புதன், 5 ஜூலை, 2017

மோடி.. :இஸ்ரேலுக்கு வருகைதரும் முதல் இந்தியப் பிரதமர்!


BBC :இஸ்ரேலுக்கு அரசுமுறையிலான பயணம் மேற்கொள்ளும் முதல் இந்தியப்
பிரதமர் நரேந்திர மோதி. இந்தப் பயணம், இஸ்ரேலுடனான இந்தியாவின் உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை துவங்கும் என்று நம்பப்படுகிறது.
இந்தியா எப்போதுமே பாலஸ்தீனத்தின் சார்பாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்தபிறகு, அரசின் கொள்கைகளில் குறிப்பிடத்தக்க மாறுதல்களை காணமுடிகிறது.
இஸ்ரேலில் வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய மோதி, தனது பயணம், புதிய பாதையை உருவாக்கியிருப்பதாக கூறினார். இஸ்ரேல் இந்தியாவின் முக்கிய பங்குதாரர் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
 இஸ்ரேலில் பாரதப் பிரதமர் நரேந்திர மோதி ஆற்றிய உரையின் முக்கிய ஐந்து அம்சங்களை பார்க்கலாம்.

 இஸ்ரேல் தடைகளை பொருட்படுத்தாமல் தனக்கான பாதையை தேர்ந்தெடுத்திருக்கிறது. சவால்களையும் வாய்ப்புகளாக மாற்றிய இஸ்ரேலின் சாதனைக்கு இந்தியா வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. 41 ஆண்டுகளுக்கு முன்னர் இதே ஜூலை நான்காம் தேதியன்றுதான், எண்டபே விமான கடத்தல் சம்பவம் நடத்தப்பட்டது. அந்த சம்பவத்தில் இஸ்ரேல் பிரதமர் ராபின், இஸ்ரேலியர்களை காப்பாற்றும் முயற்சியில் தனது சகோதரரை இழந்தார்.
இஸ்ரேல், இந்தியாவின் முக்கிய நண்பர்களின் ஒருவர். சமூகத்தை பாதுகாக்க நாம் ஒருவருக்கொருவர் ஆதரவாக செயல்படுகிறோம். இரு நாடுகளுக்கும் பொதுவான பிரச்சனையாக தீவிரவாதம் திகழ்கிறது. அனைத்துத் துறைகளிலும் முற்போக்கான புரிந்துணர்வின் அடிப்படையில், எனது நண்பரும், பிரதமருமான நெதன்யாகுவும், நானும் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்வோம்.

எனது பயணம் இரண்டு நாடுகளின் உறவில் புதிய பரிமாணத்தை கொண்டுவருவதாக இருக்கும். இஸ்ரேலில் வசிக்கும் இந்திய சமூகத்தினரை சந்திக்க விரும்புகிறேன். பெருமளவிலான இந்திய யூத இனத்தவர்கள், இரு சமூகங்களுக்கும் பெரிய அளவிலான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக