சனி, 8 ஜூலை, 2017

செத்த மொழி சமஸ்கிருதத்தை உயிர்ப்பிக்க மக்களின் பணம் ... வாழும் மொழி செம்மொழியை அழிக்க கங்கணம்

prakash.jp. : செத்த மொழியான, உபயோகமற்ற, பயனற்ற மொழியான சம்ஸ்கிருததுக்கு மத்திய அரசு நூற்றுகணக்கான கோடி ரூபாய்கள் ஒதுக்கி, தன்னாட்சி அதிகாரத்துடன் ஆராய்ச்சி நிறுவனம் அமைத்துள்ள நிலையில், செம்மொழியான, இணையத்தில் அதிகம் புழங்கும் மொழியாக உயிர்ப்புடன் உள்ள தமிழ் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை மூட, மத்திய பிஜேபி மோடி அரசு சதி.....//
தமிழ் மொழியை தேசிய மொழியாக்க, மத்திய ஆட்சி மொழியாக்க, சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க எவ்வித முயற்சியும் எடுக்காத மத்திய பா.ஜ.க., அரசு, இந்தியாவின் பல தேசிய இனமொழிகளைப் பின்னுக்குத் தள்ளி, சமஸ்கிருதத்தையும் - இந்தியையும் மட்டும் பிடித்துத் தொங்கிக் கொண்டு, செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை ஒரு பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இணைத்து, தமிழுக்கு இருக்கும் தன்னாட்சி அந்தஸ்தை சீர்குலைக்க முயற்சி செய்வது, தமிழக மக்களின் தூய உணர்வை கொச்சைப்படுத்துவது மட்டுமல்ல, தமிழறிஞர்களின் நெஞ்சத்தில் ஈட்டி கொண்டு கீறும் செயலுமாகும்.

இந்தித் திணிப்பில் ’மதம்பிடித்த யானை’ போல் அடங்காத ஆர்வத்துடன் செயல்பட்டு வரும் மத்திய பா.ஜ.க., அரசு, செம்மொழியாம் அன்னைத் தமிழ் மொழிக்கு தீங்கு விளைவிக்கும் காரியங்களிலும் ஈடுபட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடுமென்று எச்சரிக்க விரும்புகிறேன். தமிழைக் குறைத்து மதிப்பிட்டு, மட்டம் தட்டும் தரக்குறைவான காரியத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது, தமிழ் மொழி மீது மத்தியில் உள்ள பா.ஜ.க., அரசுக்கு இருக்கும் தீராத காழ்ப்புணர்ச்சியையும் பாகுபடுத்தும் துவேஷ மனநிலையையும் வெளிப்படுத்துகிறது.
ஆகவே, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை திருவாரூர் மத்திய பல்கலைக் கழகத்திற்கு மாற்றும் முயற்சியை மத்தியில் உள்ள பா.ஜ.க., அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மத்தியில் உள்ள பா.ஜ.க., அரசும், அதற்கு மறைமுகமாக திரைமறைவில் உதவும் அ.தி.மு.க.,வின் ’குதிரை பேர அரசும்’ செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் தன்னாட்சித் தகுதியை சூறையாடும் போக்கில் செயல்படுவதை நிறுத்திக் கொண்டு, இந்நிறுவனம் முழுநேர இயக்குநர் மற்றும் முழு நிதியுதவியுடன், தமிழாராய்ச்சிப் பணிகளில் தன்னாட்சி அதிகாரத்துடன் தொடர்ந்து ஈடுபடுவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்..
மைசூரில் இருந்து போராடிப் பெற்று வந்த செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை, குறிப்பாக, தன்னாட்சி அமைப்பாக செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தை திருவாரூரில் உள்ள மத்தியப் பல்கலைக் கழகத்தில் ஒரு துறையாக மாற்றுவதை, எக்காரணம் கொண்டும் தமிழர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. மத்திய அரசின் இம்முயற்சியை தமிழ்கூறும் நல்லுலகம் நிச்சயம் மன்னிக்காது.
-- திமுக செயல்தலைவர் ஸ்டாலின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக