புதன், 26 ஜூலை, 2017

தனிநபர் உரிமை அடிப்படை உரிமையே! மே.வங்கம்,கர்நாடகா,பஞ்சாப், புதுச்சேரி ... உச்ச நீதிமன்றத்தில் ....

மேற்கு வங்கம், கர்நாடகா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களும் புதுச்சேரியும் தனிநபர் உரிமை என்பது அரசியல் சாசனத்தினால் உறுதியளிக்கப்பட்ட அடிப்படை உரிமையே என்பதை நிறுவ உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் முன் மனுதாரர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடினார்.
தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டு தற்காலத்தில் தனிநபர் உரிமை விவகாரத்தை அலச வேண்டும் என்று வாதிட்டார் கபில் சிபல்.
“தனிநபர் உரிமை என்பது முழுமுதல் உரிமையாக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் அது அடிப்படை உரிமையே. இந்த நீதிமன்றம் ஒரு சமச்சீர் நிலைப்பாட்டை எட்ட வேண்டும்” என்றார்.
ஆதார் எண்ணிற்காக பயோமெட்ரிக் விவரங்களை சேகரித்து பகிர்வது அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்று மனுதாரர்கள் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளனர்.

ஜூலை 19-ம் தேதி தனிநபர் உரிமை என்பது பொதுவான சட்ட உரிமைதானே தவிர அடிப்படை உரிமையாகாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.
இதே மத்திய அரசு வாட்ஸ் அப் தொடர்பான இதே விவகாரத்தில் தனிநபர் உரிமை, ரகசியக் காப்பு என்பது அடிப்படை உரிமையே என்று உச்ச நீதிமன்றத்தில் முரண்பாடாக வாதாடியது குறிப்பிடத்தக்கது. tamilthehindu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக