சனி, 29 ஜூலை, 2017

குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விவகாரம்: முடங்கியது மாநிலங்களவை!

எம்.எல்.ஏ. விவகாரம்: முடங்கியது மாநிலங்களவை!
minnambalam : நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கை முற்றிலுமாக முடங்கியது.
ஜூலை 28ஆம் தேதி நேற்று காலை மக்களவை கூடியபோது, கேள்வி நேரத்துக்குப்பிறகு, தொழிலாளர் ஓய்வூதியம் தொடர்பான தனிநபர் தீர்மானத்தின்மீது நடைபெற்ற விவாதத்தின்போது தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா பேசுகையில், “1995ஆம் ஆண்டு கொண்டுவந்த தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தை ஆய்வு செய்து சீரமைப்பதற்காக உயர்மட்டக் குழு அமைக்கப்படும். இந்தக் குழுவானது, ஓய்வூதிய திட்டத்தின் ஒவ்வோர் அம்சத்தையும் ஆய்வு செய்து, சீரமைப்பு தொடர்பான பரிந்துரைகளை வழங்கும். அதன் அடிப்படையில், 58 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் ஓய்வூதியத் திட்டம் சீரமைக்கப்படும்.
தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அனைத்து பென்சன்தாரர்களுக்கும் மருத்துவப் பயன் வழங்கப்படும். புதிய சீரமைக்கப்பட்ட பென்சன் திட்டம் நடைமுறைக்கு வரும்வரையில், குறைந்தபட்ச பென்சன் 1,000 ரூபாய் என்ற நிலையில் இருக்கும்” என்று கூறினார்.
அதன் பின்னர், தனியார் பங்களிப்புடன் கூடிய ஐ.ஐ.எம்-களில் பட்டம் அளிக்கும் அதிகாரம் வழங்குவது மற்றும் கூடுதல் தன்னாட்சி வழங்குவது தொடர்பான சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஆதரவு அளித்ததையடுத்து அந்த மசோதா நேற்று நிறைவேறியது. மசோதா குறித்து, மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசுகையில், “அதிகக் கட்டணம் கட்ட முடியாததால் எந்த ஒரு மாணவரும் படிப்பை நிறுத்தி விடக்கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
நாடு முழுவதும் தனியார் பங்களிப்புடன் கூடிய ஐ.ஐ.எம்-கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஐ.ஐ.எம்-களுக்கு பட்டம் அளிக்கும் அதிகாரம் தொடர்பான மசோதாவை மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்தது. மத்திய அரசின் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையாகும். வரும் காலங்களில் இந்தி மற்றும் மற்ற மொழிகளில் ஐ.ஐ.எம்-களில் பாடம் நடத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று கூறினார்.
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை நேற்று காலை வழக்கம்போல் கூடியபோது, அவை துணை தலைவர் பி.ஜே.குரியன் அவையை தொடங்கி வைத்தார். அப்போது எதிர்க்கட்சி தலைவரான குலாம்நபி ஆசாத் மற்றும் துணைத் தலைவரான ஆனந்த் சர்மா ஆகியோர், குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கடத்தப்பட்டது தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால், உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்கத் துணை தலைவர் மறுத்துவிட்டார். இதையடுத்து, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வை பாஜக திருடிவிட்டது என்றும் பாஜக-வினர் ஜனநாயகத்தைக் கொலை செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் கோஷமிட்டனர். இதனால் அவையை அரை மணி நேரம் ஒத்தி வைத்தார்.
அதன் பின்னர், நான்கு முறை ஒத்திவைக்கப்பட்டு அவை மீண்டும் கூடியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷமிட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதுகுறித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் கூறுகையில், “குஜராத் மாநிலத்தில் வியாரா தொகுதி எம்.எல்.ஏ. பூனாபாய் காமித் என்பவரை போலீஸார் திட்டமிட்டே பொய் வழக்கு போட்டு கைது செய்துவரும் நடவடிக்கைக்கு பாஜக-வினர் பதில் சொல்ல வேண்டும்” என்று தெரிவித்தனர்.
ஆனால், காங்கிரஸாரின் குற்றச்சாட்டுக்கு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் மறுப்பு தெரிவித்து பேசுகையில், “காங்கிரஸின் குற்றச்சாட்டு தவறானது. எம்.எல்.ஏ.-க்களை கடத்த வேண்டிய அவசியம் பாஜக-வுக்கு இல்லை” என்று தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, மாநிலங்களவை துணைத் தலைவர் குரியன், காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சி உறுப்பினர்களை இருக்கைக்குச் சென்று அமரும்படி தெரிவித்தார். ஆனாலும், அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மதியம் 2.30 மணிவரை அவையை ஒத்தி வைத்தார். அதன்பின், அவை மீண்டும் மதியம் கூடியபோது, குஜராத் எம்.எல்.ஏ. விவகாரம் தொடர்பாக காங்கிரஸார் கூறிய கருத்துகளுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று பாஜக உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷம் எழுப்பினர். அப்போது, காங்கிரஸ் உறுப்பினர்களும் பதிலுக்குக் கடும் அமளியில் ஈடுபட்டதால் துணைத் தலைவர் குரியன் அவையை நாள் முழுவதும் ஒத்தி வைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக