாங்கள் கண்காணிக்கப்படுவதாக நாங்கள் முதல் அடி எடுத்து வைக்கும்போதிலிருந்தே எங்களுக்கு சொல்ல பட்டிருந்தது . எங்கள் முன்னோர்களும் கண்காணிக்கப்பட்டதாகவும் எங்களுக்கு சொல்ல பட்டது .

ஏழு வயதில் எங்கள் பிராக்குகள் சற்றே விலகிய பொது சில கண்கள் எங்களை பார்த்துக்கொண்டிருந்தது .
வயதிற்கு வந்த பின்னே எங்களை கண்காணிக்கும் கண்களின் எண்ணிக்கை பல மடங்காய் அதிகரித்திருந்தது .
பள்ளி சீருடையில் எங்கள் மார்பு தெரியக்கூடாதென்று அந்த கண்கள் எங்கள் கூடவே பள்ளிவரை வந்தது .
நாங்கள் ரெக்கார்ட் நோட்டுகளை வைத்து எங்கள் மார்புகளை மறைக்க வேண்டி அந்த கண்கள் கேட்டுக்கொண்டது .
எங்கள் மாதவிடாய் கறைகளை அந்த கண்கள் மின்னல் வேகத்தில் கண்டுபிடித்தது .கண்கள் சிரித்தது,கண்கள் சிரித்த சத்தம் ஊருக்கே கேட்டது .
நாங்கள் எங்கள் சகோதரங்களோடு சாலைகளில் பேசுவதை கூட அந்த கண்கள் சுட்டெரிக்க பார்த்து சென்றது .
அலுவலகத்தில் கணினியில் வேலை செய்யும் பொழுது துப்பட்டாவை ஓயாது சரி செய்து கொண்டே இருக்க அந்த கண்கள் எங்களை எச்சரித்துக்கொண்டே இருந்தது .
அந்த கண்கள் எங்கள் பின்னழகையும் ,முன்னழகியும் தீவிரமாக கண்காணித்தது எங்கள் ஒழுக்கத்திற்கு ஆதாரமாய் .
அந்த கண்கள் புடவையைமட்டும் பார்க்கவில்லை ,அந்த கண்கள் எங்கள் புடவைக்குள் இருக்கும் உள் பாவாடை ,ப்ரா உட்பட மேட்சிங் ஆக இருக்கின்றதா என்பதை சரி பார்க்கும் அதிகாரத்தை பெற்றிருந்தது .
எங்கள் உள்ளாடையின் சிறு நுனி கூட வெளியில் தெரிந்தாலும் அந்த கண்கள் எங்கள் ஆத்துமாக்களை கொன்று போட்டது .
எங்கள் படுக்கைஅறையிலும் எங்கள் குளியறையிலும் நொடிநேரம் இமைக்காமல் அந்த கண்கள் எங்களையே பார்த்து கொண்டிருந்தது .
நடுநிசி நேரத்தில் ஆள் அரவமற்ற சாலைகளில் தனியே நிற்கும்பொழுது பல நூறு கண்கள் வெறித்து பார்த்துக்கொண்டிருக்கும் .
எங்கள் அந்தரங்கத்தை புசித்து புசித்தே தன் உடல் வளர்த்து கொண்டது அந்த கண்கள் .
எப்படி உண்கிறோம் ,எப்படி படுகிறோம் ,எப்படி குனிகிறோம் ,எப்படி நடக்கிறோம் ,எப்படி சிரிக்கிறோம் ,எப்படி காதலிக்கிறோம் ,எப்படி கலவிக்கொள்கிறோம் ,எப்படி முனங்குகிறோம் ...என்னும் பல எப்படி எப்படிகளை எப்படியெல்லாம் செய்கிறோம் என்பதை யாரோ ஒருவர் பார்த்துக்கொண்டே இருக்கிறார் .
எங்களுக்கென்று அந்தரங்கம் கிடையாது .எங்களுக்கென்று தனிமைகள் கிடையாது .எங்கள் வாழ்வு எப்பொழுதும் பார்த்துக்கொண்டிருக்கும் அந்த சமூகத்தின் கண்களுக்கு அர்பணிக்கப்பட்டதாய் இருந்தது . நாங்கள் எப்பொழுதும் பார்க்கும் அந்த கண்களுக்கு விருந்து படைத்தது கொண்டிருந்தோம் . இந்த நகரத்தின் மக்களுக்கு அது பெரிதாய் தெரியவில்லை .அவர்கள் அதை பற்றி குறைகூறுவதில்லை .
எங்களை பிக் பாஸ் பார்த்துக்கொண்டே இருக்கிறார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக