வெள்ளி, 21 ஜூலை, 2017

குட்கா ஊழலை மறைக்கும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ! ( எஸ்.வி. சேகரின் அண்ணி)

குட்கா ஊழல் தொடர்பாக வருமான வரித்துறையினர் தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தலைமை செயலாளர் மறைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்றும், குற்றவாளிகளை காப்பாற்ற அரசு துணை போகிறது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருள் விற்பனையில் ஊழல் நடைபெற்றிருப்பதாகவும், இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். மேலும் அமைச்சர் விஜயபாஸ்கர் பதவிவிலக வேண்டுமெனவும், சட்டப்பேரவையில் வலியுறுத்தினார். இதுகுறித்து சிபிஐ விசாரணை கோரி திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குட்கா ஊழலில் சம்பந்தப்பட்ட டிஜிபி ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்கியதை ரத்து செய்யக்கோரி கதிரேசன் என்பவர், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.
இதற்கிடையே மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நேற்று ஜூலை 20ஆம் தேதி தமிழக தலைமை செயலாளர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில்,'குட்கா விவகாரம் தொடர்பாக கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள், தமிழக அரசுக்கு புகார் கடிதம் அனுப்பியதாக எதிர் மனுதாரர் சார்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் எங்கள் தரப்பு ஆவணங்களை ஆய்வு செய்தபோது, இதுகுறித்த புகார் கடிதம் எதுவும் அரசுக்கோ, அரசின் துறைகளுக்கோ வரவில்லை என்பது தெரியவந்துள்ளது' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் தலைமை செயலாளர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்துக்கு கண்டனம் தெரிவித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,' டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பணி நீட்டிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 'குட்கா ஊழல்'குறித்து வருமான வரித்துறையினர் தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தை தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மறைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் இன்று வெளியிடப்பட்டிருக்கும் கட்டுரையில், 12.8.2016 அன்று வருமான வரித்துறையின் புலனாய்வுதுறை முதன்மை இயக்குநர் பி.ஆர். பாலகிருஷ்ணன் அன்றைய தலைமை செயலாளர் ராமமோகனராவை சந்தித்து 11.8.2016 தேதியிட்ட குட்கா தொடர்பான அறிக்கையை நேரடியாக கொடுத்தார் என்றும், அப்போது தமிழக காவல்துறை தலைவராக இருந்த அசோக்குமாரிடமும் அறிக்கையின் நகலை கொடுத்தார் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் பல ஆதாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
குட்கா ஊழல் தொடர்பான வருமான வரித்துறையின் அறிக்கை தலைமைச் செயலாளரிடம் கொடுக்கப்பட்டதற்கு இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும், டி.ஜி.பி ராஜேந்திரன் நியமனம் தொடர்பான வழக்கில் தலைமைச் செயலாளர் இப்படியொரு நிலைப்பாட்டை உயர்நீதிமன்றத்தில் எடுத்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. குட்கா விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய போலீஸ் அதிகாரிக்கு எப்படி டி.ஜி.பி., பதவி உயர்வு அளிக்க தலைமை செயலாளர் ஒப்புக் கொண்டார் என்பதும் கேள்வியாக இருக்கிறது. ஆகவே குட்கா ஊழல் விசாரணையை லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறையால் சுதந்திரமாக செய்ய முடியாது என்பதற்கு தலைமை செயலாளரின் பிரமாண பத்திரமே வாக்குமூலமாக இருக்கிறது.
குட்கா ஊழல் புகார் பற்றியும், அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள அதிகாரிக்கு டி.ஜி.பி., பதவி உயர்வு வழங்கியதில் உள்ள முறைகேடுகள் குறித்தும் உடனடியாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அப்படியொரு விசாரணை மட்டுமே தடை செய்யப்பட்ட குட்காவை விற்க அனுமதிப்பதற்கு 40 கோடி ரூபாய் லஞ்சம் பெற்று மத்திய அரசுக்கு 250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு முறைகேடுகள் குறித்த முழு உண்மைகளும் வெளிச்சத்திற்கு வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
தமிழ்நாட்டை உலுக்கிய குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி வருமான வரித்துறையிடமிருந்து எந்தக் கடிதமும் வரவில்லை என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தமிழக அரசு தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. மத்திய அரசு நிறுவனத்திடமிருந்து வந்த கடிதத்தை தமிழக அரசு மறைப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
குட்கா ஊழலில் தமிழக அமைச்சர் விஜயபாஸ்கரும்,காவல்துறை உயரதிகாரிகள் சிலரும் சம்பந்தப்பட்டு இருப்பதால் அவர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு வருமான வரித்துறை கடிதம் எழுதியதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி, அதுபற்றி ஒரு ஆங்கில நாளிதழ் விளக்கியிருக்கிறது.
இந்த வி‌ஷயத்தில் தமிழக அரசு மோசடி செய்திருப்பது இன்றைய ஆங்கில நாளிதழ் செய்தி மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இதை தனி வழக்காக விசாரிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, குட்கா ஊழல் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கும் மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஆணையிட வேண்டும்' என்று கூறியுள்ளார்.
குட்கா ஊழல் தொடர்பாக வருமான வரித்துறை கடிதத்தை, ஆதாரங்கள் இருந்தும் தமிழக அரசே மறுத்திருப்பது ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு துணை போகிறதோ என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக