ஞாயிறு, 9 ஜூலை, 2017

ஜி எஸ் டி போர்வையில் திரை அரங்குகள் கொள்ளை அடிக்கின்றன?

tamilthehindu :திரையரங்குகளில் ஜிஎஸ்டி வரியோடு சேர்த்து தற்போது வசூலிக்கப்பட்டு
வரும் டிக்கெட் விலையில் பொதுமக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. சில திரையரங்குகள் இதைப் பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பு கடந்த 1-ம் தேதி அமலுக்கு வந்துள்ளது. திரையரங்குகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டியுடன், 30 சதவீத கேளிக்கை வரியும் வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திரையரங்க உரிமையாளர்கள் 3-ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். 4 நாட்களாக நடந்த போராட்டம் 6-ம் தேதி விலக்கிக்கொள்ளப்பட்டது. திரையரங்குகளில் 7-ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதில் பல குளறுபடிகள் இருப்பதாக மக்கள் கூறிவருகின்றனர். உதாரணமாக, டிக்கெட் விலை ரூ.120 என்றால், அதில் ரூ.90 அடிப்படை கட்டணமாகவும், எஞ்சிய ரூ.30 கேளிக்கை வரி, சேவை வரியாக இருந்தன. இந்த சூழலில், ‘தற்காலிகமாக கேளிக்கை வரி வசூலிக்கப்படாது. டிக்கெட் கட்டணத்தோடு ஜிஎஸ்டி மட்டுமே வசூலிக்கப்படும்’ என்று திரையரங்க உரிமையாளர்கள் தற்போது தெரிவித்துள்ளனர்.
அப்படிப் பார்த்தால், அடிப்படைக் கட்டணம் ரூ.90 மற்றும் அதற்கு 28 சதவீத ஜிஎஸ்டி ரூ.25 என மொத்தம் ரூ.115 மட்டுமே வசூலிக்க வேண்டும். ஆனால், திரையரங்குகளில் அடிப்படைக் கட்டணம் ரூ.120 என்றும், அதற்கு 28 சதவீத ஜிஎஸ்டி என விதித்து மொத்தம் ரூ.153.60 வசூலிக்கப்படுகிறது. அப்படியானால் கேளிக்கை வரியையும் சேர்த்து வசூலிக்கின்றனரா என்று கேள்வி எழுப்புகின்றனர் மக்கள்.
இதுகுறித்து கேட்டபோது, திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் அபிராமி ராமநாதன் கூறியதாவது:
சினிமா டிக்கெட்டில் அடிப்படை விலை என்று எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. அதிகபட்சமாக ரூ.120 தொடங்கி ரூ.100, ரூ.90, ரூ.80, ரூ.50 என்றுதான் டிக்கெட் விலையை அரசு நிர்ணயித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 1,100 திரையரங்குகளில், ரூ.120 கட்டணம் வாங்கும் திரை யரங்குகள் 56 மட்டுமே உள்ளன.
1989-ம் ஆண்டுக்கு முன்பு அரசு நிர்ணயித்த டிக்கெட் விலைக்கு மேல் 6 விதமான பிரிவுகளில் வரி கட்டிவந்தோம். பிரித்துக் கட்டுவது சிரமமாக இருப்பதால் ஒரேமாதிரி வரி விதிக்க வேண்டும் என்று அரசிடம் கேட்டோம். டிக்கெட் விலையை 25 சதவீதம் உயர்த்திக்கொண்டு அந்த விலைக்குள்ளேயே வரி செலுத்துங்கள் என்று அப்போதைய அரசு நிர்ணயம் செய்தது. அதிலும் பின்னாளில் கேளிக்கை வரி வந்த பிறகு, அதற்கும் ஒரு குழு அமைத்து முடிவெடுக்க வேண்டும் என்ற நிலை உருவானது. அந்தப் பேச்சுவார்த்தை இப்போதும் நடந்து வருகிறது.
ஒரு பொருளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல்தான் ஜிஎஸ்டி வரி என்பது எல்லோருக்குமே தெரியும். அந்த அடிப்படையில், அரசு அதிகபட்சமாக நிர்ணயித்த தொகையை அடிப்படையாகக் கொண்டே ரூ.120-க்கான டிக்கெட்டை ஜிஎஸ்டியோடு சேர்த்து ரூ.153.60-க்கு விற்கிறோம். அதேபோல ரூ.90, ரூ.80 போன்ற கட்டணங்களுக்கும் உரிய ஜிஎஸ்டியோடு சேர்த்து வசூலிக்கிறோம். இதை மக்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
அதிக பார்க்கிங் கட்டணம்
திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் திரைத்துறையினரிடம் சில கேள்விகளை சட்டப் பஞ்சாயத்து இயக்கம் முன்வைத்துள்ளது. ‘திரையரங்குகளில் வாகன பார்க்கிங்குக்கு அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூலிக்கப்படு கிறது. தியேட்டர் வளாகத்தில் எம்ஆர்பி விலையைவிட அதிக விலைக்கு உணவுப் பொருட்கள் விற்கப்படுவது ஏன்? வெளியில் இருந்து கொண்டுவரும் உணவுப் பொருட்கள் ஏன் தியேட்டருக்குள் அனுமதிக்கப்படுவது இல்லை?’ என்று கேட்கிறது.
திரையரங்க பார்க்கிங் கட்டணம் எவ்வளவு என்று அரசு இதுவரை நிர்ணயிக்கவில்லை. திரையரங்க உரிமையாளர்கள்தான் அதற்கான கட்டணத்தை நிர்ணயித்துள்ளோம். இதுபற்றிக் கேட்பவர்கள், விமான நிலையங்களில் ரூ.150-க்கு மேல் பார்க்கிங் கட்டணம் வைத்திருப்பது பற்றி ஏன் கேட்பதில்லை? திரையரங்க வளாகத்தில் விற்கப்படும் பாப்கார்ன் உள்ளிட்ட சில உணவுப் பொருட்களை நாங்கள்தான் தயாரிக்கிறோம். அதன் விலையை நாங்கள்தான் தீர்மானிக்க முடியும்.
தண்ணீர் பாட்டில், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை எம்ஆர்பி விலைக்குதான் விற்கிறோம். திரையரங்குக்குள் உணவகம் இருக்கும்போது, வெளியில் இருந்து தயிர் சாதமும், பிரியாணியும் ஏன் கொண்டுவர வேண்டும்? தவிர, அவற்றை உள்ளே வைத்து சாப்பிடுவதால், அடுத்த காட்சிக்குள் திரையரங்க இருக்கைகளை சுத்தம் செய்ய முடியாத நிலையும் ஏற்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ.இளங்கோ கூறியதாவது:
மல்டிபிளக்ஸ் திரையரங்கில் பல இருக்கைகள் கொண்ட திரையரங்கம் அமைக்கும்போது, அதற்கேற்ப பார்க்கிங் வசதிகள் இருக்க வேண்டும். ஆனால், அப்படி இருப்பதில்லை. அந்த வசதிகள் இருந்தாலும், ஒரு மணி நேரத்துக்கு ரூ.40 என 3 மணி நேரத்துக்கு ரூ.120 வசூலிக்கின்றனர். இது நியாயமா?
கூடுதல் கட்டணம்
திரையரங்குகளுக்கு உணவுப் பொருட்கள் எடுத்துவர தடை விதிப்பதில் தவறில்லை. ஆனால், தின்பண்டங்கள், குடிநீர் எடுத்து வரக் கூடாது என்று கூறுவது சரியல்ல. அதில் திரையரங்க நிர்வாகத்துக்கு எந்த பிரச்சினையும் இருக்கப்போவதில்லை. மகாராஷ்டிராவில் கேளிக்கை வரி மூலம் ரூ.800 கோடிக்கு மேல் அரசுக்கு கிடைத்திருக்கிறது.நம் ஊரில் ரூ.100 கோடி மட்டுமே அரசுக்கு கிடைத்திருக்கிறது. இங்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்கப்பட்ட படங்கள் எல்லாம் சமூக சிந்தனையை விதைத்த படங்களும் அல்ல. அப்போது ஏன் அதை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்? தமிழ் அல்லாத பெயர்களை வைத்துவிட்டு, பண்பாட்டை வளர்ப்பதாக பொய் சொல்லிவிட்டு வரிவிலக்கு பெறுகின்றனர். படம் வெளியான முதல் 3 நாட்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். இதைப்பற்றி அவர்கள் பேசுவதே இல்லை. இதற்கு அரசும் துணை நிற்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக